søndag 16. september 2018

பேசாலை கிராமத்துக்கு துறைமுகம் தேவைதானா?

பேசாலை கிராமத்துக்கு துறைமுகம் தேவைதானா? பேசாலைதாஸ்

அன்பர்களே! பேசாலையில் அமையவிருக்கும் துறைமுகம் சார்ந்த எனது பதிவை முன்பு எழுதினேன்.இப்போது அதன் சாதக பாதக நிலைமகளை எனது சிற்றறிவுக்கு எட்டியவையில், உங்கள் முன் வைக்கின்றேன்.  முதலாவதாக எமது கிராமத்தின் மீன்பிடி தொழிலை எடுத்துக்கொண்டால், இழுவைப்படகினால் செய்யப்படும் தொழில் முறையை முற்றாக கைவிடவேண்டும். ஆனால் அதற்கு இந்தியாவின் இழுவைபடகு தொழில் பெரும் தடையாக இருக்கின்றது. கடந்த சுனாமியின் தாக்கத்தினால், ஜோர்ஜ் மற்றும் பேதுரு திடல்களில் இருந்த பவளப்பறைகள் பெருமளவு சேதம் அடைந்தன, இதனால் மீன்களுக்கு தேவையான பிளாங்டன் கடல்தாவரம், மற்றும் நுண்மீனுண்ணிகள் அழிந்தன், இதனால் மீன் உற்பத்தி பெருமளவு பாதிப்படைந்தது.  இருக்கின்ற மீன் வளங்களை இழுவைப்படகின் பலகையால் அடிவாரி இழுப்பதால், மீன் குஞ்சுகள் முட்டைகள் முற்றாக அழிகின்றன. பற்றாக்குறைக்கு சுருக்கு வலை, பட்டாசு இவைகளினால் பெருமளவு மீன்வளம் குன்றிப்போய்யுள்ளது.

                                                         இதற்கு என்ன செய்யவேண்டும் என்பதனை நாம் ஆய்வு செய்தல் வேண்டும். முதற்கட்டமாக எமது ஊரின் கடல் எல்லைக்குள். இழுவைப்படகு முற்றாக தடை செய்யப்பட வேண்டும். அத்துமீறி வ்ரும் இந்திய இழுவைபடகு அதன் பலகை, மடி, வலை ஏன் இழுவைப்படகே சேதம் அடையும் அளவுக்கு, எமது கடல்பரப்புக்குள் தடைகளை ஏற்படுத்தவேண்டும். பாரிய இரும்பு, மரங்கள், பெரும் கற்கள் கொண்டு கடலில் போடப்படுவதினால், அதில் உற்பத்தியாகும் பவளம், மற்றும் ஒட்டுண்ணி தாவரங்கள், கணவாய் முட்டைகள், என்பன பாரிய அளவில் பெருகும் வாய்ப்புகள். உண்டு. எமது பாரம்பரிய கரவலை தொழிலில் ம‌ரங்கள் கடலில் போடப்படுவதும். வள்ளத்தின் அடியில் புழால் எண்ணை தடவுவது இதற்கு ஓர் எடுத்துக்காட்டு. எனவே எமது பாரம்பரிய, மரபு தொழிலுக்கு சற்றும் ஒத்துவராத இழுவைப்படகை எமது ஊரின் நன்மை கருதி, கைவிடவேண்டும். அந்த இழுவைப்படகு ஒன்றுக்கு மட்டுமே துணை போகும் இந்த துறைமுக வசதி எமது ஊருக்கு நன்மை அளிக்கப்போவதில்லை!

                                                  புயல்காலங்கலில் எமது வள்ளங்கள், படகுகளை காப்பாற்ற பாதுகாப்பான இடம் தேவை என்று நீங்கள் எதிர்வாதம் செய்யலாம். அதற்காக கோந்தைப்பிட்டிக்கு ஓடவேண்டிய அவசியம் இல்லை. கடல் நீரை நிலப்பரப்புக்குள் உள்வாங்கி செய்யப்படும் துறை முகத்தைவிட, கடற்கரையில் இருந்து கடலுக்குள், மண்ணையும் கற்களையும் கொண்டு, குடாவடிவிலான செயற்கை அனையை எமது ஊர்மக்களின் சிரமாதானம், மற்றும் சிறு பணமுதலீட்டுடன் இதனை செய்யலாம். அதனை எமது ஆலைய பங்குசபை செய்வதற்கு முன்வரவேண்டும். சிறிது சிறிதாக‌ ஐந்து வருட எல்லையில் இதனை செய்யலாம். இதனால் இயற்கையான கடல் அரிப்பில் இருந்து, குறிப்பிட்ட எல்லைகளையாவது இது காப்பாற்றும். எதிர்கால சந்ததிக்கு, எமது ஊரிலே கடல் பாதுகாப்போடு கூடிய அணை வீதியை அமைத்து கொடுக்கலாம்.

                                               பல்தேசிய (காபரேட்டு) உதவிகள் மூலமாக வரும், எந்த திட்டங்களையும் எமது கிராமம் உள்வாங்குவதினால் ஏற்படப்போகும் அபயங்களை உய்த்தறியவேண்டும்! ஆசிய அபிவிருத்தி என்ற எண்ண வடிவமே, முற்றும் முழுதும் சர்வதேச பல்தேசிய அபிவிருத்த்யின் நோக்கத்துக்கு உட்பட்டது. அதனால் சாதாரன உள்ளூர் மீனவனுக்கு என்ன இலாபம் என்பதனை அறியவேண்டும். இழுவை படகுகளின் தரிப்பிடத்துக்கும், பழுது பார்பதற்கு மட்டுமே இது எமது ஊரவனுக்கு பயண்படும். இழுவைபடகே சாபம் என்கின்றோமே! ஐஸ் தொழில்சாலை வரும் என்கின்றார்கள். உள்ளூர் மீனவனுக்கே சாப்பிட மீன் இல்லை. இதில் ஏற்றுமதிக்கு ஐஸ் தேவைதானா?

                                         பேசாலைப்பாடு பேசாலை ஊரவனுக்கும் பேசாலைபங்குக்கும் உரியது! எமது மனைவிமாரை அடுத்தவனுக்கு கொடுத்தாலும், எமது பாட்டை யாருக்கும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்கின்ற எனது ஊரவனின் மனக்கிடக்கையை சற்று எண்ணிப்பார்க்கவேண்டும். உத்தேச‌ துறைமுகத்தின் அதிகார பிரயோகம், தீர்மானம் யார் கையில்? பேசாலை ஆலைய நிர்வாகத்திடமா? பல்தேசிய நிறுவணத்திடமா? அரசாங்கத்திடமா? இது முக்கியமான கேள்வி! ஜாக்கிரதையாக இருங்கள், என் உறவுகளே! அபிவிருத்தி என்ற போர்வையில், தமிழ் கிராமங்களின் தனித்தன்மை சிதறடிக்கப்பட்டு, அதன் வழியாக இனக்கலப்பு செய்து, தமிழருக்கான தேசிய எண்ணத்தை சிதைக்கும் மறுவடிவம்  அபிவிருத்தி என்கின்ற செப்படி வித்தை என்பதனை கண்டுகொள்ளுங்கள்! நான் உண்மையில் அபிவிருத்திக்கு எதிரானவன் அல்ல, ஆனால் அபிவிருத்தியும், இன சிக்கலுக்கான தீர்வும் ஒரே பாதையில் முன்னெடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றேன். புண்ணில் இருக்கும், அழிக்கும்கிருமிகளை அகற்றாமல், புண்ணுக்கு துணிகட்டி மறைப்பது போல, நல்லாட்சி அரசு அபிவிருத்தி என்ற நாடகத்தை நடத்துகின்றது. எல்லா அபிவிருத்திகளும், பொருளாதார நலன்களும் ஒரு இரவோடு இரவாக இனவாத பூதம் விழுங்கிவிடும். ஜாக்கிரதை!

                                 மீன்பிடியில் தலைசிறந்த  நோர்வே நாட்டில் நான் வசிக்கின்றேன். அங்கிருக்கின்ற கடலோடு உறவு கொண்ட, சிறு சிறு குட்டைகளும், குடாக்கரைகளும், கற்பாறைகளும், அதன் இடுக்குகளும், நோர்வே மீன் வளத்துக்கு துணை போகின்றன. மீன்கள் குஞ்சி பொறிக்க இப்படியான நீர் நிலைகள் அவசியம்.  தாழஞ்செடிகள், சவுக்கு பற்றைகள் இவைகள் எமது கடற்கரையில் உண்டு எமது மீன்வளத்தை பெருக்கும் எண்ணம் எம்மிடம் இல்லை. நான் கோடை விடுமுறைகளில் கிரேக்க தீவுகளுக்கு சென்றுவருகின்றேன். அங்குள்ள கடற்கரைகளை விட எமது கடற்கரை அழகானவை ஆனால் பராமறிப்பு இல்லை. காகிதப்பூக்கள்(போகன்வெலா) இதுதான் கிரேக்க கடற்கரையோரம் வளர்க்கபடுகின்றன, சுத்தமான வெண்மணல் கடற்கரை அழகிய பூக்கள், வெப்பம், இதுதான் கிரேக்க கடற்கரையின் இரகசியம். அது எமது ஊரில் இல்லையா? கிரேத்தா என்ற தீவு, மன்னார் தீவு போல இரு மடங்கு, தினம் தோறும் 10 விமானம் வந்துபோகின்றது, அப்படியானல் அந்த தீவின் வருமானம் பற்றி எண்ணிப்பாருங்கள்!

                            இவனுக்கு என்ன வெளிநாட்டில் இருந்து கொண்டு சுகமாக, சும்மா பேசுகின்றான் பேசாலைதாஸ் என்று எண்ணிவிடாதீர்கள்! . என் குடும்பம் மட்டில் சில இலட்சியத்தோடு வாழ்கின்றேன். கிட்டதட்ட வெற்றி பெற்றுவிட்டேன், விரைவில் வருவேன் என் இறுதிக்கால வாழ்வு என் ஊருக்காக, என் அன்னைக்காக என்ற எண்ணத்தோடு,,,,,,,,,,
                                                                                                     என்றும் பேசாலைதாஸ்


Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...