torsdag 19. april 2018

நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி)

நம்ம ஊரு இலுப்பையடி...
(இலுப்பை மரத்து அடி)

நம்ம ஊரு இலுப்பையடி
சொல்லும் பல சேதியடி
கடந்து வந்த பாதையடிஅதை திரும்பிப் பார்த்தால்நியாயமடி!வரவேற்பு அன்னை சுருபமடி
எம்மை அழைப்பாள் கையை விரித்தபடி
வருவோர் போவோர் நின்றபடி
அதை வணங்கிச் செல்வார்
முறைப்படி!
பாட்டி கதைகள் சொல்லும்படி
முன்னர் இலுப்பை மரமொன்று நின்றதடி
அதன் காரணம் கருதிக் கொண்டபடி
பின்னர் இலுப்பையடியென பெயர் பெற்றதடி!
வரலாற்றுக் குறிப்பில் உள்ளபடி
நம்மவர் ஒன்று சேர்ந்த படி
உயர் மக்கள் வரவை ஏற்ற படி
மகிழ்ந்து செல்வார் அழைத்த படி!
ஈர்பத்து வருடங்களின் முன்னமடி
இவ்விடம் காவல் இடப்பட்டு இருந்ததடி
ஊரின் கண் நாம் வாழ்ந்த படி
நம்மவர் பட்ட துன்பமோ கோடியடி!
வெற்றி அன்னை வரும் பாதையடி
தடைபட்டு போனது பல வருடமடி
அன்னையின் பாதம் பட்டதடி
இவ்விடம் புத்துயிர் மீண்டும் பெற்றதடி!
பழைய சந்தைக் கட்டிடம் உடைந்ததடி
மின் தரும் நிலையமும் தகர்ந்ததடி
பல கடைகள் பாழ் அடைந்ததடி
இருந்த இலுப்பை மரமும் வீழ்ந்ததடி!
இன்றைய நிலையில் உள்ளபடி
பல வர்த்தக நிலையங்கள் இயங்குதடி
புதிய நூல் நிலையமும் அமையுதடி
மீண்டும் பரபரப்பு இவ்விடம் ஆகுதடி!
எத்தேசமும் வாழு ஊர் கடந்தபடி
எத்தனை நாள் கழி நீ இஷ்டப்படி
ஊர் திரும்பும் வேளை சிரித்தபடி
உன்னை வரவேற்கும் நம்ம ஊரு இலுப்பையடி!
சொர்க்கமே என்றாலும்
நம்ம ஊரப் போல வருமா?
18/4/2018

ஊரைச்சுத்தி ஓடிப்பாரு


 


mandag 16. april 2018

பேசாலை....Emat Croos

பேசாலை....

Emat Croos

வந்தாரை வாழ்விக்கும் வசந்த சாலை
வந்து சென்றோரும் போற்றிடும் புகழ் சாலை
ஊருக்குள் இழையோடும்
பிரதான சாலை
மன்னார் - தலைமன்னார் எனும் நெடுஞ்சாலை!
பனை தென்னை வளம் கொழிக்கும் மரச்சாலை
கடல் மச்சங்கள் கரை சேரும்
கடற்சாலை
பல தொழில்களையும் கொண்ட தொழிற்சாலை
அதனால் தான் என்னவோ
அது பெரியசாலை!

தன்னகத்தே கொண்டது இரு கல்விச்சாலை
மாணவர் அறிவுப் பசிக்கு போசணசாலை
முத்தமிழையும் பரிமாறும்
அசனசாலை
பல வித்தகர்களையும் உருவாக்கிய அறிவுச்சாலை!

ஊருக்கு புறத்தே இரு மதுச்சாலை
உழைப்பு களைப்பை போக்கும் தாகசாலை
வட தென் புலங்களில் இரு சினிமாச்சாலை
காலத்தின் கோலத்தால் இப்போ மூடுசாலை!

கல்விமான்களைத் தாங்கும்
கலைச்சாலை
பல கலைகளையும் காட்டும்
கவிச்சாலை
ஆன்மீக வாதிகளை ஈர்ந்த தவச்சாலை
நாற்றிசையும் பேர்கொண்ட பேர்சாலை!

வறியோர்க்கு கொடுத்திடும் அன்னசாலை
தேடி வருவோர்க்கு திறந்திடும் பண்டகசாலை
அச்சமின்றி அதிர்ந்திடும் அறச்சாலை
மீதிமிச்சமின்றி ஈர்ந்திடும் களஞ்சியசாலை!

துஞ்சியோரைத் தாங்கிடும் மணற்சாலை
வழி முந்தியோரை அலங்கரிக்கும் மலர்ச்சாலை
அருள் வேண்டி வருவோர்க்கு அருட்சாலை
நோய் பிணி நீங்க வேண்டுவோர்க்கு வைத்தியசாலை!

இசை லயம் காட்டிடும் இசைச்சாலை
தீரா விளையாட்டில் மின்னிடும் வெற்றிச்சாலை
பல நூல்களை பிரசவித்த புத்தகசாலை
வெற்றிக்கலசங்ளை தனதாக்கிய அதிஷ்டசாலை!

புத்துணர்ச்சி வழங்கிடும் பாற்சாலை
பல புதிர்களை விடுவிக்காத சிறைச்சாலை
தோல்வியில் துவண்டிடாத திடசாலை
வேள்வித் தீயிலும் வெந்திடாத இயந்திரசாலை!

விடுதலைக்காய் விதை கொடுத்த தியாகசாலை
வீர களமாடிய வேங்கைகளின்
மாற்றுச்சாலை
மாற்றானிடம் மண்டியிடாத மறச்சாலை
வேற்று நாட்டானிடமும் ஒண்டிடாத தமிழ்ச்சாலை!

இத்தகைய சிறப்புக்களைக் கொண்டசாலை
வெற்றி அன்னை பொற்பதியாம் பேசாலை
அதனால் தான் பலருக்கும் இதன் மேல் ஆசை.. ஆசை..

மண் புகழ் காப்போம்!!
மண் புகழ் உயர்த்துவோம்!!!

16/4/2018

lørdag 7. april 2018

காதல் கவிதை கேட்கிறேன் ...

கற்பனை தீண்டாமல் தொகுத்தவை என்று நிராகரிக்கப்பட்ட காதல் புத்தகம் ஒன்றை ஆண்டுகள் சில கழித்து தூசு தட்டிப் பார்த்த போது .....

காதல் கவிதை கேட்கிறேன் ...

உள்ளத்திடம் - அவை

ஒப்பாரியில் தீட்டிய 
என் காதல் ஏட்டை,
படி என்று தூக்கிப் போட்டது !

கிழிந்த தாள்கள்,
என் எண்ணச் செல் அரித்ததில்
கிழிந்ததோ ?
எழுத்துக்கள் சுமந்த காயங்களில்
குருதி கசிந்ததால்
பாழ்பட்டுப் போன தோ ?
நீ போட்ட வடுக்கள்
வீங்கி உரசல் கொண்டதில்
தாள்களை நசுங்கியதோ ?
உன்னால் நான் வெந்த,
ஈரமில்லா கனங்களைத் தானே
ஏட்டில் பதித்தேன் !
எப்படி பசை போல் ஒட்டிக் கொண்டது?
ஓ ! அவை என் அழுகையை உறுஞ்சியதால் வந்த விளைவுதானா!
பக்கங்களை புரட்ட முயல்கிறேன்,
தாள்கள் பொசுங்கி - கையில்
வாக்கிய வடுக்களை பதிக்கிறதே !
சுண்டு விரலால்
ஒற்றையின் மத்தியை
அழுத்தி புரட்டுகிறேன் !
என் இதயத்தின் நாளங்களில்
படிந்த காதலை, விரல்களால்
சுரண்டிய உணர்வாய் வலிக்கிறதே !
மெதுவாய் எச்சிலை விழுங்கி
வரிகளில் புதைகிறேன்!
அவளெனும் மேகம்
என்னில் நிழலாட
உருகிக் கரைகிறேன்!
நான் எழுதிய விடைகளின் வினாக்களை இன்று தான் இரை மீட்கிறேன்!
பழமை என்னை
வெட்கித் தெளியச் செய்கிறது...!
அவளின் சந்திப்புக்களில்
நகைத்து நானம் கொண்டது
நானா? அவளா ?
நானியது நான்!
நகைத்தது அவள் !
அழுகை ஆயுதம் அதிகம் ஏந்தியது
நானா ? அவளா ?
அழுகையை ஏந்தியது நான் !
அதை ஆயுதமாக்கியது அவள் !
முத்தத்தில் புதைகையில்
முகம் சுழித்தது
நானா ? அவளா ?
முத்தத்தில் புதைந்தவன் நான்!
முகம் சுழித்தது அவள்!
காதல் வலிகளை
வார்த்தையால் உணர்த்தியது
நானா ? அவளா ?
காதலை உணர்ந்தது நான் !
வலிகளை உணர்த்தியது அவள் !
பிரிவை மறந்து வாழ்வேனோ ?
வினவியது,
நானா? அவளா ?
பிரிவை வினவியது நான் !
என்னை மறந்து வாழ்வது அவள் !
செருப்பாணியாய் தைத்த
விடைகளில் மீளாது
ஏட்டை மடக்கினேன்.
ஆழி நுரையாய்
ஆயிரம் கேள்விகள் என்னுள் !
என் புராண ஏட்டின் எழுத்துக்கள்
என்னை முகர்ந்து வார்த்தவை
என்றல்லவோ நினைத்தேன்!
அச்சில் பிம்பம் மாறி நிற்குதே !
ஐயோ!
என் பக்குவப் பிழைகளுக்கு
சவுக்கடி கொடுத்தல் அறமே !
கையறுத்து காதல் வடித்த கறைகள்,
உக்கிப் போயிருக்கும்
என்றல்லவா எண்ணினேன் !
அவை தேகத்தில் தழும்பாகவும்,
உள்ளக் குழியில் எலும்பாகவும்
பொறுத்து நிற்கிறதே!
மறதிகள் ஒட்டிக் கொண்ட தேகத்தில் நினைவுகள் மட்டும் மழுங்கடிக்கப் படவில்லையே!
ஐயகோ !
காதல் அமானுஸ்ய பொக்கிசமே !
# கவிதையின் காதலன் பேசாலை

torsdag 5. april 2018

நெய்தலின் உழவன்


புழுது உருட்டிய கால்கள் !

இடுப்பில் உப்பு ஊறி,
வரிந்து வைத்த கோடுகள் !
வெயிலோடு மல்லுக்கட்டி
சுருங்கிப் போன முகம் !
உவர் நீரில் வெளுரி,
வெடிப்புப் பூத்த விரல்கள்!
பழுப்பேறி உக்கிப் போன
சரக் கிழியல்கள் !
இவை அப்பாவின் அடையாளங்கள்!

கரவலை தொடங்கி உடுவலை வரை
அப்பா கை படாத வலைகளே இல்லை!
கணியம் பார்த்தால் கைக்கு ஏறாத
மீன்களே கிடையாது!
பீத்தல் வலை பொத்துவதும்,
பிணை கட்டி மாடடிப்பதும்
கைவந்த கலை!
அங்கர் பைகள் வெத்திலை சுமக்க,
அசை போட்டு இசை கேட்டு வாழும் மனிதர்!
நான் அறிந்து தேனீர் தான்
இவர் பகல் உணவு !
பக்குஸ் பெட்டி கட்டிய சைக்கிள்,
கட்டை சொருகிய மிதி பலகை ,
அதோடு குடியிருக்கும்
போற பேக்கும் தான்
அப்பாவின் ஜீவனோபாயம்!
கிறீஸ் பூசாத பிரிவீலில் எழும்
கறுக்கு முறுக்கு இசையுடன்
கடலுக்கு போகும் அழகோ தனி!
நண்டு வலை பொத்தி
துண்டு வலை ஏத்துவார்!
சூடைக்கும் கூடைக்கும்
வாடைக்கும் உழைப்பார்!
கரைவலை இழுத்து
கரையில படுப்பார்!
சந்தையில் கூவியே
மீன் பல விற்பார்!
சண்டைகள் ஏற்படின்
பொறுமையை காப்பார்!
கூழ் காய்ச்ச தெரிஞ்சவர்
வீட்டில இவர்தான்!
பஞ்சத்தில் குடும்பத்தை
காத்தவரும் இவர்தான்!
கோயிலில் கொடியேற்ற
முன்னுக்கு நிப்பார்!
பள்ளிக்கு போகாட்டி
பிரம்பால வைப்பார்!
பிஞ்சு வயதில்
நெஞ்சில் சுமப்பார்!
பிஞ்சு தோயும் வரை
நன்றாய் உழைப்பார் !
அம்மாவ கை நீட்டி பாத்தது இல்ல.!
அப்பா புதுச்சட்டை போட்டது மில்ல.!
வெயில் காட்டை
கண்ணில் காட்டவுமில்ல!
அப்பா வெறும் கட்டை என்றவன்
மனுசனும் இல்ல!

நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி)

Emat Croos Yesterday at 15:35  ·  நம்ம ஊரு இலுப்பையடி... (இலுப்பை மரத்து அடி) நம்ம ஊரு இலுப்பையடி சொல்லும் பல...