fredag 25. mai 2018

உடக்கு பாஸ் மண்டபம்...

உடக்கு பாஸ் மண்டபம்...

திருப்பாடுகளின் காட்சிக் கூடமிது
தத்ரூபமாய் அரங்கேறும் இடமிது
நம் முன்னோரின் கலை வடிவமிது
எமது பாரம்பரிய கலைப் பொக்கிஷமிது.                                      எழுபத்தைந்து அடி நீளமானது
அகலமோ அறுபத்தியொன்று அடியானது
முருகைக் கற்களால் உயர்ந்தது

சுண்ணாம்புக் களியும் அதனுடன் சேர்ந்தது.
நூற்றுக்கணக்கில் படிக்கட்டுக்களானது
உயர் வில் வடிவில் சுவர் உண்டானது
திருப்பங்களையும் தளங்களையும் கொண்டது
அன்றைய பெறுமதியோ பதினைந்தாயிரமானது.
கட்டி முடித்து நூறாண்டு கடந்தது

இருந்தும் இது உறுதியாய் நிற்குது
பல தலைமுறைகள் கூடக் கடந்தது
நம் கண்களுக்கு இன்றும் வியப்பானது.
பரந்த பரண்கள் ஏற்பாடானது
கீழே சுரங்க அறைகளும் உண்டானது
உயர்ந்த கூரை முகடுகள் தோன்றுது
பல பொறியியலாளர்களையும் இது கவருது.
வன் செயல் நாட்டில் உண்டானது

நம்மவர் வாழ்விடம் ரெண்டானது
பாஸ் மண்டபம் அகதி முகாமானது
லட்சம் ரூபா பொருட்களும் களவானது.
மண்டபத்தின் நிலையோ உருக்குலைந்தது
பல கலைப் பொருட்களும் பழுதடைந்தது
ஆண்டுகள் பல விரைவாய் கடந்தது
பல கலைஞர்களின் உயிரும் பிரிந்தது.
ஊரின் அமைவும் விசாலமானது
சனத் தொகையின் அளவும் அதிகமானது
பாஸ் மண்டபத்தின் பயன்பாடு குறைந்தது
இன்று வௌவ்வால்களின் உறைவிடமானது.
நடக்குமோ பாஸ் என்ற கேள்வி எழுந்தது
எம்மவர் இதயத்தை அது ஆழ குத்தியது
இளைஞர் படையணி விளித்தெழுந்தது
பெரியோரின் துணையும் அதனுடன் இணைந்தது.
காலத்தின் தேவைக்கேற்ப அரங்கு அமைந்தது
அதைப் பார்த்தவர் கண்கள் அகல விரிந்தது
இவன் பேசாலையான் என வியக்குது
நம்மவர் கலைப் பயணம் இன்றும் தொடருது.

torsdag 17. mai 2018

ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா !

ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா ! 

ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா ! நினைவால் என் நெஞ்சம் பிளக்கு தம்மா ! என் அண்ணனின் கல்லறை வெடிக்குதம்மா ! உள்ளக் குமுறலில் மனம் துடிக்கு தம்மா !
நந்திக் கடலில் என் அம்மாவின்
சதையைக் கழுவிக் கரைக்கையில்
ஒட்டிய ரத்தம் இன்றும் மணக்குதே!
பட்டினிக் கடலில் மூழ்கியே மடிந்த என் தம்பியின் வயிற்றுக் குடல் நெஞ்சத்தில் கனக்குதே !சேற்றுத் தண்ணீர்
செங்குருதி கொப்பளிக்க,
மேனிப் புண்களில் சகதி வறண்டு
சாக்கடை வாசம் தெளிக்க,
கிரவல் தண்ணீரில்
நாவை நனைத்ததை
நினைத்திட வலிக்குதே !
பகையே அறியா பருவக் குருத்துக்கள் உலோகக் கோல்களால்
உரசிச் சரிந்ததை நினைத்தால்
நெஞ்சம் பிளக்குதே !
வெண்ணுடலின் புண்ணுடல் ஆற்றிட,
பச்சிலை பறித்ததை
உள்ளம் நினைக்குதே!
வடலிக் கருக்கில் குடலைப் பிழந்து
அழுகிய துண்டை வீசினோம்.
தமிழின் அம்மனப் படுக்கை
நிலையைக் கண்டு
அனுதாப அலைகளை வீசினோம் !
விடத்தல் முள்ளால் உடம்பில் புதைந்த தோட்டாக்கள் அளந்தோம்!
மொட்டக் கத்தியால் முள்ளந் தண்டுகள் வெட்டிப் பிளந்தோம்!
பீரிட்ட குருதியை பீரங்கி தடம் தந்த மண்ணள்ளித் தடுத்தோம்!
வேர் விட்ட விழுதுகள்
தூரோடு குடை சாய
வாய் பொத்தி அழுதோம்!
கருவுக்குள் சிசுவுக்குச்
சமாதிகள் - வெந்தோம்!
எம் குறும்புகள் உடல் மீது
எறும்பூறக் கண்டோம்!
வன்னி நிலங்களை
வயிற்றால் உழுது,
குருதிப் புலங்களைக் கட்டி அழுது,
உரமாய் புதைத்த
தமிழ்த்தாயின் புதல்வரை ,
மரமாய் வியந்து மரியாதை செய்கிறோம் .
வலியை சுமந்தும் கருவைப் பிசைந்தும் உடலைச் சிதைத்திட்ட போதிலும் ,
எம் கனவைச் சுமந்து மணலில் புதைந்த உறவின் நினைவில் கூடுவோம் !
மே 18 எம் உணர்வலைகளை முகாரியாக்கி மனிதம் தொலைத்தோர் செவிப்பறைகளில் பெருவெடிப்பை உதிர்க்கட்டும் !
#
கவிதையின் காதலன், பேசாலை .

ஒத்தை நாவல் மரம்
ஒத்தை நாவல் மரம்.....
Emat Croos

பேசாலையின் தெற்குப் புறம்
செல்லும் வீதியின் வலப் புறம்
உயர்ந்து நிற்கும் தனிமரம்
குறிப்புக் காட்டும் ஒத்தை நாவல் மரம்.முளைத்து நிற்கும் நாம் பார்க்குமிடம்
இருந்தும் பெற்றதில்லை அவை சிறப்பிடம்
ஒத்தை நாவல் போல் தனியிடம்.
காய் கனி தந்திருந்தது பின்னைய நாளில்
மறுப்புச் சொல்வதற்கில்லை இவ்விரு நாளில்
முதிர்ச்சியால் பலன் ஓய்ந்தது இன்றைய நாளில்.
களைப்பாறும் அதன் நிழல் வாட்டம்
எடுத்த விறகை ஒன்று கூட்டும்
தலையில் சுமந்து வரும் மயிலாட்டம்.
கூடை மீனைத் தோளில் தாங்கி
தண்ணித்தாளை நின்று வீடு நோக்கி
வழியில் ஓய்வெடுப்பார் இதில் தங்கி.
ஊரில் இருந்து பார்க்கையிலே
இதன் இருப்பிடமோ அடர்ந்த காட்டினிலே
நம் கண்களுக்குத் தெரியும் தூரத்திலே.
ஊரும் பெருத்தது நாலா திக்குமாய்
குடிமனை காணிகள் அமைந்தது நெருக்கமாய்
ஒத்தை நாவலும் தெரியுது பக்கமாய்.
அதனுள் அழகிய கூடமைத்து
புனித அந்தோனியார் சுரூபம் வைத்து
வேண்டுதல் செய்தோம் அவர் செயல் நினைத்து.
வீழ்த்தியது அதை உடைத்துத் தள்ளி
பின் வாங்கவில்லை அதன் நிலையை எண்ணி
உருவாகியது அவ்விடம் புதிய பள்ளி.
பேய் பிசாசு அலையுதென்பார் சிறியார்
பில்லி சூனியம் நடக்குதென்பார் அறியார்
யாவையும் அடக்க வருகிறார் புனித அந்தோனியார்.

நம்ம காட்டில் உண்டு பல நாவல் மரம்
அதிகம் பூத்திருந்தது முன்னைய நாளில்
விறகெடுக்கும் பெண்கள் கூட்டம்
காவு தண்டி கூடை தூக்கி
முன்னைய ஆண்டு காலத்திலே
காலங்கள் கடந்தது வேகமாய்
ஒத்தை நாவல் குடைந்தெடுத்து
காலத்தின் சூது கவ்வி
முனிப்பாய்ச்சல் உண்டென்பார் பெரியார்

torsdag 10. mai 2018

காதல் புயல் கொண்டு தாக்கினால் ?

காதல் பிரிவில் ஒருமையாய் அலைந்த நாட்களில், சிந்தனை அலைகள் தாக்கி ஏற்படுத்திய வடுக்கள் கொண்டு வெறுப்பு வேதம் எழுதிய போது ...........
என்னைக் காதல் புயல் கொண்டு தாக்கினால்
வேரோடு சாயும்
மரமாவேன் என்றாயோ ? 
கடல் கடந்த காதல் யுகத்தை
கரையில் வீசி என்ன பயன் ?
வெட்டிய பனையில்
கள்ளைத் தோண்டும்
கன்னி உனக்கு
அனுபவப் புதிர்களில்
விடை தருகிறேன்.
உன் அழைப்பில் உருகிய நாட்கள்
கடந்தது பெண்ணே !
காவியத் தூதுகளின் கடதாசிகளைக்
கருக்கிக் குளிர் காய்ந்தாயே !
நான் தழல்களால் வேள்வி செய்து வாழ்கிறேன் என்செய்வாய்?
என் கட்டிளம் தேகத்தை
காதல் பசியால் வாடச் செய்தாயே !
என் உணவுக் கால்வாய்கள்
துறவு பூண்டு ஆகாரத்தை நிராகரிக்கும்,
என் செய்வாய் ?
கவிதைகள் புனைந்த பொழுதெல்லாம் வலிக்கும் வார்த்தைகளால்
என் வாக்கியங்களை உடைத்தாயே ! இலக்கணம் அருந்தி
திடகாத்திரத் தமிழ் வைத்துள்ளேன்
என் செய்வாய் ?
காத்திருக்கச் செய்து
வேதனைக் காற்றால்
என் முகத்தில் விசிறி அடித்தாயே !
துரோகத் தடிகளால் அடிபட்டு
மெருகேறி நிற்கிறேன்
என்செய்வாய் ?
ஊரார் வாயில் உலையிட்ட கரும்பாக்கி என்னை சக்கை பிளிந்தாயே!
புகழ் மழையை தித்திக்கும் சாறாக்கி நாவினிக்கச் செய்து விட்டேன் என்செய்வாய் ?
தலைவன் என்று சொல்லி
சிலையாக்கி சந்தியில் நிறுத்தினாயே!
நினைவுப் பொக்கிசமாய்
பாதுகாப்பு அரண் அமைத்து
நிலைக்கிறேன்
என் செய்வாய் ?
மான் விழிப்பார்வையால் மயக்கி
பாமரன் காதலை
மானபங்கம் செய்தாயே !
மின்னல் கீற்றிடம் பயிற்சி பெற்று பார்வைகளைப்
பிரித்து எதிர்கொள்கிறேன்
என் செய்வாய்?
பறவை எச்சமாய் என்னைக்
காணும் இடங்களில் எல்லாம்
கறை கொண்டு எறிந்தாயே !
அழுக்கேறிய உடையணிந்து
வலம் வருகிறேன்
என்செய்வாய்?
என்னைக் காதல் புயல் கொண்டு தாக்கினால்
வேரோடு சாயும் மரமாவேன்
என நினைத்தாயோ ?
# கவிதையின் காதலன்.

tirsdag 8. mai 2018

இப்படிக்கு இவர்கள்......!


இப்படிக்கு இவர்கள்......!

தொட்டதும் உடையும்
அப்பள மனது !
ஏகாதிபத்தியம் அவ்வப்போது சுரண்டினாலும்
நொறுங்காமல் நெகிலும் ஜீவன்கள் !
வியர்வை ஊற்றால்
மலையைப் பெயர்த்து
மடியில் போடும் மனோதிடம்!
அழுக்குகள் தான்
இவர்கள் பூசும்
அலங்காரத் திரவியம் !
முடியாது என்ற உச்சரிப்பை
அகராதியில் தேடும்
அகிம்சை வாதிகள் இவர்கள்!
ஏன் ? எதற்கு ? எப்படி? என்ற
பகுத்தறிவு வார்த்தைகளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் !
மாக்ஸியத்தை மார்போடு பூசினாலும் முதலாளித்துவத்தால்
மாதம் தோறும் சுடப்படுபவர்கள்!
தேனீரே பல வேளை
வயிற்றுப் புண்களுக்கு
மருந்திட்டுச் செல்லும்!
புது உடைகளால்
நிராகரிக்கப்பட்ட பரம்பரை இவர்கள்! ஆனாலும் வாங்குதிறனில்
இவர்களின் வல்லமையோ
விண்ணைப் பிழக்கும்!
தனக்கான எதிர்காலத்தை
குடும்பச் சூழ்நிலையால்
செதுக்கத் தவறியவர்கள்!
வானொலிப் பெட்டிக்குள்
வசந்தக் காற்றைத் தேடுபவர்கள்!
வயிற்றுப் பசியென்றால்
வலுவாற்றலை புசிப்பவர்கள்!
காலநிலைகளுக்கு கட்டுப்படாத காளையர்கள் இவர்கள் !
கலங்காது உழைக்கும்
திறனாளர் இவர்கள் !
இப்படிக்கு இவர்கள் தொழிலாளர்கள்...!
# கவிதையின் காதலன்
.

tirsdag 1. mai 2018

#வைகாசி_01

ழ,ல,ள கரங்கள் இணைந்து
தொழிலாளி ஆனானே !
சிகரங்களும் அண்ணார்ந்து பார்க்க வானாளாவி நின்றானே !
தகரங்களிலும் தங்கத்தை
அழகுற வார்ப்பானே !
முக்காலத்திலும் ஓய்வின்றி
உழைத்து ஓடாய் ஆனானே !
திரைகடலோடியும் தேனான
திரவியங்கள் சேர்ப்பானே !
திறனற்ற நிலத்தையும் உழுது
பலன் கண்டு களிப்பானே !
ஆடிப்போன வீதியிலும் வாகனத்தை
ஆடாது செலுத்திடுவானே !
வாழ்வில் தீராத துன்பங்கள்
கண்டாலும் துவளாது துடிப்பாயிப்பானே !

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் –

காணாமலாக்கப்பட்டவரின் மனைவிக்கு அச்சுறுத்தல் – பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை மன்னார் பேசாலையைச் சேர்ந்த காணாமலாக்கப்பட்ட ஒருவரின் மனைவி ப...