fredag 9. februar 2018

காதலின் தூக்குக் கைதி....


காதலின் தூக்குக் கைதி....
எந்தன் உயிரே என்னை பிழியாதே
மின்னல் கோல் கொண்டு
நெஞ்சம் பிளக்காதே !
வெள்ளைக் காகிதத்தின்
உதிரத் துளி போல - எந்தன் காதல், வார்த்தைத் தூரிகையால்
கோப வண்ணம் கொண்டு
என்னை அழிக்காதே!

உள்ளத் தீக் கிடங்கை
அள்ளிப் பார்க்கையிலே,
ஆயிரம் சிதிலங்கள் !
ஒவ்வொன்று
வெறுப்புத் தழலில் வேகவைத்து
காதல் நீரில் வாட்டியவை!
இடுக்கி கொண்டு ஈர இதயத்தை
அழுத்திப் பிழிகிறாய்!
இரத்தக் குழாய் அடைப்பை
ஊசிக் கோல்கள் கொண்டு
மெல்லக் கிழிக்கிறாய்!
மெத்தைப் பாதணி நான்,
கொத்து நெருஞ்சி முள் நீ !
சுள், சுள் என்று தேகம் தைக்காதே!
கருந்துரைக் கோள் காட்சிகள் போல கற்பனை மட்டும் தான்
என் காதல் சாட்சியோ?
கானல் நீரின் காகித ஓடத்தை
களவுப் பார்வையில்
நிஜமாக்கித் தந்தவளே!
நீராம்பல் என் மீது
செந் சந்தன மனம் தூவு!
வாடும் நிலையிலும் வாசத்தால்
முகம் மலர்கிறேன்.
வாடா மல்லியும் வாடிப் போதல் நியதியல்லோ?
கருமுகில் கானகத்தில்,
காக்கை புகுந்தால்,
நிறம் தான் மாறுமோ?
உன் கடுங்கோப இதயத்தில்
என் குருங்காதல் நுழைந்தது
கோலம் தான் மாறுமோ?
கண்ணீர்த் தடாகத்தில்
வேதனை பனிக்கட்டியாய் வீழ்கிறேன்! கரைந்தொழுகி மறைவதை
யார் தான் தடுப்பாரோ?
உலைக்குள் உருகும்
கரும்புச் சாறுகள்,
இதமாய் நாவில் இனிப்பது போல, மழைக்குள் நனையும்
காளான் குடை நான்!
தென்றல் காற்றை
வரமாய் கேட்கிறேன்.
வா! வந்து என்னைத் தொடு !
மோகம் கொஞ்சம் கொடு!
தூக்குக் கைதிகள்,
சாகா வரம் கேட்டால்
உலகம் தான் கொடுக்குமோ ?
நான் இன்று காதலில் தூக்குக் கைதி....
# கவிதையின் காதலன்.
# கவிதையின் காதலன்.

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...