onsdag 21. februar 2018

தூரத்து மின்மினிகள்.... !

தூரத்து மின்மினிகள்.... !
காலக் கணக்குகளின் 

விதிமுறை மீறல் இது !
உள்ளக் கிடங்கின் 
காதல் ஆழங்களை
காலங்கள் தொட்டு
விளையாடுவது ஏனோ!
காத்திருப்பை
கடிகார முள்ளாக்கி
எண்ண ஓட்டத்தில்
சுழலச் செய்வது நீதியோ?

உன் நினைவுத் தரிப்பிடம் நான்
நிறுத்தாமல் கடக்கும்
தொடர்வண்டியாகிறாய்!
திரும்பிப் பார்த்தால்
புன்னகைக்கும்
வாழ்க்கைக் குறிப்பு என்னை
பயணச் சீட்டாய்
பயன்படுத்தி எறிகிறாய்!
வழிப்போக்கன் என் பயணத்தில்
வேதனைக் காற்றால்
வெப்பம் சொரிகிறாய்!
தூரத்து மின்மினிகளை
தொடத் துடிக்கு போராட்டம்!
இரவின் கைகளாய்
மறைந்து நிற்கிறேன்,
வெளிச்சம் காட்டி என்னை
ஏமாற்றிச் செல்கிறாய்!
காதலெனும் தேன் கூட்டை
தீப்பந்தம் காட்டி
உருகச் செய்கிறாய்!
நாதியற்ற நாட்டவன் நான்
ஆயுதப்போர் தொடுத்தல்
அறமோ சொல்?
என் கனவுக் கோட்டைக்கு
செங்கல் சுமக்கிறேன்.
தாகம் தணிக்க
கானல் நீ்ர் தருகிறாய்!
அலங்கார மாளிகையில்
அலங்கோலக் கோடு வரைகிறாய்!
கற்பக் கிரகத்தில்
காதலைக் குடிவைக்கிறேன்
பறவை எச்சமாய்
சிலையில் வலிகள் இடுகிறாய்.!
என்னால் மட்டும் உணரக் கூடிய
என் வலிகளை
உன் கண்ணால்
உணர்வது எப்போது?
நமக்குள் தூரம்
அதிகம் என்பதால்
ஏக்கக் குறிகளை
தூது அனுப்புகிறாயா?
கடல் தாண்டித்
தூரம் நின்கிறேன்
வண்டைத் தூதனுப்பி
வதைக்காதே!
தாழமுக்க வேதனைக்கு
அடை மழையைப்
பரிசளிக்காதே!
மூழ்கும் சிற்பி நான்,
முத்தெடுக்க வா !
இல்லை அலையாய் மாறி
என்னைக் கரை சேர்!
நம் காதல்
கரை சேரும் நாள் தான்
என் உள்ளக்கிடங்கில்
பற்றி எரியும் தீ அணையும்.....!
# கவிதையின் காதலன்.

tirsdag 20. februar 2018

திண்ணை வீடு

தென்னைமரக் காற்றும்,
தெம்மாங்குப் பாட்டும்!,
தென்றலின் வருடலும்,
தெவிட்டாத மெட்டுக்களும்!,
தெய்வீகத் துளசியும்,
தெய்வமே இவ்வீட்டிலும்!,
அழையா விருந்தாளியான,
வெண்ணிலாவின் வருகையும்!,
மங்களக் கொண்டாட்டங்களும்,
அடிக்கடியே வந்துபோகும்!,
திருவிழா விழாக்கோலமாக,
தினமும் சமையல்சாதம்!,
தேனிக்களின் கூடுபோலே,
சின்னச்சின்னக் குடும்பமாய்!,
மகிழ்ச்சிகளின் மணிமகுடமாய்,
மலர்ந்திடும் வீடுகளாமே!
CROOS.A.H

தானாய் விரையும் கால்கள்.....!

தானாய் விரையும் கால்கள்.....!

கருக்குவாச்சி காட்டுக்குள் 
பொடி நடை போகிறேன்.!
செயலிழந்த துணைக்கோள் 

மட்டும் கூட வருகிறது..!
அந்தி பூத்த நேரமிது
குங்குமம் தூவிய வானம்
என் முகத்தில் சற்று
வர்ணக் கலவை பூசி இருந்தது..!

என்னுடன் கவி புணைய
கற்பனைக் கோலும்
எண்ணத்தாள்கள்
மட்டுமே இருக்கின்றன..!
இடுப் பொடிந்த
இலைச் சருகுகள்
என் பாதக் காவலன்!
குவளைத் தண்ணீராய்
தெளிந்த நீரோடையில்
கால் பதிக்கிறேன்.!
அறிவிப்பின்றி குளிர்மை
என் கால்களை கற்பழிக்க
விறைத்த தேகத்தோடு
இன்பச் சுகத்தில் மிதக்கிறேன்.!

இயற்கை மனிதனைப் புனருகையில் இத்தனை சுகங்களா ?
சுதாகரித்துக் கரை சேர்கிறேன்!

எங்கோ கேட்ட ராகம் ஒன்று
செவிப்பறையை உரச
தனிமை உணர்வில்,
இனிமை பூசி இசையை ரசிக்கிறேன்!
குயிலின் குருநாதத்தில்
குருவி இசைச் சமர் செய்வதை
நான் கேட்கிறேன்!
ஓசைக் காற்றின் ஒய்யாரங்களைச் சுவைக்காதவன்
வாழ்ந்தென்ன பயன் ?
என மனதுள் மனிதத்தைக்
கடிந்து கொள்கிறேன்.!

மூச்சிழுத்துப் பார்க்கிறேன்
நுரையீரல் வரை
ஈரக்காற்று போய் வருகிறது.!
எண்ண அலைகளில்
ஏதோ ஒரு தித்திப்பு!

சிற்சில விலங்குகளின் நடமாட்டம்
கண்ணில் தென்படுகிறது!
அந்த மான் கூட்டம் சாந்தமாய்
ஊர்வலம் நடத்துவது ஏனோ?
பதாதைகளும், இரைச்சலும்
இல்லாத பேரணிகள்
இப்படித்தான் இருக்குமோ?
சந்தேகக் கேள்விகளை
உள்ளுக்குள் தொடுக்கிறேன்.!
பகுத்தறிவு இல்லாத மனிதன்
நன்றாய் இருந்திருப்பானோ?
கேள்விக் கணைகளுடன்
மெல்ல நகர்கிறேன்!

அந்த மலை முகடுகளில்
மேகப் பாய்களை
விரித்து வைத்தது யார்?
காற்று கூட மலையின் அடியில்
கட்டி வைக்கப்பட்டுள்ளதா?
என வினவுகிறேன்!
மேகத்தை மோகம் கொள்ள
காற்றுக்குத் தடை போட்டவனை
சுற்றிலும் தேடுகிறேன்!
பதில் கிட்டாத கோவத்தில்,
சாயம் போன மேகங்களுக்கு
விடுமுறை தான் இல்லையோ?
என இயற்கையை
கடிந்து கொள்கிறேன்.!

சல சலத்த ஓடை வழி,
அதன் தாய் குளத்தை அடைகிறேன்.!
பசுமைத் தொட்டியில்
மேகம் தண்ணீர் இறைத்து
மூன்று நாள் தான் ஆகிறது,
புது தேகத்தில்
சூரியக் கதிர் உடை அணிந்து
நிசப்தப் பொய்கையாய்
நீர்த்தாய் காட்சி தருகிறாள்.!

மெல்லிசைக் காற்று
காதை உரச
சிந்தை இயற்கையை வைத்து
பிரம்மிப்புக் கோலம் தீட்டுவதை உணர்கிறேன்.!

என்னை யாரோ தொடுவதாய்
மெல்லத் திரும்புகிறேன்.!
தென்னை இலையின் கீற்று
குளத்தில் ஏதோ கிறுக்குகிறது.!
என்னை அறியாமல் அவ்விடம் விரைகிறேன்.!

பொன்னிறக் குளத்தில்
மேகங்கள் மட்டும்
முகம் நனைத்து நீராடுகிறது.!
காலப் பெருவெளியில் நாம்
தொட்டுணராத தருணங்களை
தனிமை தான் உணர்த்தும்,
இவற்றை குழம்பிய மனதுடன்
தெளிந்த ஓடையில் காண்கிறேன்.!

என் உஷ்ண தேகத்தை குளிர்விக்க 

இயற்கையால் மட்டுமே முடியும்
என முடிவுரை வரைகிறேன்!
வீட்டை நோக்கி விரைகிறேன்!
இப்போது துணைக்கோள்
துணிவு பெறுகிறது.!
வெளிச்சத்தை பிரசவிக்கிறது.!
காலம் வரும் காத்திரு என்ற
தத்துவத்தை
உள்வாங்கிக் கொள்கிறேன்!

மனதின் இருண்ட கேள்விகளுக்கு
தனிமை எப்படி விடை சொல்லிற்று
என்ற வியப்பில்
நடையைக் கட்டுகிறேன்.!

இப்போது என்னுள் மண்டிய முடிவிலிகளுக்கு
விடைகள் கிடைத்தாயிற்று!
விடியலைத் தேடி
கிழக்கு நோக்கி
வேகத்தைக் கூட்டுகிறேன்.!
இப்போது தானாய்
விரைகிறது என் கால்கள்....!


# கவிதையின் காதலன்.

mandag 19. februar 2018

தேர்ந்தெடுத்த தெய்வம்....

தேர்ந்தெடுத்த தெய்வம்....
விழி நிறைந்து மனமுடைந்து
தளர்ந்து போகிறேன்,
இருள்கள் மூடும் வழிகள் எங்கும்
கடந்து போகிறேன்!
காவலாக யாரும் இல்லா
கானகத்து சாலையில்
காற்றின் ஊடே என் நேசதேவன்
காத்து கொள்கிறார்!
மோக வாழ்வில் தாகம் கொண்டு
பாவம் நான் செய்கிறேன்!
பாவி என்னை தேடி வந்து
பாசம் ஏன் கொள்கிறீர்?
ஆசையென்னும் பேரொளியை
தேடிப் போகிறேன்,
ஆத்ம தேவன் நாடி வந்து
என்னை மீட்கிறீர்!
கடிகார முள்ளாய்
உம்மைப்பிரிந்தாலும்
ஒரு புள்ளியில்
எனை அணைக்கிறீர்!
கரும்புகையாய் என் பாவங்கள்,
மேகமாய் உள்வாங்கி - என்னுள்
அன்பு மழையை பொழிவிக்கிறீர்!
 பாலைவனப் பூச்செடி என்னை
உம் தோட்டத்து மலராக மாற்றுகிறீர்! 
கூலாங்கல் நான்,
உம் கவனின் ஆயுதமாக்கி
உறையில் போடுகிறீர்!
உறைந்த பனிபாறை நான்
வெயிலாய் என்னை உருக்கி
உம் கருணைக் கடலில் ஏந்துகிறீர்! 
நெல்மணிக் குவியலில்
பறவையின் அலகு போல்
என்னை தேர்ந்து ஏற்றுக் கொண்டீர்!
உம்மைப் போல பிரியாத ஒருவர்
என்னோடு இருக்கையில்
பிரிவைத் தரும்
பொருளைத் தேடி
நான் ஏன் செல்ல வேண்டும்!
#
கவிதையின் காதலன்.

lørdag 17. februar 2018

பணங்கா வாடி

பணங்கா வாடி 

கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும்,
புளிச்ச வாசத்தில் வண்டுருளும், 
வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, 
அருவா கத்திய துணைக்கு வச்சு
சனஞ்சிலது வனம் விரையும்!

திருந்தாதி அடிக்கும் முன்ன
பனங்கா வேட்டை தொடங்கி விடும்,
பழைய சரமும் கிழிஞ்ச துண்டும்
சும்மாடா மகுடம் தரிக்கும்!
சார ஓலையில் பல்லுக் குத்தி
சக்கரக் கட்டி தேத்தனி ஊத்தி,
விடியும் முன்னே விடியல் தேடி
பெண்கள் கூட்டம் பஞ்சா பறக்கும்!

நடுக்குடாவும், புட்டிப்பாடும்
இரைச்சல் சத்தத்தில் தூக்கம் கெடும்!
சாமக் காத்து ஊர்கதைய
விடியும் வரை பேசித் தீர்க்கும்!
தொப்பி கழன்டு விழுந்த பின்தான்
பனம் பழமும் பல்லக்கு ஏறும்!

விழுந்து பிளந்தா பாத்திக்கு,
பழுத்து விழுந்தா பினாட்டுக்கு
என தனி தனியா தத்துவம் பிறக்கும்!

 மண்ணில் பனங்கா உருண்டிருந்தா
எடுக்க நூறு பக்குவம் இருக்கும்!

தேனி போல நடைய கூட்டி
பனங் கொட்டைய மலையா குவிச்சு,
பங்கு பிரிச்சு வெயிலில் போட்டா
வெறகு போல காஞ்சு வரும்!
அத தலையில் போட்டு வீடு வர
கிறு கிறு னு தலை விரைக்கும்!

மாட்டு வண்டில ஓல கட்டி,
கிடுகு பொட்டில பனங்கா தூக்கி,
மூனு நடை போயி வந்தா
முதுகுத் தண்டு கடுகடுக்கும்!
பாத்தி வெட்டி, கிழங்கு போட்டு,
பினாட்டு களிய பாயில் ஊத்தி,
காக்கா விரட்ட இறகு கட்டினா
கால் வயிறும் பசி எடுக்கும்!

காய்ச்சி குடிச்ச கஞ்சித் தண்ணி,
கழுவி வடிச்ச பனங்காய் தண்ணி,
அரிக்கஞ் சட்டியின் அடியில் கெடக்கும் ! 

அடுப்படியில் பணியார வாசம்
அடுத்த வீட்டு கதவ தட்டும்!

பினாட்டு சுமந்த ஓலபாய் தான்,
குடிச வீட்டின் சொகுசுக் கட்டில்!
பரட்ட தலை பாட்டி ஒன்னு,
சீவல் ஒடியல் கிளங்கு வெட்டும்!
ஒடியல் மாவில் புட்டவிச்சு,
போலப் பெட்டில பினாட்ட வச்சு,
கிடுகுப் பெட்டிக்குள் ஒடியல் வச்சா,
கடகப் பெட்டியும் கமகமக்கும்!

பனைய வச்சு பழச நினைக்க
பயித்தியமே பிடிக்கு தென்டு ,
பழைய கிழவி சொல்லும் போது
பகட்டு இலிப்பு இழிச்ச நாங்க ,
இப்ப பனம் பழத்த தேடி போறோம்
பன தறிச்ச காட்டுக்குள்ள...!

இருக்கிறப்போ இனிக்க திண்ணோம், 

இருக்க இடம்னு பனைய கொன்னோம்! 
எனக்கு தெரிஞ்ச ஒடியல் வாசம்,
என் தலைமுறையில் மறஞ்சிடுச்சே? 

பனங்காட்டு பருவமழைய
பதம் பார்த்து சொன்னவுக,
படுத்த கிடையா கெடப்பது போல்
பேசால சனத்து நெஞ்சில்
பனை உணவு படுத்திருச்சு,
பலநோய்கள் குவிஞ்சிருச்சு....!


# கவிதையின் காதலன்.

fredag 16. februar 2018

கல் முகட்டில் காருண்ய தெய்வம்.....!

கல் முகட்டில் காருண்ய தெய்வம்.....! 
கவிதையின் காதலன் பேசாலை
கல்வாரி மாமலையில்
மேகத் தோழர்களின்
இரங்கல் கூட்டம்!
கொடுமுடிக் குன்றின்
தேவயாத்திரைக்கு
சோக கீதங்கள் பாட
கண்ணீரோடு விரைகின்றன!
முள்முடிக் கிரீடம் அணிந்து,
அன்பரசர் செல்கையில்,
அடர் வனங்கள் வாடும்,
புட்கள் முகாரி ராகம் பாடும்!
வியர்வைத் துளிகள்
வழியில் வீழ்ந்து
வரள் நில மலையை
பசுமை வனமாய் மாற்ற,
பாரச் சிலுவை தூக்கி
தேவமகன் செல்கிறார்!
பாவம் பட்டு சிதைந்த நாவாய்,
வதைக் கடல் சுழலில்
சிக்கி நகர்ந்திடும் வேளையில்,
மானுட பாவப் பெட்டகம்,
மறு நொடியில் நொறுங்கி
மண்ணில் உதிரும்!
நாதன் சிந்தும் வியர்வை பட்டு,
கோரச் சிலுவை முகம் சிவக்க,
கல்முகட்டின் முகாரியில்
கருணை தெய்வம்
கரைவது பாரீர்!
இறைவன் திருவுடல்
தன் மேல் பட்டதும்,
உருகும் மெழுகாய்
கழுமரம் கண்ணீர் விடும்,
ஆணியின் கூர்முனைகள்
ஆண்டவன் குருதிச் சதை ஏந்தி
மார்பில் அடித்து அழும்!
இங்கு வலிகளே வழித்துணை,
காயங்களே மருந்தாய் மாறும்
அதிசயம் நிகழுது!
புண்பட்ட இதயங்கள்
திருரத்த துளியை
மருந்தாய் பெற்றிட,
சினேகர் வரும் வழியெங்கும்
தவமாய் கிடக்குது!
நானிலம் நோக்கிய
மானிடப் பயணத்தின்
மரண காண்டத்தின்
துன்பம் தாங்கி,
மலைச் சிகரக்
கொடும் பாறையில்
சாந்த தெய்வம்
உதிரம் சொட்ட
பாதம் வைக்கிறது!
காருண்ய தெய்வத்தின்
புனிதப் பயணத்தில்
நாமும் இணைவோம்....!
தவக்காலத்து குருதி நீரூற்றில் பாவங்களைக் கரைப்போம்...!
# கவிதையின் காதலன் பேசாலை.
இணைச் சொற்கள்
கொடுமுடிக் குன்று _ கடினமான உயர்ந்த மலைக் குன்று,
தேவயாத்திரை - புனித பயணம்,
சோக கீதம் - சோகப்பாடல், விரை- செல், அடர்வனம் - அடர்ந்த காடுகள், கிரீடம் - தலையணி , புட்கள்- பறவைகள், முகாரிராகம் - சோகமான ராகம், வரள் நிலம் - வரண்ட பூமி, வனம் - காடு, நாவாய் - படகு , குருதி , உதிரம் - இரத்தம், சினேகர் - இயேசு, நானிலம் - உலகம், காருண்யம் - கருணை

onsdag 14. februar 2018

மறாக்காது_கண்மணியே நிமிடக் குறும்படகவிதை!

மறாக்காது_கண்மணியே நிமிடக் குறும்படகவிதை!
 தயாரிப்பு: Movierasa_Pattinam_Entertainment
இயக்கம்:Havoc_Nivethan_Croos


பேசாலையின் இளம் புரட்சியாளர்கள் கவிதை வழித் தென்றலில் காதலைத் தத்தெடுத்து குறும்படத்தில் ஊடாக உண்மைக் கருத்துக்களை உணர்த்த விளைகிறார்கள்.

தூரத்து மின்மினிகள்.... !

தூரத்து மின்மினிகள்.... ! காலக் கணக்குகளின்  விதிமுறை மீறல் இது ! உள்ளக் கிடங்கின்  காதல் ஆழங்களை காலங்கள் தொட்டு விளையாடுவது ஏனோ! கா...