mandag 19. februar 2018

தேர்ந்தெடுத்த தெய்வம்....

தேர்ந்தெடுத்த தெய்வம்....
விழி நிறைந்து மனமுடைந்து
தளர்ந்து போகிறேன்,
இருள்கள் மூடும் வழிகள் எங்கும்
கடந்து போகிறேன்!
காவலாக யாரும் இல்லா
கானகத்து சாலையில்
காற்றின் ஊடே என் நேசதேவன்
காத்து கொள்கிறார்!
மோக வாழ்வில் தாகம் கொண்டு
பாவம் நான் செய்கிறேன்!
பாவி என்னை தேடி வந்து
பாசம் ஏன் கொள்கிறீர்?
ஆசையென்னும் பேரொளியை
தேடிப் போகிறேன்,
ஆத்ம தேவன் நாடி வந்து
என்னை மீட்கிறீர்!
கடிகார முள்ளாய்
உம்மைப்பிரிந்தாலும்
ஒரு புள்ளியில்
எனை அணைக்கிறீர்!
கரும்புகையாய் என் பாவங்கள்,
மேகமாய் உள்வாங்கி - என்னுள்
அன்பு மழையை பொழிவிக்கிறீர்!
 பாலைவனப் பூச்செடி என்னை
உம் தோட்டத்து மலராக மாற்றுகிறீர்! 
கூலாங்கல் நான்,
உம் கவனின் ஆயுதமாக்கி
உறையில் போடுகிறீர்!
உறைந்த பனிபாறை நான்
வெயிலாய் என்னை உருக்கி
உம் கருணைக் கடலில் ஏந்துகிறீர்! 
நெல்மணிக் குவியலில்
பறவையின் அலகு போல்
என்னை தேர்ந்து ஏற்றுக் கொண்டீர்!
உம்மைப் போல பிரியாத ஒருவர்
என்னோடு இருக்கையில்
பிரிவைத் தரும்
பொருளைத் தேடி
நான் ஏன் செல்ல வேண்டும்!
#
கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar