onsdag 21. februar 2018

தூரத்து மின்மினிகள்.... !

தூரத்து மின்மினிகள்.... !
காலக் கணக்குகளின் 

விதிமுறை மீறல் இது !
உள்ளக் கிடங்கின் 
காதல் ஆழங்களை
காலங்கள் தொட்டு
விளையாடுவது ஏனோ!
காத்திருப்பை
கடிகார முள்ளாக்கி
எண்ண ஓட்டத்தில்
சுழலச் செய்வது நீதியோ?

உன் நினைவுத் தரிப்பிடம் நான்
நிறுத்தாமல் கடக்கும்
தொடர்வண்டியாகிறாய்!
திரும்பிப் பார்த்தால்
புன்னகைக்கும்
வாழ்க்கைக் குறிப்பு என்னை
பயணச் சீட்டாய்
பயன்படுத்தி எறிகிறாய்!
வழிப்போக்கன் என் பயணத்தில்
வேதனைக் காற்றால்
வெப்பம் சொரிகிறாய்!
தூரத்து மின்மினிகளை
தொடத் துடிக்கு போராட்டம்!
இரவின் கைகளாய்
மறைந்து நிற்கிறேன்,
வெளிச்சம் காட்டி என்னை
ஏமாற்றிச் செல்கிறாய்!
காதலெனும் தேன் கூட்டை
தீப்பந்தம் காட்டி
உருகச் செய்கிறாய்!
நாதியற்ற நாட்டவன் நான்
ஆயுதப்போர் தொடுத்தல்
அறமோ சொல்?
என் கனவுக் கோட்டைக்கு
செங்கல் சுமக்கிறேன்.
தாகம் தணிக்க
கானல் நீ்ர் தருகிறாய்!
அலங்கார மாளிகையில்
அலங்கோலக் கோடு வரைகிறாய்!
கற்பக் கிரகத்தில்
காதலைக் குடிவைக்கிறேன்
பறவை எச்சமாய்
சிலையில் வலிகள் இடுகிறாய்.!
என்னால் மட்டும் உணரக் கூடிய
என் வலிகளை
உன் கண்ணால்
உணர்வது எப்போது?
நமக்குள் தூரம்
அதிகம் என்பதால்
ஏக்கக் குறிகளை
தூது அனுப்புகிறாயா?
கடல் தாண்டித்
தூரம் நின்கிறேன்
வண்டைத் தூதனுப்பி
வதைக்காதே!
தாழமுக்க வேதனைக்கு
அடை மழையைப்
பரிசளிக்காதே!
மூழ்கும் சிற்பி நான்,
முத்தெடுக்க வா !
இல்லை அலையாய் மாறி
என்னைக் கரை சேர்!
நம் காதல்
கரை சேரும் நாள் தான்
என் உள்ளக்கிடங்கில்
பற்றி எரியும் தீ அணையும்.....!
# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar