tirsdag 27. februar 2018

அவலங்கள் ஓய்வது எப்போது? கவிதையின் காதலன் பேசாலை



அவலங்கள் ஓய்வது எப்போது?


சிரி என்று முதலில் தொடங்கி
சிரியாமல் ஓய்ந்த சிறிய வசந்தமே
மேற்குலக சூழ்ச்சிக்கு
உதிரம் கொடுத்து உலர்ந்து போன
 கலியுகச் சின்னமே,

கொத்துக் குண்டுகள் உன்னை
கொன்று குதறுகையில்
கொட்டாவி விட்டாயோ?
பட்டுச் சிதறும்
தோட்டாவின் நுனியினில்
பச்சைக் குழந்தையின்
குருதியை கண்டாயோ?

வெடிகுண்டு அறுவைச் சிகிச்சையில் மிஞ்சிய கைகளை பற்றி அழும்
பச்சைக் குழந்தையை பார்!
அப்பா மடிந்தது தெரியாமல்
அப்பாவியாய் புன்னகைக்கும்
பாலகப் பூக்களை
ஏனென்றாவது கேள்!

மூர்க்கக் குணத்தில்
மூடர்கள் வீசிய
மதம் பூசிய குண்டுகளில்,
மனிதம் இங்கே செத்துக் கிடக்குதே!  ஆக்கப்படாமலே,
ஐந்நூறு குழந்தைகள்
அடியோடு மண்ணில்
மண்டி மிதக்குதே !

ஐயோ! ஐநாவே!
உன் பை நாவை அசைத்து
எம் பசுங்கிளிகளை
நசுக்குவதை நிறுத்தச் சொல்!
சவக்காட்டுக்கும் மலர் தூவ
இங்கு பூக்கள் இல்லையே!
பூவையர் பூதவுடல்களே
மிஞ்சிக் கிடக்குதே!

வெள்ளை ஜிப்பாக்கள்
இரத்தச் சாயங்களை
வெளுப்பது சரியா?
செங்கண்ணீர் ஆற்றுச்
சடல ஊர்வலத்தில்
சிறுவர்கள் போவது முறையா ?

 ஐயோ!  ஏகாதிபத்தியமே !
ஆயுதத் தொழிற்சாலையின்
உலைகளுக்கு
மனித ஆயுள்களை
விறகாய் மாற்றாதே!
உன் அயோக்கிய நீதிகளுக்கு
மனிதச் சாதியை வைத்து
 மதச்சாயங்கள் பூசாதே!

பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில்
சோகத்கத் துகள்களை விதைத்து,
வஞ்சப் பூமிதனில் அனுதாபங்களை அறுவடைக்க முயற்சிக்காதே !
பசிக்கும் பாலுண்ணும்
பிஞ்சுகள் வாயில்
புசிக்கம் நீராக
செங்குருதி பருக்காதே!

கச்சா எண்ணெய் களவுக்கு
பச்சைப் பிள்ளையை
பழி கேட்டும் எச்சைப் பிறவிகளே ! மிச்சமின்றிக் கொன்று விடு !
இல்லையேல்
உன் கச்சைக் கோவணம் வரை
மிச்சச் சிறுவர்களால்
கருவருக்கப்படும்!

காட்சிப் பிழைகளாய்
யுத்த வடுக்களில்
மறைந்து நிற்கும் கடவுள்களே!
சாட்சிகள் இல்லாமல் சாய்க்கும்
என் மனித குலத்தைக் காக்க
அவதாரம் எடுங்கள்!
இல்லையேல் அரிதாரம் பூசி
சவக்கிடங்கிலே படுங்கள்!

மனிதனைக்  காக்காத கடவுள்கள்  மதங்களை ஆழ்வதில் என்ன பயன்?



Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...