søndag 25. mars 2018

பூவைகளின் பூலோகம்.....! # கவிதையின் காதலன்

பூவைகளின் பூலோகம்.....!

வதைப் புண்கள் தரும்
சதைப்பிண்டம் ஒன்றை
உண்டிக் கோயிலின் கற்பக் கிரகத்தில் சுமக்கிறாள் அவளொருத்தி.
மெல்லும் ஆகாரத்தால்
பிண்டத்திற்கு அட்சயமிடுகிறாள்,

 மேகத்தை நிலவில் கோர்த்து
மோகத்தின் விளைவைப் பார்த்து
தேகத்தில் சுவையை வார்த்து
கற்பனைப் பூவுக்கு கனவிலே
இதழ் முத்தமிடுகிறாள்.

ஈனும் முத்தை முகையில் வைத்தே
உவமித்து உவகை கொள்கிறாள்.
உலகத்தின்  இனியவை எல்லாம்
கவனித்து கருவுக்கு கருவூலம் ஊட்டுகிறாள் !

கருவில் நிறம் அறியாது,
ஆண் பெண் மணம் அறியாது,
 அன்பில் தனித் தனியே  சுவையறியாது நிற்பதால்,  நானிலம் கொண்ட நன்னீர் ஏரிகளில் அவளும் ஒருத்தி !

உடலைப் பிளந்து, விழிநீர் சிவந்து
 மகவை தவழ்ந்த நேரம் ,
  இவள்  மனதைக் குடைந்து
சமூகம் கடிந்த புரை வேர்
கதை வற்றிப் போகும்.!

மழலை கொஞ்சல் மொழியில்
 மதுரம் கலந்த தொனியில்,
வண்ணக் கவிகள் அவள் படிப்பாள்,
 பள்ளிச் சிறுமை வயதில்
பக்குவத் தோள்களில்
பகுத்தறியும் புத்தகம் தான் சுமப்பாள்.

பூப்பெய்தும் காலத்தே
பூவை முகம் சிவப்பாள் ,
 பருவக் கிளிகள் பறிக்க விளையும்
காதல் கனிகளை,
கற்புக் கோட்டையில் கவனமாய் காப்பாள்.

கல்வித் தூண்களில்
கற்சிலை வடிப்பாள்,
நூதனப் பொறிகளை
மதி கொண்டு தறிப்பாள்!
வறுமைக் காட்டிலும்
 வசந்தப் புன்னகை பூப்பாள்!
வீட்டில் சுமைகளை
பொதி கொண்டு சுமப்பாள் !

கலவி கடந்த காதலை ரசிப்பாள் ! தலைவனைப் பார்க்கையில்
பூ முகம் சிவப்பாள் !
உணர்ச்சிக்கு உருகத் தடை விதிப்பாள் ! புணர்ச்சிக்கு பருவத்தடை தெளிப்பாள்! கண்ணிலும் தெளிவாய் கற்பைக் காப்பாள் !

விதிக்கும் மதிக்கும் வீதி சமைத்து
 காதல் கைசேர வீறு நடை கொள்வாள். சூழ்நிலை என்னும் வேகத் தடையால் வேதனை பூசி வெட்கித் தலைகுனிவாள் !

தோல்வியில் காதலன் வெறுப்பு வார்த்தைக்கு கள்ளிச் செடியாய் மெளனம் தரிப்பாள் ! வெள்ளத்தின் கோரமாய் கோபங்கள் இருந்தும் காதலின் விளைவென்று அமைதி  கொள்வாள்!

மனது கருக மறு வீடு செல்வாள்,
உணர்வு பொசுங்க ஊடல் கொள்வாள் காதல் பசுமையை காலம் திண்ண
 கணவன் காலடி சொர்க்கம் என்பாள்

சமையல் தொடங்கி துவையல் வரை
  தேனிக் கூடாய் தினமும் விரைவாள்!  பட்டினிக் கோப்பையை பாயாசம் என்பாள் ! குழந்தை சிரிக்க கோமாளியாவாள் ! கணவன் ரசிக்க ஏமாளியாவாள்!

வதைப் புண்கள் தரும்
சதைப்பிண்டம் ஒன்றை
 உண்டிக் கோயிலில் அன்பாய் சுமப்பாள் !

தண்ணீருக்குள் தெய்வச் சிலை தெரிந்தால்  அதிசயம் என்கிறோம்
பன்னீருக்குள் தெய்வச் சாயல் கொடுப்பவளை  தெய்வத்தாய் என்றால் அவை மிகையில்லை!

# கவிதையின் காதலன்

புரை - குரள் வளை

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...