søndag 29. mai 2011

திரு N.S.Croos (சூசையப்பு குருஸ்)

திரு. நீக்கிலாஸ் சூசையப்பு குருஸ்!
                                                                             என் மனதில் இடம்பிடித்த ஒரு மனிதர் இவர். மென்மையான சுபாவாம், நல்ல பண்பாளன், நல்ல பக்திமான். இவரது தலைமகன் ஒரு குருவாக இருப்பது நமக்கு பெருமையாக இருக்கின்றது.
மென்மையான சுபாவம் கொண்டு இவர் இருப்பதால் பேசாலையில் பழைய நாடககதாநாயகனாக இவர் நடித்ததாக என் தாய் எனக்கு சொன்னதுண்டு. அன்பே வா அழைகின்ற எந்தன் மூச்சே! என்ற ராஜா ஜிக்கி பாடிய பாடலை பாடிக்கொண்டு மேடையிலே தோன்றும் போது பெண் ரசிகரால் பெரிதும் கவரப்பட்டவர். அருளானந்தம் நாடகத்திலே இவர்தான் அருளானாந்தர் இவரை குப்பை லோகு என்ற மாமிசமலை போன்ற என் ஊர்க்காரன் ஒருவர் இவரை அடித்து உதைப்பார். எங்கட சனங்கள் ஓவென்று கதறி அழுவதை நான் சின்னவயதில் பார்த்திருக்கின்றேன். கல்யாணம் என்று என் ஊரிலே நடந்தால் இவர்தான் முதல் ஆளாக வந்து மாப்பிள்ளை அழைப்புவிடுப்பார். செத்தவீடு நடாந்தாலும் இறுதிக் கிரிகைகளை இவரே முன்நின்று நடத்துவார். தற்போது வயதாகி வீட்டிலே முடங்கிப்போயிருக்கும் இவரைப்பற்றி நான் துருவநாட்டு பனிப்படலத்தை
பார்க்கும் போதெல்லாம் நினைவுபடுத்துவதுண்டு.
                                   பனிபடர்ந்த மலைகளுக்கிடையே நினைவு மீட்டுகும் அன்பு
                                                                                 பேசாலைதாஸ்

lørdag 28. mai 2011

ஆசிரியர் ஞானமனி நேசம் பச்சேக்

என்ன வாசகர்களே! அமரர் ஆகிப்போனவர்களை  நினைத்துப் பார்த்தால் மட்டும் போதுமா! நமது ஊரை, நம்மை, தன்னலம் கருதாமல் அன்பு செய்து சேவை செய்துகொண்டு யாரும் கண்டுகொள்ளாமல் விடப்பட்டவர்கள் பலர் இப்பவும் எமது ஊரிலே வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றார்கள். அவர்களைப்பற்றி கட்டாயம் எழுதித்தான் ஆகவேண்டும் அதை நீங்கள் நிட்சயமாக வாசிக்கவேண்டும் என அன்போடு வாஞ்சிக்கின்றேன். அப்படி ஒரு மனிதரைப்பற்றி எழுதவேண்டும் என என் உள்மனம் கட்டளை இட்டது. அவர்தான் நேசம் மாஸ்டர் எல்லோரும் தத்தமது பெயருக்கு ஏற்றாற்போல வாழ்வதில்லை ஆனால் நேசம் மாஸ்டர் ஒரு விதிவிலக்கு!
அவர் பெயருக்கு ஏற்றாற்போல எல்லோரிடமும் நேசமாகத்தான் இருக்கின்றார். குறிப்பாக பள்ளிமாணவர்களிடமும் பேசாலை பத்திமா கல்லூரியிலும் அளவில்லா நேசம் கொண்டவர். பேசாலை யூட் வீதி செட்டித்தெரு என அழைக்கப்படுவதுண்டு அந்த செட்டித்தெருவிலே இவர் மட்டும் பெட்டி! இதை அவரே நகைச்சுவையோடு சொல்வதுண்டு. உண்மை தான் இவர் ஒரு ஏழையாகத்தான் வாழ்கின்றார் (மனதில் பெரும் செல்வந்தனாக). ஒரு மார்கழி மாதம்! பேசாலைக்கடலிலே பெரும் இரால் பிடிபாடு! அவரவர்கள் டிசல், ஐஸ், மடி இப்படியாக ஓடித்திரிகின்றார்கள் கிட்டதட்ட பேசாலையில் எல்லோருமோ ஏதோ ஒரு ஓட்டமும் நடையும்.
ஆனால் நேசம் மாஸ்டரோ அமைதியாக மாலை ஆறுமணியாகிப் போனாலும் பள்ளிக்கூடவளவிலே ஏதோ ஒரு வேலையை அமைதியாக செய்துகொண்டிருப்பார். பேசாலை என்பதே விசித்திரமானது அதிலும் பேசாலைப்பெண்கள் சொல்லத்தேவையே இல்லை! தாலி தடிப்பக இருக்கவேண்டும். சேலை சோலையாக காட்சிதரவேண்டும் இப்படியாக ஒவ்வொரு குடும்பத்தலைவியும் தலைவலியாக இருக்கும்போது எப்படி இவரால் மட்டும் ஒரு ஆசிரியத்தொழிலோடு இதர வருமானத்திற்கு ஏங்கித்தவிக்காமல் பள்ளிக்குடம் மாணவர்கள் என்று வாழ முடிகின்றது என்று அப்போதே என் மனம் எனக்குள் கேள்விகேட்டு குடையும்! அவரைப் போல நானும் இருக்கவேண்டும் என்பதே விடையாக அமைந்தது!
நேசம் மாஸ்டர் அன்பாளன் மட்டுமல்ல ஒரு நல்ல பண்பாளன்! அவர் கோபப்படுவது சுனாமி  நடக்கிரமாதிரி! எப்போதாவது வரும். வந்தால் வந்ததுபோலத்தான். அவர் நல்ல கலைஞன்! நல்ல நடிகர்! ஒரு நல்ல நாடக இயக்குனரும் கதை ஆசிரியரும் எழுத்தாளரும் ஆவார். இப்படி பன்முகம் கொண்ட ஆளுமைகொண்ட ஒரு எளிமையான மனிதர் எம் ஊரில் வாழ்வதையிட்டு நாம் சந்தோசப்படாமல் இருக்கமுடியுமா! நீங்களே சொல்லுங்களேன்!
                                        தொடரும் நினவுச்சுழிகளோடு பேசாலைதாஸ் 

ஆசிரியர் அமரர் செபஸ்தியான் குருஸ்

பேசாலையில் ஆசிரியராகவும் ஒரு கலைஞனாகவும் வாழ்ந்து மறைந்தவர் தான் அமரர் திரு செபஸ்தியான் குரூஸ் அவர்கள்
மென்மையான சுபாவம் கொண்டவரும் எல்லோரிடமும் அன்பாக பழகும் சுபாவம் கொண்டவர் இவர். இவரிடம் நான் கல்விகற்றது கிடையாது ஆனால் இவரின் இசைப்பாடல்கள் வாசாப்புகள் நாடகங்களினால் நான் பெரிதும் கவரப்பட்டிருக்கின்றேன். நத்தார் விழாவந்தால் அந்த இரவுப்பூசை முடிந்தகையோடு பீடப்பரிசாரகரும் மற்றும் பாடகர் குழாமும் இணைந்து இரவு முழுவதும் வீடு வீடாக சென்று கரோல் பாட்டு இசைத்து பணம் சேகரிப்போம் அது ஒரு சொர்க்கமான கனாக்காலம்! அப்போதெல்லாம் செபஸ்ரியான் குரூஸ் மாஸ்டர் கரோல் பாடல் இசையமைப்பர். ஆடினதெப்படியோ ஆடுகள் நாம் ஆடினதெப்படியோ தகுட தக்கூட என்று அந்தப்பாடல் வரும் இப்பவும் அந்தப்பாடலை என் மனம் என்னை அறியாமலே மனனம்செய்வதுண்டு. இவருடைய பாடலுக்கு எசப்பாட்டக திரு பிரகாசம் லெம்பேட், அமரர் திரு பிளசியஸ் இவர்கள் சினிமாப் பாடல்களை உருவி இசையமைப்பார்கள் முசாகிரி கானா முத்து முத்து மைனா இரவில் வந்த இரட்சகரை அந்த இடையர்களும் இந்த மடையர்களும் என்று கிண்டலடித்து பாடுவதை கேட்கும் போதெல்லாம் மனம் ஆனந்தகூத்தாடும். அமரர் ஆசிரியர் ஒரு கலைஞர் மட்டுமல்ல ஓர் கைதேர்ந்த நுட்பவேலைக்காரர் எளிமையான அந்தமனிதரோடு நமது ஊரில் உயிரோடு வாழ்ந்துகொண்டிருக்கும் கலைஞர்களை வாழ்த்தி போற்றவேண்டும் என்பதற்காக திரு உதயன் அவர்களோடு இணந்து பிரமாண்டமன வாழும்போதே வாழ்த்துவோம் என்ற ஒரு கலை இரவைப் இலட்சம் ரூபா செலவில் அரங்கேற்றினோம். இறந்த சிங்கத்தைவிட உயிரோடு உள்ள ஆடு மேலானது என்ற வேதவாக்குக்கு ஏற்றாற்போல இது அமைந்தது.  தொடரும் நினவுகளோடு 
 நேசமுடன் பேசாலைதாஸ் 

பேசாலை நாயகியே!

பேசாலை நாயகியே…  2009களில் வெளிவந்த காணொளி… நடிகர்களாக – விஜய், பிரியங்கா… பாடகராக – மகிந்தகுமார் இசை ஒருங்கிணைப்பு – C. சுதர்சன் பாடல்வரிக...