mandag 5. februar 2018

திசை மாற்றும் காதலே! குறுங்கதை எழுதியவர் கவிதையின் காதலன் பேசாலை


திசை மாற்றும் காதலே! குறுங்கதை

அவளுக்கு தெரியும் இப்படித்தான் நடக்கும் என்று, ஒவ்வொரு முறையும் நுகரும் அதே ஆடையும், தேனீர் கிண்ணமும் ஏமாற்றத்தைக் கடந்து வாழ்வின் புரிதலை புலப்படுத்தி விடுகின்றது. 

பணபோக விளைச்சல் நிலமாம், திருமணத் தேடலில் அலங்காரங்கள் என்பது மேடைக்கானது மட்டுமல்ல, பெண் பார்க்கும் படலத்துக்கும் தான்.

பணம், குடும்பம், நிறம், உயரம், உடல்வாகு, மூக்கு, என பல கோணங்களில் நிராகரிக்கப்பட்ட இவள் இம்முறை சந்தித்தது சற்று வித்தியாசச் சிக்கல் ஒன்று.

பள்ளி காலத்து எச்ச மொன்று மிச்சமாய் வளர்ந்து நின்று பதம் பார்க்கும் என்றும் சற்றும் எதிர் பாராது நொடிந்து போகிறாள்.

சட்டென்று மாறிய வானிலை, வகுப்புக்குள் தோழிகளுடன் மாட்டிக் கொண்ட பொழுது, அடைமழை மண்னைத் துவசம் செய்ய, புழுதிக் காற்றில் மூக்கைப் பொத்தியவளுக்கு, வலிப்பு தொற்றிக் கொள்ள சுருண்டு வீழ்ந்து மீனைப் போல் துடிக்கிறாள்.

சமகாலத்து தோழிமார் என்பதால் புரிதலை அறியாது ஓட்டம் பிடிக்க, ஐயோ வாங்களேன் என்ற குரல், கண் மங்கி கிடந்தாலும் தாஸின் உருவம் மட்டும் நிழலாடி பிம்பமாய் தொடர்கிறது . உலோகக் கோலை கையோடு பொத்தி அழுத்திக் கொண்டு அவனும் அழுவதை கண்ணீர் துளிகள் முனகிச் செல்கின்றன.

அன்று முதல் இனம் புரியா கழிப்பு, பஞ்சு மேகத்தில் தேகத்தை நீட்டிப் படுத்த சுகம், மனப் படபடப்புக்களில் ஏக்கக் காற்று குளிர்மையைத் தூவிச் செல்ல, அலையாய் ஓங்கி அமிழ்கிறது அவளின் காதல் பூத்த இதயம்.

வகுப்பின் தலைப்புச் செய்திகளை அலங்கரித்ததோடு, வீட்டிலும் வாக்கியப் போரை எதிர்கொண்டு, ஈழப் போராய் தொடர்ந்து முடிவற்று நிற்கிறாள்.

தாஸ் சமூகத்தில் ஒழுக்க சீலன், கோவிலில் இரண்டாவது குரு, காலைச் செபமாலை முதல் இராச் செபம் வரை ஒலி வாங்கி இவன் குரலைத் தவிர எதையும் உள்வாங்காது, இருப்பினும் வீட்டில் வலுவான ஒர் எதிர்ப்புக் கொடி . 

காதலுக்காக சமூகப் பணியில் நேரத்தை செலவிட்டும் பயணின்றி, மெல்லக் கவிழும் படகாய் சாந்து செல்கிறது இருவர் காதலும்... 

ஓலை வீட்டில் திடீரென ஓர் வெளிச்சம், உயர் ரக மகிழூந்துகள் படையெடுக்க உறவினர் வருகையில் திக்குமுக்காடியது அவளின் வீடு. தினம் தரிசித்த சிலையடிச் சந்தி காற்று வாங்க மூன்று நாள் கழித்து பட்டாடையில் காட்சி தருகிறாள் காவியத் தலைவி..

வாடிய பயிர்கள் நீர் பாசனத்தை நுகர்ந்தது போல புதிய செழிப்பு, பணத் தோரணை மெருகேறவே சற்று கர்வப் பார்வையும் புருவங்களில் தோற்றம் பெற, ஏறெடுக்க கண்களின்றி தாஸைக் கடந்து செல்கிறாள்.

வடலிக் கருக்கு வயிற்றைக் கிழித்த வலியோடு, மார்பை அடித்து மண்டையை பிடித்துக் கொண்டு கடற்கரை வாடியை தற்காலிக குடிலாக்கி தஞ்சம் புகுந்தான். 

வயதை மீறிய பகுத்தறிவு என்பதால் காதல் மூங்கில் முறிந்து போனதை உய்த்துணர்ந்து கொள்கிறான். கல்வியை புறக்கணித்து கடல் தொழிலில் கற்கையை தொடங்குகிறான்.

வெளிநாட்டவர் வாடை மறையும் வரை காதலுக்கு தற்காலிக விடுமுறை விட்டவள் நிரந்தர முறிவுக்கு தருணம் பார்த்து நிற்கிறாள். 
அன்றொரு நாள் சிலையடியில் ஒர் கறுப்பு உருவம், கணவாய் மையுடையில் வர ச்சீ.. இவனா என கண் முன்னே செய்கையில் புறக்கணித்து கணினி அறைக்கு முகம் பார்த்து கதைக்க விரைகிறாள்.

கால ஒட்டத்தில் தான் பார்த்த அதே தராதரம் அவளுக்கு எதிரியாய் வந்து நிற்க, அன்றிலிருந்து அவளின் பெண் பார்க்கும் படலம் தொடர் கதையாகிறது.

இன்று பெண் பார்க்க வந்தவர்கள் தாஸின் குடும்பத்தார் தான், ஆனாலும் இது தாஸின் அண்ணனுக்கான தேடல். எல்லாம் சரியானது, சீதனம் கூட இரு வீட்டாரையும் திருப்திப் படுத்த ஓர் கேள்விக்கு மட்டும் பிரளயத்தில் சூரையாடப்பட்ட வெறுமை நகரமாக மெளனித்து நிற்கிறாள்.

அருகில் வந்த தாஸின் அண்ணன் காதுக்குள் முனுமுனுக்கிறான்....
உன்னை பெண் பார்க்கச் சொன்னது இந்த காதல் தோல்விக்காரப் பய தாஸ் தான் என்று....
கண்ணீரில் முகம் நனைய கட்டிலில் சுருண்டு அழ , வலிப்பு தொற்றிக் கொள்கிறது. இம்முறை இரும்புக் கோலுடன் தாஸின் அண்ணன் கண்ணீரில் மருந்தளிக்கிறான்...


கவிதையின் காதலன்..

Ingen kommentarer:

Legg inn en kommentar

பேசாலை நாயகியே!

பேசாலை நாயகியே…  2009களில் வெளிவந்த காணொளி… நடிகர்களாக – விஜய், பிரியங்கா… பாடகராக – மகிந்தகுமார் இசை ஒருங்கிணைப்பு – C. சுதர்சன் பாடல்வரிக...