lørdag 17. februar 2018

பணங்கா வாடி

பணங்கா வாடி 

கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும்,
புளிச்ச வாசத்தில் வண்டுருளும், 
வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, 
அருவா கத்திய துணைக்கு வச்சு
சனஞ்சிலது வனம் விரையும்!

திருந்தாதி அடிக்கும் முன்ன
பனங்கா வேட்டை தொடங்கி விடும்,
பழைய சரமும் கிழிஞ்ச துண்டும்
சும்மாடா மகுடம் தரிக்கும்!
சார ஓலையில் பல்லுக் குத்தி
சக்கரக் கட்டி தேத்தனி ஊத்தி,
விடியும் முன்னே விடியல் தேடி
பெண்கள் கூட்டம் பஞ்சா பறக்கும்!

நடுக்குடாவும், புட்டிப்பாடும்
இரைச்சல் சத்தத்தில் தூக்கம் கெடும்!
சாமக் காத்து ஊர்கதைய
விடியும் வரை பேசித் தீர்க்கும்!
தொப்பி கழன்டு விழுந்த பின்தான்
பனம் பழமும் பல்லக்கு ஏறும்!

விழுந்து பிளந்தா பாத்திக்கு,
பழுத்து விழுந்தா பினாட்டுக்கு
என தனி தனியா தத்துவம் பிறக்கும்!

 மண்ணில் பனங்கா உருண்டிருந்தா
எடுக்க நூறு பக்குவம் இருக்கும்!

தேனி போல நடைய கூட்டி
பனங் கொட்டைய மலையா குவிச்சு,
பங்கு பிரிச்சு வெயிலில் போட்டா
வெறகு போல காஞ்சு வரும்!
அத தலையில் போட்டு வீடு வர
கிறு கிறு னு தலை விரைக்கும்!

மாட்டு வண்டில ஓல கட்டி,
கிடுகு பொட்டில பனங்கா தூக்கி,
மூனு நடை போயி வந்தா
முதுகுத் தண்டு கடுகடுக்கும்!
பாத்தி வெட்டி, கிழங்கு போட்டு,
பினாட்டு களிய பாயில் ஊத்தி,
காக்கா விரட்ட இறகு கட்டினா
கால் வயிறும் பசி எடுக்கும்!

காய்ச்சி குடிச்ச கஞ்சித் தண்ணி,
கழுவி வடிச்ச பனங்காய் தண்ணி,
அரிக்கஞ் சட்டியின் அடியில் கெடக்கும் ! 

அடுப்படியில் பணியார வாசம்
அடுத்த வீட்டு கதவ தட்டும்!

பினாட்டு சுமந்த ஓலபாய் தான்,
குடிச வீட்டின் சொகுசுக் கட்டில்!
பரட்ட தலை பாட்டி ஒன்னு,
சீவல் ஒடியல் கிளங்கு வெட்டும்!
ஒடியல் மாவில் புட்டவிச்சு,
போலப் பெட்டில பினாட்ட வச்சு,
கிடுகுப் பெட்டிக்குள் ஒடியல் வச்சா,
கடகப் பெட்டியும் கமகமக்கும்!

பனைய வச்சு பழச நினைக்க
பயித்தியமே பிடிக்கு தென்டு ,
பழைய கிழவி சொல்லும் போது
பகட்டு இலிப்பு இழிச்ச நாங்க ,
இப்ப பனம் பழத்த தேடி போறோம்
பன தறிச்ச காட்டுக்குள்ள...!

இருக்கிறப்போ இனிக்க திண்ணோம், 

இருக்க இடம்னு பனைய கொன்னோம்! 
எனக்கு தெரிஞ்ச ஒடியல் வாசம்,
என் தலைமுறையில் மறஞ்சிடுச்சே? 

பனங்காட்டு பருவமழைய
பதம் பார்த்து சொன்னவுக,
படுத்த கிடையா கெடப்பது போல்
பேசால சனத்து நெஞ்சில்
பனை உணவு படுத்திருச்சு,
பலநோய்கள் குவிஞ்சிருச்சு....!


# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar