mandag 25. desember 2017

மார்கழி நிலாக்காலமும் நத்தார் பண்டிகையும்!

மார்கழி நிலாக்காலமும் நத்தார் பண்டிகையும்!

பேசாலை பங்கின் கிறிஸ்மஸ் கொண்டாட்ட நிகழ்வுகள் கார்திகை மாதம் இறுதி நாள் கொடியேஏற்றத்துடன் களைகட்ட ஆரம்பித்துவிடும். பண்டிகை கால சாறிக்கனவுகள், இளங்குமரிகளின் வண்ண சட்டைக்கனவுகள் சிறகடிக்க, இந்திய சாறி வாங்கும் பயணங்கள் ஆரம்பமாகும்! கார்த்திகை மாத தொடக்கத்திலேயே அம்மாக்கள் கோழி முட்டைகள் சேர்க்க ஆரம்பிப்பார்கள். கிறிஸ்மஸ் பண்டிகை என்றாலே அரிசி மாவிலே செய்யப்படும் ஊர்கேக்கு இப்பவும் வாயில் எச்சில் ஊறுகின்றது. அமெரிக்கா McDonald  KFC இதெல்லாம் எங்கட பெத்தாச்சிமார்கள் செய்யும் ஊர் கேக்கு இணையாகுமா?  கார்த்திகை மாத இறுதியில் கொடியேற்றம் பட்டாசு வெடி ஓசையோடு ஆரம்பமாகும். ஒன்பது நாள்( நவ நாள்) கொண்டாட்டம் ஒவ்வொரு நவநாளையும் ஒவ்வொரு பட்டம் தரித்தவர்கள் கொண்டாடுவார்கள்.லெம்பேட் குருஸ் பெர்ணன்டோ பிரீஸ் இப்படியாக ஒவ்வொரு பட்டக்காரனும் உனது நவநாள் சிறப்பா? எனது நவநாள் சிறப்பா? என்ற போட்டி! பட்டாசு வெடி ஓசைக்ளே வெற்றி தோல்விகளை தீர்மானிக்கும். அதற்கு ஏற்றாற்போல வாடை காற்றின் அமோக இறால் பாடும் கைகொடுக்கும்: சிறுவர்களாகிய எங்களை சொல்லவா வேண்டும்? நவநாள் கொடி மணியுடனே ஊருக்குள் வலம் வருவதுடன் பீடத்தில் உதவுவதில் பெரிய போட்டி! ஒவ்வொரு நவநாளிலும் மாதா சிரூபத்தை கோவில் பின் பக்கத்தில் இருந்து மணி ஓசையுடன் சுவாமி பீடத்திற்கு ஏந்தி வருவார் அப்போது மாசில்லாமல் உற்பவித்த எங்கள் மாதாவே என்ற பஜனையை N.A.Dias சங்கீர்தம்பிள்ளை மூச்சுவிடாமல் பாடுவார் ஆலயமணிகள் ஒலிக்கும்,  பட்டம் தரித்தவர்களின் பட்டாசு வெடிகள் கதைப்பிளக்கும்! குறும்புக்கார இளைஞர் சிலர் மாவில்லாமல் அப்பம் சுட்ட எங்கள் பெதாச்சியே! என்று கிண்டலாக பாடுவது இன்னமும் துருவ‌ நாடு வரை கேட்கின்றது. இறுதி நாள் வேஸ்பர் முன்பு இரவிலே சருகை தேர்க்கூட்டிலே வண்ண விளக்குகளுடன் அன்னையை தேரில் ஏற்றி கோவில் வலம் வருவார்கள் அற்புதமான இரவுக்காட்சி! இப்போது வெறும் கனவாகவே வந்து போகின்றது! அடுத்த நாள் ஆடம்பர பூசையுடன் கோவில் விழா நிறைவு பெற, கிறிஸ்மஸ் பண்டிக்கைகான ஆயத்தவேலைகள் ஆரம்பமாகும். பாட்டுக்கர குமரிகள் இரவு வேலையில் பாட்டு பாடுவதும், அதை நோட்டம் விட்டு காதல் அம்பு தொடுக்கும் காளையர் கூட்டமும் களிப்பான காலம் அது! அம்புறோஸ் ஐயா குடில் அமைப்பதில் தனது எண்ணத்தை காட்ட, கரோல் இசையில் புதுமை புகுத்தும் செபஸ்டியான் குருஸ் மாஸ்டர்! ஆடினதெப்படியோ ஆஞ்சுகள் என்ற அந்த கரோல் பாட்டும், பிளசிடஸ், பிராகாசம் லெம்பேட் இணைந்து வெளியிட்ட முசாகிரீ நானா என்ற பாணியில் இரவில் வந்த இரட்சகரை என்ற அந்த கரோல் பாடல் இன்னும் இன்னும்,,,,, காதில்!இனிவருமா அந்த பொற்காலங்கள்  அன்புடன் பேசாலைதாஸ்

Ingen kommentarer:

Legg inn en kommentar

கடவுளின்_கனவு

Roy Croos Amburose   # கடவுளின்_கனவு கடவுள் படைக்கும் முன்னும் படைப்பின் பின்னும் கண்ட கனவு பலிக்கின்றது அவ்வாறு...