torsdag 5. april 2018

நெய்தலின் உழவன்


புழுது உருட்டிய கால்கள் !

இடுப்பில் உப்பு ஊறி,
வரிந்து வைத்த கோடுகள் !
வெயிலோடு மல்லுக்கட்டி
சுருங்கிப் போன முகம் !
உவர் நீரில் வெளுரி,
வெடிப்புப் பூத்த விரல்கள்!
பழுப்பேறி உக்கிப் போன
சரக் கிழியல்கள் !
இவை அப்பாவின் அடையாளங்கள்!

கரவலை தொடங்கி உடுவலை வரை
அப்பா கை படாத வலைகளே இல்லை!
கணியம் பார்த்தால் கைக்கு ஏறாத
மீன்களே கிடையாது!
பீத்தல் வலை பொத்துவதும்,
பிணை கட்டி மாடடிப்பதும்
கைவந்த கலை!
அங்கர் பைகள் வெத்திலை சுமக்க,
அசை போட்டு இசை கேட்டு வாழும் மனிதர்!
நான் அறிந்து தேனீர் தான்
இவர் பகல் உணவு !
பக்குஸ் பெட்டி கட்டிய சைக்கிள்,
கட்டை சொருகிய மிதி பலகை ,
அதோடு குடியிருக்கும்
போற பேக்கும் தான்
அப்பாவின் ஜீவனோபாயம்!
கிறீஸ் பூசாத பிரிவீலில் எழும்
கறுக்கு முறுக்கு இசையுடன்
கடலுக்கு போகும் அழகோ தனி!
நண்டு வலை பொத்தி
துண்டு வலை ஏத்துவார்!
சூடைக்கும் கூடைக்கும்
வாடைக்கும் உழைப்பார்!
கரைவலை இழுத்து
கரையில படுப்பார்!
சந்தையில் கூவியே
மீன் பல விற்பார்!
சண்டைகள் ஏற்படின்
பொறுமையை காப்பார்!
கூழ் காய்ச்ச தெரிஞ்சவர்
வீட்டில இவர்தான்!
பஞ்சத்தில் குடும்பத்தை
காத்தவரும் இவர்தான்!
கோயிலில் கொடியேற்ற
முன்னுக்கு நிப்பார்!
பள்ளிக்கு போகாட்டி
பிரம்பால வைப்பார்!
பிஞ்சு வயதில்
நெஞ்சில் சுமப்பார்!
பிஞ்சு தோயும் வரை
நன்றாய் உழைப்பார் !
அம்மாவ கை நீட்டி பாத்தது இல்ல.!
அப்பா புதுச்சட்டை போட்டது மில்ல.!
வெயில் காட்டை
கண்ணில் காட்டவுமில்ல!
அப்பா வெறும் கட்டை என்றவன்
மனுசனும் இல்ல!

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...