tirsdag 27. februar 2018

அவலங்கள் ஓய்வது எப்போது? கவிதையின் காதலன் பேசாலை



அவலங்கள் ஓய்வது எப்போது?


சிரி என்று முதலில் தொடங்கி
சிரியாமல் ஓய்ந்த சிறிய வசந்தமே
மேற்குலக சூழ்ச்சிக்கு
உதிரம் கொடுத்து உலர்ந்து போன
 கலியுகச் சின்னமே,

கொத்துக் குண்டுகள் உன்னை
கொன்று குதறுகையில்
கொட்டாவி விட்டாயோ?
பட்டுச் சிதறும்
தோட்டாவின் நுனியினில்
பச்சைக் குழந்தையின்
குருதியை கண்டாயோ?

வெடிகுண்டு அறுவைச் சிகிச்சையில் மிஞ்சிய கைகளை பற்றி அழும்
பச்சைக் குழந்தையை பார்!
அப்பா மடிந்தது தெரியாமல்
அப்பாவியாய் புன்னகைக்கும்
பாலகப் பூக்களை
ஏனென்றாவது கேள்!

மூர்க்கக் குணத்தில்
மூடர்கள் வீசிய
மதம் பூசிய குண்டுகளில்,
மனிதம் இங்கே செத்துக் கிடக்குதே!  ஆக்கப்படாமலே,
ஐந்நூறு குழந்தைகள்
அடியோடு மண்ணில்
மண்டி மிதக்குதே !

ஐயோ! ஐநாவே!
உன் பை நாவை அசைத்து
எம் பசுங்கிளிகளை
நசுக்குவதை நிறுத்தச் சொல்!
சவக்காட்டுக்கும் மலர் தூவ
இங்கு பூக்கள் இல்லையே!
பூவையர் பூதவுடல்களே
மிஞ்சிக் கிடக்குதே!

வெள்ளை ஜிப்பாக்கள்
இரத்தச் சாயங்களை
வெளுப்பது சரியா?
செங்கண்ணீர் ஆற்றுச்
சடல ஊர்வலத்தில்
சிறுவர்கள் போவது முறையா ?

 ஐயோ!  ஏகாதிபத்தியமே !
ஆயுதத் தொழிற்சாலையின்
உலைகளுக்கு
மனித ஆயுள்களை
விறகாய் மாற்றாதே!
உன் அயோக்கிய நீதிகளுக்கு
மனிதச் சாதியை வைத்து
 மதச்சாயங்கள் பூசாதே!

பிஞ்சுக் குழந்தைகள் நெஞ்சில்
சோகத்கத் துகள்களை விதைத்து,
வஞ்சப் பூமிதனில் அனுதாபங்களை அறுவடைக்க முயற்சிக்காதே !
பசிக்கும் பாலுண்ணும்
பிஞ்சுகள் வாயில்
புசிக்கம் நீராக
செங்குருதி பருக்காதே!

கச்சா எண்ணெய் களவுக்கு
பச்சைப் பிள்ளையை
பழி கேட்டும் எச்சைப் பிறவிகளே ! மிச்சமின்றிக் கொன்று விடு !
இல்லையேல்
உன் கச்சைக் கோவணம் வரை
மிச்சச் சிறுவர்களால்
கருவருக்கப்படும்!

காட்சிப் பிழைகளாய்
யுத்த வடுக்களில்
மறைந்து நிற்கும் கடவுள்களே!
சாட்சிகள் இல்லாமல் சாய்க்கும்
என் மனித குலத்தைக் காக்க
அவதாரம் எடுங்கள்!
இல்லையேல் அரிதாரம் பூசி
சவக்கிடங்கிலே படுங்கள்!

மனிதனைக்  காக்காத கடவுள்கள்  மதங்களை ஆழ்வதில் என்ன பயன்?



torsdag 22. februar 2018

ஆரணங்கே_நாணமோ!



ஆரணங்கே_நாணமோ!

நுனி மேவிய புனலினில் தலை சாய்ந்த
புல் போலே நாணிக் குனிந்த ஆரணங்கே
நாணலின் காரணம் யாரணங்கே
தாய் மாமனோ தனியே வந்தவனோ!

கண்ணிலே மின்னொளி
கழுத்திலே நகையொளி
முகத்திலே காதலொளி
அகத்திலே யாரொலியோ!

மார்புக் கச்சை விலகியதே
கொங்கைகளின் ஏக்கங்களில் ஏகாந்தமோ
உடுக்கை போலே சிறுத்த இடை மாமனையும் மயக்குமே
உன் அடி வருடி வந்தவனையும்
இழுக்குமே
அந்தப்புர அழகை ரசிக்க ஓராயிரம் கண்கள்  போதாதே!

றோய் குருஸ் அம்புரோஸ்

onsdag 21. februar 2018

தூரத்து மின்மினிகள்.... !

தூரத்து மின்மினிகள்.... !
காலக் கணக்குகளின் 

விதிமுறை மீறல் இது !
உள்ளக் கிடங்கின் 
காதல் ஆழங்களை
காலங்கள் தொட்டு
விளையாடுவது ஏனோ!
காத்திருப்பை
கடிகார முள்ளாக்கி
எண்ண ஓட்டத்தில்
சுழலச் செய்வது நீதியோ?

உன் நினைவுத் தரிப்பிடம் நான்
நிறுத்தாமல் கடக்கும்
தொடர்வண்டியாகிறாய்!
திரும்பிப் பார்த்தால்
புன்னகைக்கும்
வாழ்க்கைக் குறிப்பு என்னை
பயணச் சீட்டாய்
பயன்படுத்தி எறிகிறாய்!
வழிப்போக்கன் என் பயணத்தில்
வேதனைக் காற்றால்
வெப்பம் சொரிகிறாய்!
தூரத்து மின்மினிகளை
தொடத் துடிக்கு போராட்டம்!
இரவின் கைகளாய்
மறைந்து நிற்கிறேன்,
வெளிச்சம் காட்டி என்னை
ஏமாற்றிச் செல்கிறாய்!
காதலெனும் தேன் கூட்டை
தீப்பந்தம் காட்டி
உருகச் செய்கிறாய்!
நாதியற்ற நாட்டவன் நான்
ஆயுதப்போர் தொடுத்தல்
அறமோ சொல்?
என் கனவுக் கோட்டைக்கு
செங்கல் சுமக்கிறேன்.
தாகம் தணிக்க
கானல் நீ்ர் தருகிறாய்!
அலங்கார மாளிகையில்
அலங்கோலக் கோடு வரைகிறாய்!
கற்பக் கிரகத்தில்
காதலைக் குடிவைக்கிறேன்
பறவை எச்சமாய்
சிலையில் வலிகள் இடுகிறாய்.!
என்னால் மட்டும் உணரக் கூடிய
என் வலிகளை
உன் கண்ணால்
உணர்வது எப்போது?
நமக்குள் தூரம்
அதிகம் என்பதால்
ஏக்கக் குறிகளை
தூது அனுப்புகிறாயா?
கடல் தாண்டித்
தூரம் நின்கிறேன்
வண்டைத் தூதனுப்பி
வதைக்காதே!
தாழமுக்க வேதனைக்கு
அடை மழையைப்
பரிசளிக்காதே!
மூழ்கும் சிற்பி நான்,
முத்தெடுக்க வா !
இல்லை அலையாய் மாறி
என்னைக் கரை சேர்!
நம் காதல்
கரை சேரும் நாள் தான்
என் உள்ளக்கிடங்கில்
பற்றி எரியும் தீ அணையும்.....!
# கவிதையின் காதலன்.

tirsdag 20. februar 2018

திண்ணை வீடு

தென்னைமரக் காற்றும்,
தெம்மாங்குப் பாட்டும்!,
தென்றலின் வருடலும்,
தெவிட்டாத மெட்டுக்களும்!,
தெய்வீகத் துளசியும்,
தெய்வமே இவ்வீட்டிலும்!,
அழையா விருந்தாளியான,
வெண்ணிலாவின் வருகையும்!,
மங்களக் கொண்டாட்டங்களும்,
அடிக்கடியே வந்துபோகும்!,
திருவிழா விழாக்கோலமாக,
தினமும் சமையல்சாதம்!,
தேனிக்களின் கூடுபோலே,
சின்னச்சின்னக் குடும்பமாய்!,
மகிழ்ச்சிகளின் மணிமகுடமாய்,
மலர்ந்திடும் வீடுகளாமே!
CROOS.A.H

தானாய் விரையும் கால்கள்.....!

தானாய் விரையும் கால்கள்.....!

கருக்குவாச்சி காட்டுக்குள் 
பொடி நடை போகிறேன்.!
செயலிழந்த துணைக்கோள் 

மட்டும் கூட வருகிறது..!
அந்தி பூத்த நேரமிது
குங்குமம் தூவிய வானம்
என் முகத்தில் சற்று
வர்ணக் கலவை பூசி இருந்தது..!

என்னுடன் கவி புணைய
கற்பனைக் கோலும்
எண்ணத்தாள்கள்
மட்டுமே இருக்கின்றன..!
இடுப் பொடிந்த
இலைச் சருகுகள்
என் பாதக் காவலன்!
குவளைத் தண்ணீராய்
தெளிந்த நீரோடையில்
கால் பதிக்கிறேன்.!
அறிவிப்பின்றி குளிர்மை
என் கால்களை கற்பழிக்க
விறைத்த தேகத்தோடு
இன்பச் சுகத்தில் மிதக்கிறேன்.!

இயற்கை மனிதனைப் புனருகையில் இத்தனை சுகங்களா ?
சுதாகரித்துக் கரை சேர்கிறேன்!

எங்கோ கேட்ட ராகம் ஒன்று
செவிப்பறையை உரச
தனிமை உணர்வில்,
இனிமை பூசி இசையை ரசிக்கிறேன்!
குயிலின் குருநாதத்தில்
குருவி இசைச் சமர் செய்வதை
நான் கேட்கிறேன்!
ஓசைக் காற்றின் ஒய்யாரங்களைச் சுவைக்காதவன்
வாழ்ந்தென்ன பயன் ?
என மனதுள் மனிதத்தைக்
கடிந்து கொள்கிறேன்.!

மூச்சிழுத்துப் பார்க்கிறேன்
நுரையீரல் வரை
ஈரக்காற்று போய் வருகிறது.!
எண்ண அலைகளில்
ஏதோ ஒரு தித்திப்பு!

சிற்சில விலங்குகளின் நடமாட்டம்
கண்ணில் தென்படுகிறது!
அந்த மான் கூட்டம் சாந்தமாய்
ஊர்வலம் நடத்துவது ஏனோ?
பதாதைகளும், இரைச்சலும்
இல்லாத பேரணிகள்
இப்படித்தான் இருக்குமோ?
சந்தேகக் கேள்விகளை
உள்ளுக்குள் தொடுக்கிறேன்.!
பகுத்தறிவு இல்லாத மனிதன்
நன்றாய் இருந்திருப்பானோ?
கேள்விக் கணைகளுடன்
மெல்ல நகர்கிறேன்!

அந்த மலை முகடுகளில்
மேகப் பாய்களை
விரித்து வைத்தது யார்?
காற்று கூட மலையின் அடியில்
கட்டி வைக்கப்பட்டுள்ளதா?
என வினவுகிறேன்!
மேகத்தை மோகம் கொள்ள
காற்றுக்குத் தடை போட்டவனை
சுற்றிலும் தேடுகிறேன்!
பதில் கிட்டாத கோவத்தில்,
சாயம் போன மேகங்களுக்கு
விடுமுறை தான் இல்லையோ?
என இயற்கையை
கடிந்து கொள்கிறேன்.!

சல சலத்த ஓடை வழி,
அதன் தாய் குளத்தை அடைகிறேன்.!
பசுமைத் தொட்டியில்
மேகம் தண்ணீர் இறைத்து
மூன்று நாள் தான் ஆகிறது,
புது தேகத்தில்
சூரியக் கதிர் உடை அணிந்து
நிசப்தப் பொய்கையாய்
நீர்த்தாய் காட்சி தருகிறாள்.!

மெல்லிசைக் காற்று
காதை உரச
சிந்தை இயற்கையை வைத்து
பிரம்மிப்புக் கோலம் தீட்டுவதை உணர்கிறேன்.!

என்னை யாரோ தொடுவதாய்
மெல்லத் திரும்புகிறேன்.!
தென்னை இலையின் கீற்று
குளத்தில் ஏதோ கிறுக்குகிறது.!
என்னை அறியாமல் அவ்விடம் விரைகிறேன்.!

பொன்னிறக் குளத்தில்
மேகங்கள் மட்டும்
முகம் நனைத்து நீராடுகிறது.!
காலப் பெருவெளியில் நாம்
தொட்டுணராத தருணங்களை
தனிமை தான் உணர்த்தும்,
இவற்றை குழம்பிய மனதுடன்
தெளிந்த ஓடையில் காண்கிறேன்.!

என் உஷ்ண தேகத்தை குளிர்விக்க 

இயற்கையால் மட்டுமே முடியும்
என முடிவுரை வரைகிறேன்!
வீட்டை நோக்கி விரைகிறேன்!
இப்போது துணைக்கோள்
துணிவு பெறுகிறது.!
வெளிச்சத்தை பிரசவிக்கிறது.!
காலம் வரும் காத்திரு என்ற
தத்துவத்தை
உள்வாங்கிக் கொள்கிறேன்!

மனதின் இருண்ட கேள்விகளுக்கு
தனிமை எப்படி விடை சொல்லிற்று
என்ற வியப்பில்
நடையைக் கட்டுகிறேன்.!

இப்போது என்னுள் மண்டிய முடிவிலிகளுக்கு
விடைகள் கிடைத்தாயிற்று!
விடியலைத் தேடி
கிழக்கு நோக்கி
வேகத்தைக் கூட்டுகிறேன்.!
இப்போது தானாய்
விரைகிறது என் கால்கள்....!


# கவிதையின் காதலன்.

mandag 19. februar 2018

தேர்ந்தெடுத்த தெய்வம்....

தேர்ந்தெடுத்த தெய்வம்....
விழி நிறைந்து மனமுடைந்து
தளர்ந்து போகிறேன்,
இருள்கள் மூடும் வழிகள் எங்கும்
கடந்து போகிறேன்!
காவலாக யாரும் இல்லா
கானகத்து சாலையில்
காற்றின் ஊடே என் நேசதேவன்
காத்து கொள்கிறார்!
மோக வாழ்வில் தாகம் கொண்டு
பாவம் நான் செய்கிறேன்!
பாவி என்னை தேடி வந்து
பாசம் ஏன் கொள்கிறீர்?
ஆசையென்னும் பேரொளியை
தேடிப் போகிறேன்,
ஆத்ம தேவன் நாடி வந்து
என்னை மீட்கிறீர்!
கடிகார முள்ளாய்
உம்மைப்பிரிந்தாலும்
ஒரு புள்ளியில்
எனை அணைக்கிறீர்!
கரும்புகையாய் என் பாவங்கள்,
மேகமாய் உள்வாங்கி - என்னுள்
அன்பு மழையை பொழிவிக்கிறீர்!
 பாலைவனப் பூச்செடி என்னை
உம் தோட்டத்து மலராக மாற்றுகிறீர்! 
கூலாங்கல் நான்,
உம் கவனின் ஆயுதமாக்கி
உறையில் போடுகிறீர்!
உறைந்த பனிபாறை நான்
வெயிலாய் என்னை உருக்கி
உம் கருணைக் கடலில் ஏந்துகிறீர்! 
நெல்மணிக் குவியலில்
பறவையின் அலகு போல்
என்னை தேர்ந்து ஏற்றுக் கொண்டீர்!
உம்மைப் போல பிரியாத ஒருவர்
என்னோடு இருக்கையில்
பிரிவைத் தரும்
பொருளைத் தேடி
நான் ஏன் செல்ல வேண்டும்!
#
கவிதையின் காதலன்.

lørdag 17. februar 2018

பணங்கா வாடி

பணங்கா வாடி 

கிடுகுப் பெட்டியில் கழி மணக்கும்,
புளிச்ச வாசத்தில் வண்டுருளும், 
வெத்தில பெட்டிய துணியில் சுத்தி, 
அருவா கத்திய துணைக்கு வச்சு
சனஞ்சிலது வனம் விரையும்!

திருந்தாதி அடிக்கும் முன்ன
பனங்கா வேட்டை தொடங்கி விடும்,
பழைய சரமும் கிழிஞ்ச துண்டும்
சும்மாடா மகுடம் தரிக்கும்!
சார ஓலையில் பல்லுக் குத்தி
சக்கரக் கட்டி தேத்தனி ஊத்தி,
விடியும் முன்னே விடியல் தேடி
பெண்கள் கூட்டம் பஞ்சா பறக்கும்!

நடுக்குடாவும், புட்டிப்பாடும்
இரைச்சல் சத்தத்தில் தூக்கம் கெடும்!
சாமக் காத்து ஊர்கதைய
விடியும் வரை பேசித் தீர்க்கும்!
தொப்பி கழன்டு விழுந்த பின்தான்
பனம் பழமும் பல்லக்கு ஏறும்!

விழுந்து பிளந்தா பாத்திக்கு,
பழுத்து விழுந்தா பினாட்டுக்கு
என தனி தனியா தத்துவம் பிறக்கும்!

 மண்ணில் பனங்கா உருண்டிருந்தா
எடுக்க நூறு பக்குவம் இருக்கும்!

தேனி போல நடைய கூட்டி
பனங் கொட்டைய மலையா குவிச்சு,
பங்கு பிரிச்சு வெயிலில் போட்டா
வெறகு போல காஞ்சு வரும்!
அத தலையில் போட்டு வீடு வர
கிறு கிறு னு தலை விரைக்கும்!

மாட்டு வண்டில ஓல கட்டி,
கிடுகு பொட்டில பனங்கா தூக்கி,
மூனு நடை போயி வந்தா
முதுகுத் தண்டு கடுகடுக்கும்!
பாத்தி வெட்டி, கிழங்கு போட்டு,
பினாட்டு களிய பாயில் ஊத்தி,
காக்கா விரட்ட இறகு கட்டினா
கால் வயிறும் பசி எடுக்கும்!

காய்ச்சி குடிச்ச கஞ்சித் தண்ணி,
கழுவி வடிச்ச பனங்காய் தண்ணி,
அரிக்கஞ் சட்டியின் அடியில் கெடக்கும் ! 

அடுப்படியில் பணியார வாசம்
அடுத்த வீட்டு கதவ தட்டும்!

பினாட்டு சுமந்த ஓலபாய் தான்,
குடிச வீட்டின் சொகுசுக் கட்டில்!
பரட்ட தலை பாட்டி ஒன்னு,
சீவல் ஒடியல் கிளங்கு வெட்டும்!
ஒடியல் மாவில் புட்டவிச்சு,
போலப் பெட்டில பினாட்ட வச்சு,
கிடுகுப் பெட்டிக்குள் ஒடியல் வச்சா,
கடகப் பெட்டியும் கமகமக்கும்!

பனைய வச்சு பழச நினைக்க
பயித்தியமே பிடிக்கு தென்டு ,
பழைய கிழவி சொல்லும் போது
பகட்டு இலிப்பு இழிச்ச நாங்க ,
இப்ப பனம் பழத்த தேடி போறோம்
பன தறிச்ச காட்டுக்குள்ள...!

இருக்கிறப்போ இனிக்க திண்ணோம், 

இருக்க இடம்னு பனைய கொன்னோம்! 
எனக்கு தெரிஞ்ச ஒடியல் வாசம்,
என் தலைமுறையில் மறஞ்சிடுச்சே? 

பனங்காட்டு பருவமழைய
பதம் பார்த்து சொன்னவுக,
படுத்த கிடையா கெடப்பது போல்
பேசால சனத்து நெஞ்சில்
பனை உணவு படுத்திருச்சு,
பலநோய்கள் குவிஞ்சிருச்சு....!


# கவிதையின் காதலன்.

fredag 16. februar 2018

கல் முகட்டில் காருண்ய தெய்வம்.....!

கல் முகட்டில் காருண்ய தெய்வம்.....! 
கவிதையின் காதலன் பேசாலை
கல்வாரி மாமலையில்
மேகத் தோழர்களின்
இரங்கல் கூட்டம்!
கொடுமுடிக் குன்றின்
தேவயாத்திரைக்கு
சோக கீதங்கள் பாட
கண்ணீரோடு விரைகின்றன!
முள்முடிக் கிரீடம் அணிந்து,
அன்பரசர் செல்கையில்,
அடர் வனங்கள் வாடும்,
புட்கள் முகாரி ராகம் பாடும்!
வியர்வைத் துளிகள்
வழியில் வீழ்ந்து
வரள் நில மலையை
பசுமை வனமாய் மாற்ற,
பாரச் சிலுவை தூக்கி
தேவமகன் செல்கிறார்!
பாவம் பட்டு சிதைந்த நாவாய்,
வதைக் கடல் சுழலில்
சிக்கி நகர்ந்திடும் வேளையில்,
மானுட பாவப் பெட்டகம்,
மறு நொடியில் நொறுங்கி
மண்ணில் உதிரும்!
நாதன் சிந்தும் வியர்வை பட்டு,
கோரச் சிலுவை முகம் சிவக்க,
கல்முகட்டின் முகாரியில்
கருணை தெய்வம்
கரைவது பாரீர்!
இறைவன் திருவுடல்
தன் மேல் பட்டதும்,
உருகும் மெழுகாய்
கழுமரம் கண்ணீர் விடும்,
ஆணியின் கூர்முனைகள்
ஆண்டவன் குருதிச் சதை ஏந்தி
மார்பில் அடித்து அழும்!
இங்கு வலிகளே வழித்துணை,
காயங்களே மருந்தாய் மாறும்
அதிசயம் நிகழுது!
புண்பட்ட இதயங்கள்
திருரத்த துளியை
மருந்தாய் பெற்றிட,
சினேகர் வரும் வழியெங்கும்
தவமாய் கிடக்குது!
நானிலம் நோக்கிய
மானிடப் பயணத்தின்
மரண காண்டத்தின்
துன்பம் தாங்கி,
மலைச் சிகரக்
கொடும் பாறையில்
சாந்த தெய்வம்
உதிரம் சொட்ட
பாதம் வைக்கிறது!
காருண்ய தெய்வத்தின்
புனிதப் பயணத்தில்
நாமும் இணைவோம்....!
தவக்காலத்து குருதி நீரூற்றில் பாவங்களைக் கரைப்போம்...!
# கவிதையின் காதலன் பேசாலை.
இணைச் சொற்கள்
கொடுமுடிக் குன்று _ கடினமான உயர்ந்த மலைக் குன்று,
தேவயாத்திரை - புனித பயணம்,
சோக கீதம் - சோகப்பாடல், விரை- செல், அடர்வனம் - அடர்ந்த காடுகள், கிரீடம் - தலையணி , புட்கள்- பறவைகள், முகாரிராகம் - சோகமான ராகம், வரள் நிலம் - வரண்ட பூமி, வனம் - காடு, நாவாய் - படகு , குருதி , உதிரம் - இரத்தம், சினேகர் - இயேசு, நானிலம் - உலகம், காருண்யம் - கருணை

onsdag 14. februar 2018

மறாக்காது_கண்மணியே நிமிடக் குறும்படகவிதை!

மறாக்காது_கண்மணியே நிமிடக் குறும்படகவிதை!
 தயாரிப்பு: Movierasa_Pattinam_Entertainment
இயக்கம்:Havoc_Nivethan_Croos


பேசாலையின் இளம் புரட்சியாளர்கள் கவிதை வழித் தென்றலில் காதலைத் தத்தெடுத்து குறும்படத்தில் ஊடாக உண்மைக் கருத்துக்களை உணர்த்த விளைகிறார்கள்.

விதி மீறும் காதல் தா......!கவிதையின் காதலன் பேசாலை


   விதி மீறும் காதல் தா......!   கவிதையின் காதலன்பேசாலை 
இது தான் நீதியோ !
வலி தான் என் சாதியோ!
மனக் கூட்டில் மண்டிக் கிடக்கும்

கவியே என் ஆறுதல்!
புலம்பல் காவியப் பூக்களில்
இன்று நான் புது மலர் !
வாடா வசந்தங்கள்
என்னுள் வந்திட
வரம் கேட்டு வருகின்றேன்!
நிராகரிப்புக் கோப்பையின்
நீராகாரம் நான் - என்னை
மண்ணில் தெளிப்பதும்
அமிர்த்தப் பாலாய்
அள்ளி நுகர்வதும்
உன் வாயிலே உள்ளது!
வெட்டுண்ட வாளைகள்,
துளிர் விட வாய்ப்பில்லை!
விதிமுறை மீறி காதல் கேட்கிறேன். இரவலாக அல்ல இதயமாக......!


இனிய காதலர் தின வாழ்த்துகள்

tirsdag 13. februar 2018

முத்தத் தோட்டாக்கள்

முத்தத் தோட்டாக்கள் கவிதையின் காதலன்.

புருவங்களை இமைகள் காவு கொள்ள,
காதல் குளத்தில் பார்வைகளின் தற்கொலைத் தாக்குதல்!
இரு பால் இனமும் சம பாதிப்பில்,
ஆனால் உள் காயங்களால்
அதிகம் உழன்றது அவன் இதயம்.
அவளின் உதட்டுப் பிளவுகளின் வண்ணத்தை இவன் அபகரிக்க
உச்ச கட்ட மோகத்தில்
மோதல் கொள்கிறது - இந்த
காதலர் தினப் பனிப் போர்!
கைகள் கட்டப்பட்ட இப் போரில்,
முகங்கள் உணர்வுகளைக் கூட்டி போரிடுகின்றன!
எச்சில் தோட்டாக்கள்
வாய்வழிச் சுரங்கத்தில் மாறி மாறி தாக்குதல் நடத்த,
அவ்வப்போது நாக்குகள்
முறியடிப்புத் தாக்குதல் நடத்துகின்றன!
காதல் கோட்டையை
தக்க வைத்துக் கொள்ள,
நடக்கும் இவ் உள்நாட்டுப் போரில்,
உஷ்ணக் காற்றுக்கு மட்டும்
உட்புகுந்து வெளிவர அனுமதி!
வலிய யுத்தத்தில்
பற்கள் ஒவ்வொரு முறையும்
இருப்பை தக்க வைக்க
பற்றிப் பிடித்து
தாக்குதல் நடத்துகின்றன!
அவற்றுக்கு உதவியாக
நாக்கு அவ்வப்போது
பதுங்கித் தாக்குதல் புரிகின்றன!
உக்கிரப் போரின் முடிவில்
விதிமுறைகள் தளர்கின்றன, கட்டவிழ்க்கப்பட்ட கைகள்,
திடீரென அவளின்
தாடை தேசத்தில் கை வைக்க,
மோகப் பிழம்பில் எச்சில் காட்டாறு பெருக்கெடுத்து ஓடுகிறது!
அமைதி கேட்ட அங்கங்கள் யாவும்
புரட்சி ஆயுதம் ஏந்தியதால்,
இரு தேசங்களும் செய்வதறியாது நின்றன!
ஊடல் போர் வரக்கூடா தென்பதில் தெளிவான அவளரசியும், அவனரசனும் ஈற்றில் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்கின்றனர்!
இழப்பீடுகள் வழங்கப்படா
இப்போரில் வலிகளூடே நிவாரணம்
வழங்கியது சிறப்பு!
ஆனாலும் இரு தேசத்து அங்கங்களிலும் ஏக்கம் என்னும் வறுமை
தொற்றிக் கொண்டதை
யாராலும் தடுக்க முடியவில்லை!
# கவிதையின் காதலன்.

mandag 12. februar 2018

சாதிக்கும் பேசாலை ...John Belkan Fernando

சாதிக்கும் பேசாலை ...John Belkan Fernando
பேசாலை பிள்ளைகளா?

அவங்க மீன் வெட்டத்தான் லாயக்கு...!
பேசாலை பெண்களா?
சரியா வாயடிப்பாங்க...
பேசாலை பிள்ளைகளா ?
அதுகளுக்கு விளையாட்டு சரிப்பட்டு வராது!
பேசாலை பொண்ணுகளா ?
அதுகள் நக்கல் அடிக்கத்தான் லாயக்கு...!
பேசாலை பிள்ளைகள் கல்யாணம் முடிச்சா, அவங்க பாட்டுக்கு ஒதுங்கிடுவாங்க.....!
என்ன பேசாலையில கபடி விளையாடுறாங்களா?
அட சும்மா போங்கப்பா....!
பேசாலை பெண்களா ?
அதுகள சுலபமா தோற்கடிச்சிடலாம்.....!

இப்படி ஒரு காலத்தில் பேசிய மன்னார் மாவட்ட கிராமங்களுக்கு அதனை முறியடிக்கும் விதமாக மீண்டும் இன்று சாட்டையால் சவுக்கடி கொடுக்கப்பட்டது!
இன்றைய நிகழ்வோடு எங்கள் ஊர் பெண்கள் மீதான விமர்சனச் செப்பேடுகள் தவிடு பொடியாக்கப்படுகின்றன.
பாறைகளில் வேர் விட்டு
வெடித்து வளரும் செடிகளை
எதுவும் செய்ய முடியாது என்பது போல, பேசாலையின் பெண்கள் கபடி அணியின் விஸ்வரூபப் புரட்சி தான் இன்று மன்னார் மாவட்ட தலைப்புச் செய்தி.....!
ஒரு கையில் குழந்தை மறுகால் மைதானத்தை முத்தமிட கடின வேலைப் பளுவுக்கு மத்தியில் ஒரு பெண்மணி கபடி கபடி என்று மைதானம் நுழைகிறாள், ஏட்டளவில் படித்த ஓர் விளையாட்டு, இருந்தாலும் ஊருக்காக விளையாடப் போகிறோம் என்ற கர்வத்தோடு எம் பெண்கள் சிலர் களம் இறங்க, பத்திமா மைதானம் புழுதி மண்டலமானது.
வெறும் ஐந்து நாட்கள் அக்கினிப் பயிற்சி, எமது மண்ணின் கபடி ஜாம்பவான்களின் நேர்த்தியான பயிற்சியில் , இத்தனை வருட கால வரலாற்றில் இல்லாத ஓர் சாதனையாக விக்டரிஸ் பெண்கள் கபடி அணி மன்னார் பிரதேச சபை மட்ட அளவிலான போட்டியில் களம் கண்டது. தங்களை மிஞ்சிய ஜாம்பவான்கள் இல்லை என்ற தலைக்கணத்தில் ஏனைய அணிகள்
பகட்டுக் காட்சிகளை அரங்கேற்ற,
எம் பாதுகாவலியாம் வெற்றி அன்னையின் துணையுடன் களம் இறங்கியது எம் அணி.


" அவர்களின் ஒவ்வொரு அசைவும், விவேகப் பொய்கையில் நீராடி மகிழ்ந்தன, ஒவ்வொரு பிடியும், உடும்புக்கே மிரட்டல் விடுக்க, களத்தில் இறங்கி கபடி என்றதும் ஒரு நிமிடம் மைதானமே மிரண்டு போனது, விளையாட்டு சூடுபிடிக்க ஆரம்பித்தது நெருப்புப் பொறிகள் கதி கலங்கும் வண்ணம் எம் பிள்ளைகள் அனலாய் நின்றதும் அருகில் நின்ற எம்மவர் பேசாலையான் என்ற செருக்குடன் நெஞ்சை நிமிர்த்த, சொல்லி அடிக்கும் கில்லியாக புள்ளிகளை அள்ளி வந்தது எம் அணி.
கடந்த பல ஆண்டுகளாக தொடர் சாதனை படைத்து வந்த அணிகளை
ஆக்குரோச விளையாட்டால் துவசம் செய்து மன்னாரின் தலை சிறந்த பெண்கள் கபடிக் குழு என்ற பட்டத்துடன் பேசாலை விரைந்தது எங்கள் பெண்கள் அணி.
# சாதிக்கும் பேசாலையான்......
..

fredag 9. februar 2018

காதலின் தூக்குக் கைதி....


காதலின் தூக்குக் கைதி....
எந்தன் உயிரே என்னை பிழியாதே
மின்னல் கோல் கொண்டு
நெஞ்சம் பிளக்காதே !
வெள்ளைக் காகிதத்தின்
உதிரத் துளி போல - எந்தன் காதல், வார்த்தைத் தூரிகையால்
கோப வண்ணம் கொண்டு
என்னை அழிக்காதே!

உள்ளத் தீக் கிடங்கை
அள்ளிப் பார்க்கையிலே,
ஆயிரம் சிதிலங்கள் !
ஒவ்வொன்று
வெறுப்புத் தழலில் வேகவைத்து
காதல் நீரில் வாட்டியவை!
இடுக்கி கொண்டு ஈர இதயத்தை
அழுத்திப் பிழிகிறாய்!
இரத்தக் குழாய் அடைப்பை
ஊசிக் கோல்கள் கொண்டு
மெல்லக் கிழிக்கிறாய்!
மெத்தைப் பாதணி நான்,
கொத்து நெருஞ்சி முள் நீ !
சுள், சுள் என்று தேகம் தைக்காதே!
கருந்துரைக் கோள் காட்சிகள் போல கற்பனை மட்டும் தான்
என் காதல் சாட்சியோ?
கானல் நீரின் காகித ஓடத்தை
களவுப் பார்வையில்
நிஜமாக்கித் தந்தவளே!
நீராம்பல் என் மீது
செந் சந்தன மனம் தூவு!
வாடும் நிலையிலும் வாசத்தால்
முகம் மலர்கிறேன்.
வாடா மல்லியும் வாடிப் போதல் நியதியல்லோ?
கருமுகில் கானகத்தில்,
காக்கை புகுந்தால்,
நிறம் தான் மாறுமோ?
உன் கடுங்கோப இதயத்தில்
என் குருங்காதல் நுழைந்தது
கோலம் தான் மாறுமோ?
கண்ணீர்த் தடாகத்தில்
வேதனை பனிக்கட்டியாய் வீழ்கிறேன்! கரைந்தொழுகி மறைவதை
யார் தான் தடுப்பாரோ?
உலைக்குள் உருகும்
கரும்புச் சாறுகள்,
இதமாய் நாவில் இனிப்பது போல, மழைக்குள் நனையும்
காளான் குடை நான்!
தென்றல் காற்றை
வரமாய் கேட்கிறேன்.
வா! வந்து என்னைத் தொடு !
மோகம் கொஞ்சம் கொடு!
தூக்குக் கைதிகள்,
சாகா வரம் கேட்டால்
உலகம் தான் கொடுக்குமோ ?
நான் இன்று காதலில் தூக்குக் கைதி....
# கவிதையின் காதலன்.
# கவிதையின் காதலன்.

torsdag 8. februar 2018

ஆயிரம் கண்கள் வேண்டுமே
















ஆயிரம் கண்கள் வேண்டுமே!

ஆயிரம் கண்கள் வேண்டுமே, 
இப்பாரினில் ஆனந்தப் புன்னகைக் கோலங்கள் கண்டிட, 
மாதா உம் பாதத்தில் மாதவப் பிள்ளைகள் 
சீர் கொண்டு ஏற்றிய,பார் போற்றும் வெற்றிகள் 
கண்ணூடு பார்க்கவே ஆயிரம் கண்கள் வேண்டுமே...

பத்திமா மாதா பெயர் கொண்ட எங்கள், 
பேசாலைப் பள்ளியின் பேர் சொல்லும் பிள்ளைகள், 
தடகளச் சாதனையைத் தரணியில் பொறிக்கையில், 
அலை கடல் கூட்டமும் அதிர்ந்திங்கு ஆடுமே 
ஆனந்தக் கழிப்பினில் கும்மிகள் போடுமே!

வானத்து அதிதூதா், பேசாலைப் பதி மீது மூவர்ணக் 
கொடியோடு களமாடும் வேளையிலே, எம் கிராமத்துக் 
குடியாவையும், விளையாட்டுத் திறன் காண்கவே படை
சூழ்ந்திடும் நடு வீதியிலே, ஊர் தடுமாறிடும் சனப் பீதியிலே.. !

தனி ஆளுமை , சமயோசித, திறனாளர்கள் நடுவே, 
அணியாய் தம் கொடியேந்தியே தனியாய் படை விரையும், 
இசை வாத்தியம் திசை நான்கிலும் கசையாய் பட்டுத் தெறிக்க , 
அசைந்தாடியே கொடி ஏறிடும் மிசை வானிலே அழகாய்!

விண்மீன் காட்டின் வெண்மதிக் குழந்தைகள் 
பால்வெளி நுழைகையில், பிரபஞ்சத் தூரிகை 
மலர்ச் செண்டு தனை அள்ளி மைதான மடி மீது, 
துதி பாடி மழை தூவும், இயல் நாட்டிய எழில் 
காட்சிகள் இசையோடிங்கு ஜொலிக்க தழல் 
காற்றினில் குளிர் சுவாசங்கள் மனதை வந்து மயக்கும்.

தசையாடிட, திசை மூன்றிலும் இளையோர் தடம் பதித்து , 
ஒளியாண்டுகள் புயல் வேகத்தை இரு காலிலும் பொருத்தி , 
தரைமீதினில் தளராமலே அடி நூறினை பதித்து
அரியாசன சுழல் கோப்பையை அழகாய் தொட்டு 
முகர்ந்தால் அகவானிலும் நிழல் தோன்றுமே 
அழியாப் புகழ் மெருகால்..


# கவிதையின் காதலன்.

mandag 5. februar 2018

திசை மாற்றும் காதலே! குறுங்கதை எழுதியவர் கவிதையின் காதலன் பேசாலை


திசை மாற்றும் காதலே! குறுங்கதை

அவளுக்கு தெரியும் இப்படித்தான் நடக்கும் என்று, ஒவ்வொரு முறையும் நுகரும் அதே ஆடையும், தேனீர் கிண்ணமும் ஏமாற்றத்தைக் கடந்து வாழ்வின் புரிதலை புலப்படுத்தி விடுகின்றது. 

பணபோக விளைச்சல் நிலமாம், திருமணத் தேடலில் அலங்காரங்கள் என்பது மேடைக்கானது மட்டுமல்ல, பெண் பார்க்கும் படலத்துக்கும் தான்.

பணம், குடும்பம், நிறம், உயரம், உடல்வாகு, மூக்கு, என பல கோணங்களில் நிராகரிக்கப்பட்ட இவள் இம்முறை சந்தித்தது சற்று வித்தியாசச் சிக்கல் ஒன்று.

பள்ளி காலத்து எச்ச மொன்று மிச்சமாய் வளர்ந்து நின்று பதம் பார்க்கும் என்றும் சற்றும் எதிர் பாராது நொடிந்து போகிறாள்.

சட்டென்று மாறிய வானிலை, வகுப்புக்குள் தோழிகளுடன் மாட்டிக் கொண்ட பொழுது, அடைமழை மண்னைத் துவசம் செய்ய, புழுதிக் காற்றில் மூக்கைப் பொத்தியவளுக்கு, வலிப்பு தொற்றிக் கொள்ள சுருண்டு வீழ்ந்து மீனைப் போல் துடிக்கிறாள்.

சமகாலத்து தோழிமார் என்பதால் புரிதலை அறியாது ஓட்டம் பிடிக்க, ஐயோ வாங்களேன் என்ற குரல், கண் மங்கி கிடந்தாலும் தாஸின் உருவம் மட்டும் நிழலாடி பிம்பமாய் தொடர்கிறது . உலோகக் கோலை கையோடு பொத்தி அழுத்திக் கொண்டு அவனும் அழுவதை கண்ணீர் துளிகள் முனகிச் செல்கின்றன.

அன்று முதல் இனம் புரியா கழிப்பு, பஞ்சு மேகத்தில் தேகத்தை நீட்டிப் படுத்த சுகம், மனப் படபடப்புக்களில் ஏக்கக் காற்று குளிர்மையைத் தூவிச் செல்ல, அலையாய் ஓங்கி அமிழ்கிறது அவளின் காதல் பூத்த இதயம்.

வகுப்பின் தலைப்புச் செய்திகளை அலங்கரித்ததோடு, வீட்டிலும் வாக்கியப் போரை எதிர்கொண்டு, ஈழப் போராய் தொடர்ந்து முடிவற்று நிற்கிறாள்.

தாஸ் சமூகத்தில் ஒழுக்க சீலன், கோவிலில் இரண்டாவது குரு, காலைச் செபமாலை முதல் இராச் செபம் வரை ஒலி வாங்கி இவன் குரலைத் தவிர எதையும் உள்வாங்காது, இருப்பினும் வீட்டில் வலுவான ஒர் எதிர்ப்புக் கொடி . 

காதலுக்காக சமூகப் பணியில் நேரத்தை செலவிட்டும் பயணின்றி, மெல்லக் கவிழும் படகாய் சாந்து செல்கிறது இருவர் காதலும்... 

ஓலை வீட்டில் திடீரென ஓர் வெளிச்சம், உயர் ரக மகிழூந்துகள் படையெடுக்க உறவினர் வருகையில் திக்குமுக்காடியது அவளின் வீடு. தினம் தரிசித்த சிலையடிச் சந்தி காற்று வாங்க மூன்று நாள் கழித்து பட்டாடையில் காட்சி தருகிறாள் காவியத் தலைவி..

வாடிய பயிர்கள் நீர் பாசனத்தை நுகர்ந்தது போல புதிய செழிப்பு, பணத் தோரணை மெருகேறவே சற்று கர்வப் பார்வையும் புருவங்களில் தோற்றம் பெற, ஏறெடுக்க கண்களின்றி தாஸைக் கடந்து செல்கிறாள்.

வடலிக் கருக்கு வயிற்றைக் கிழித்த வலியோடு, மார்பை அடித்து மண்டையை பிடித்துக் கொண்டு கடற்கரை வாடியை தற்காலிக குடிலாக்கி தஞ்சம் புகுந்தான். 

வயதை மீறிய பகுத்தறிவு என்பதால் காதல் மூங்கில் முறிந்து போனதை உய்த்துணர்ந்து கொள்கிறான். கல்வியை புறக்கணித்து கடல் தொழிலில் கற்கையை தொடங்குகிறான்.

வெளிநாட்டவர் வாடை மறையும் வரை காதலுக்கு தற்காலிக விடுமுறை விட்டவள் நிரந்தர முறிவுக்கு தருணம் பார்த்து நிற்கிறாள். 
அன்றொரு நாள் சிலையடியில் ஒர் கறுப்பு உருவம், கணவாய் மையுடையில் வர ச்சீ.. இவனா என கண் முன்னே செய்கையில் புறக்கணித்து கணினி அறைக்கு முகம் பார்த்து கதைக்க விரைகிறாள்.

கால ஒட்டத்தில் தான் பார்த்த அதே தராதரம் அவளுக்கு எதிரியாய் வந்து நிற்க, அன்றிலிருந்து அவளின் பெண் பார்க்கும் படலம் தொடர் கதையாகிறது.

இன்று பெண் பார்க்க வந்தவர்கள் தாஸின் குடும்பத்தார் தான், ஆனாலும் இது தாஸின் அண்ணனுக்கான தேடல். எல்லாம் சரியானது, சீதனம் கூட இரு வீட்டாரையும் திருப்திப் படுத்த ஓர் கேள்விக்கு மட்டும் பிரளயத்தில் சூரையாடப்பட்ட வெறுமை நகரமாக மெளனித்து நிற்கிறாள்.

அருகில் வந்த தாஸின் அண்ணன் காதுக்குள் முனுமுனுக்கிறான்....
உன்னை பெண் பார்க்கச் சொன்னது இந்த காதல் தோல்விக்காரப் பய தாஸ் தான் என்று....
கண்ணீரில் முகம் நனைய கட்டிலில் சுருண்டு அழ , வலிப்பு தொற்றிக் கொள்கிறது. இம்முறை இரும்புக் கோலுடன் தாஸின் அண்ணன் கண்ணீரில் மருந்தளிக்கிறான்...


கவிதையின் காதலன்..

søndag 4. februar 2018

வெற்றி மாமரியே போற்றி போற்றி !


பேசாலையில் கோயில்
கொண்ட வெற்றி மாமரியே!
அறிவுக்கு அகிலத்தில்
என்றும் ஆதாரம் நீயே !
வெண்ணிற மேகத்தில் 

என்றும் வீற்றிருப்பாயே!
தங்க ரத தேர் "
உமது வாகனம்..
உமது கரங்கள் நீண்டிடுமே
பேசாலைத் தாண்டியே
ஆயிரமாயிரம் பக்த கோடிகளின்
அதிபதியான நாயகியே !
அருள் தந்து எமக்கு
அனைத்தையும் அளித்திடுவாயே !
பாலகனை கரங்களில்
தாங்கிய தேவியே !
உம் அருள் இல்லையென்றால்
மனிதருக்கு அடைக்கலம்
இங்கு இல்லையே !
எம் தாயே போற்றிஎம் ஞானவாகினியே போற்றி
எம் தூயாளே போற்றி
எம் அடைக்கலமே போற்றிஎம் அன்னையே போற்றி
எம் வெற்றி மாமரியே போற்றி
எம் பாதுகாவலியே போற்றி
எம் ஞானக்கொழுந்தே போற்றி
எம் ஆரோக்கியத்தாயே போற்றி
எம் சகலகலாவல்லியே போற்றி
எம் வெற்றி வாகையே போற்றி
எம் பேரின்பமே போற்றி
எம் முதல்வியே போற்றி
எம் பாசமலரே போற்றி
எம் நாமம் காப்பவளே போற்றி
எம் பூர்வீகமே போற்றி
எம் சாதனைகளின் இருப்பிடமே போற்றி
எம் அழியாப் புகழ் கொண்டவளே போற்றி
எம் தாயவளே போற்றி
எம் மாசில்லாத் தாயே போற்றி
எம் கலைக் காப்பகமே போற்றி
எம் காவல் அரணே போற்றி
எம் விம்பத்தின் மறு உருவமே போற்றி
எம் வேத நாயகியே போற்றி
எம் பரமனின் தாயே போற்றி
எம் உணவின் ஆதாரமே போற்றி
எம் சின்னம்மாளே போற்றி
எம் மாமரியே போற்றி
எம் வரவேற்பு மாதாவே போற்றி
எம் வாழ்த்தின் மணிமகுடமே போற்றி
எம் வாழ்க்கையின் ஆதாரமே போற்றி
எம் கிராமத்தின் பாதுகாவலியே போற்றி
எம் கன்னி மாமரியே போற்றி
எம் மீனவர்களின் விடிவெள்ளியே போற்றி
எம் பத்திமாளே போற்றி
எம் வாழ்வின் ஆதாரமே போற்றி 💐💐


அன்னை மாமரியே போற்றி !
வெற்றி மாமரியே போற்றி போற்றி !

அன்னை திரேசா! குருஸ் அம்புறோஸ்.


ஊரின் மாக்கியவல்லிகளுக்கு ....

ஊரின் மாக்கியவல்லிகளுக்கு .... by  John Belkan Fernando 
யார் இவர்கள்....
அம்மா, அப்பா, சகோதரர்கள், குடும்பம், பிள்ளைகள் இல்லாதவர்களா?
நண்பர்களுடன் சேர்த்து நேரத்தை செலவழிக்க வழியில்லாமல் உள்ளனரா?
பாடசாலையின் படிப்புச் சுமையை தாங்காமல் இங்கு வந்து குந்தியுள்ளனரா?
வீட்டில் ஏசிக் காற்று இருந்தும் வெயில் புழுக்கத்தில் ஓய்வெடுக்க வந்துள்ளனரா?
வீட்டுக்கு கறி மீன் வாங்கிக் குடுக்க நேரமில்லை, ஆனால் சோத்துப் பார்சல் வாங்கி குடுக்க வந்துள்ளனரா?
உழைக்க ஆயிரம் வழிகள் உள்ள உலகில் காசை இலவசமாக வாரி இறைக்க இவர்களுக்கு என்ன தலை விதியா?
ஒவ்வொருத்தர் வீடு வீடாக சென்று வாங்க வாங்க என்று கூப்பிட வேண்டும் என்பது இவர்களுக்கு தேவையா?
அதிகாரிகளின் ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பது இவர்களுக்கு அவசியமா?
யார் இவர்கள்.......
வீட்டில் இறால் கறி இருந்தும் உப்புச் சப்பில்லா கடைச் சாப்பாட்டை ஏன் இவர்கள் சாப்பிட வேண்டும்!
பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இருந்தும் ஸ்டேடியமே கதி என்று ஏன் இவர்கள் இருக்க வேண்டும்!
பகட்டு ஆடைகள் ஆயிரம் இருக்க ஏன் இவர் புழுக்க ஆடையில் உலாவர வேண்டும்!
சந்தோசமாய் கழிக்க ஆயிரம் வழி இருந்தும், பயிற்சி பயிற்சி என்று ஏன் இவர்கள் அலைய வேண்டும்!
ஊரில் ஆயிரம் பணிகள் இருந்தும் ஒவ்வொரு நொடியும் மைதானமே கதி என ஏன் இவர்கள் கிடக்க வேண்டும்!
ஆம் இவை
எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் ஊர்ப் பற்று...
பேசாலை எனும் தாய் மண் பற்று.
இன்று ஊரின் உத்தம புத்திரர்கள் எனும் மார் தட்டுபவர்களே!
எங்களை விஞ்ஞ இங்கு யாரும் இல்லை என்று கூவும் சாணக்கியர்களே!
வதனப் புத்தகத்தையில் வாக்கியப் போர் தொடுக்கும் மாக்கிய வல்லிகளே!
ஊரின் இயல் அறியாது அரசின் இயலை வசைபாடும் வானவராயன்களே!
ஒற்றைக் கேள்வி தொடுக்கிறேன்,
மனச் சான்றில் நின்று பதில் கூறுங்கள்.
மன்னார் மாவட்டத்தில் எமது ஊரின் பெயரை நிலை நிறுத்த ஒரு கூட்டம் நாயாய் பாடுபடுவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
விளையாட்டில் கடந்த 15 வருடமாக மன்னார் பிரதேச சபை மட்டத்தில் அனைத்து துறைகளிலும் சம்பியன்ஸ் பட்டம் வென்று வரும் எம் ஊர் அணிக்கு நிரந்தரமாக ஒரு சீருடை இல்லை என்பது உங்களில் ஒருவருக்காகவது தெரியுமா?
அங்கே விளையாடும் ஒவ்வொரு அணிக்காகவும் ஒரு கிராமமமே திரண்டு வரும் போது மாபெரும் பேசாலை பதியில் இருந்து உற்சாகக் குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லை என்பது கொஞ்சமாவது அறிவீரா?
விக்டறீஸ் என்ற பெயரை நிலை நாட்ட தன் சொந்த காசில் உணவுகளை வாங்கி கொடுத்து விட்டு தான் பட்டினியாய் கிடக்கும் எம் மண்ணில் மைந்தர்கள் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு போட்டியில் பின்னடைவு என்றால் அழுது புலம்பும் எம் ஊர்ப் பற்றுள்ள அந்த குழந்தைகள் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
வீண் கதைகளில் நேரம் கழித்து, செல்பிக்களிலே வாழ்க்கையை தொலைத்து, கருவே இல்லாத கருத்தை கொண்டு கானலில் கனவுக் கோட்டை கட்டும் உம் கற்பனைகளை மூட்டை கட்டிக் கொள்ளுங்கள்!
ஊருக்காக எழுதாத உங்கள் பேனாக்கள், பேருக்காக உருகுவதைப் பார்க்கையில் தான் ஊரான் என்ற வகையில் உள்ளம் வலிக்கிறது.....

lørdag 3. februar 2018

வெண் பருதிச் சுவாலை

வெண் பருதிச் சுவாலை ...கவிதையின் காதலன்

மரக் கவண்கள் நடுவே 

வெண் பருதிச் சுவாலை ஒன்று 
மெல்லத் துளிர் விட, 
பக்க வாட்டின் மைக் குழம்பு வாயுக் 
கரைவாய் பரிதிக் கதிரில் கலவி கொள்ள 
ஒளியின் பிறப்பில், 
இரவின் முகை முகம் முகிழ்த்தெழுகிறது. 

ஒளிக்கீற்றின் மோகப் பார்வை 
கடலின் மடியை காமுறவே, 
வெண்பனிச் சாலை ஒன்றில் 
மீனினக் கூட்டமொன்று 
கும்மாள யாத்திரை செல்லும், 
தென்றல் இதமும் தென்னங் கதிரும் 
ஊடல் களத்தில் உலவும், 
மெய் ஞானக் கிறுக்கலை 
ஆழித் கரையினில் 
அழகிய நண்டுகள் வரையும்..

முற்றக் கூடலில் முத்துக் குழந்தைகள் 
முத்தக் குளியலில் திளைக்க, 
உணவுப் பானையின் உருண்டைச் சோறும் 
நிலவில் பாட்டியின் வடை சுடும் காட்சியும் 

குழந்தை நாவில் தவழும், 
கிணற்றுத் தடாகத் தடியில் 
ஆங்கே காதல் தவளை தம்பதி ஒன்று 
காமக் கழிப்பில் இளைப்பாறல் கொள்ளும், 
புது மோக அத்தியாயம் சொல்லும்.

நாதச் சுரங்கப் பொக்கிசப் புதையலை ,
நாரைக் கூட்டம் நாவிலிசைக்க, 
நாளிகை பார்த்து நாணல் காட்டில் 
நானம் பூண்ட ஓர் நன்னிலவின் காட்சி.
தேன்னிலவின் முத்தத்தை முன்பொழுதில் 
இரவல் பெற்றிட, தென்திசை விரைகிறான் 
தேய்பிறைக் காதலன் ஒருவன்.

மஞ்சளும் வெண்மையும் மெல்லக் கலப்புற, 
பொன்னிற தேகம் பூமணம் பூத்திட, 
பூவையின் இதழினில் மெல்லப் புதைகிறான் 
புன்கண்கள் மறந்த புரட்சிக் காதலன். 

உணர்ச்சியின் புனர்ச்சி விதியை 
உருத்தெரியாமல் சிதைத்த பூரிப்பு, 
மனிதச் சாதியின் அதி உயர் சினுங்கலாம் 
வெட்கத்தைச் சீண்டியதால் இவனும் புரட்சியாளனே!

மலை முகட்டின் நுனியோ, 
மதுக் கிண்ணக் குழியோ, 
சம விகிதச் சுடரொளி பரப்பி நின்றாலும், 
நிலவுக் காட்சியை உணரும் 
மாந்தர்தம் நிலமை என்னவோ வேறுபாட்டுக் கூறுகளே! 
வறுமை, தனிமை, இயலாமை, காதல்,கலவி, 
ஆடம்பரம், ஆனந்தம் என உணர்வின் 
பரிணாமம் மாறி மாறி ஆட்டிப் படைக்க 
இரவுக் குளத்தில் 
ஆனந்தக் குழியல் கொள்கிறாள் வெண்மதியாள்...

சில காதல் கதைகள்.. கவிதையின் காதலன் பேசாலை


torsdag 1. februar 2018

கடலை உழுவோம் வாரீர் !

கடலை உழுவோம் வாரீர் !            கவிதையின் காதலன்.. 
நெய்தல் களத்தில் புதைவோம் வாரீர் ! 
உயிரைப் பிடித்து உவர்நீர் கிழித்து 
படகை செலுத்தும் நேரம், 
ஆழ் கடலை அளந்த மீன்கள் கூட்டம் 
வலையில் தவழ்ந்து ஆடும்.

வானம் பார்த்து வாடைக்காற்றில் 
மீனைத் தேடி ஓடும் எம் தோழர் கூட்டம்
 வாழ்வைப் பார்த்து நாவாய் கூடப் பாடும், 
தொழில் நேர்மை வாழ்த்துக் கூறும்.

கடல் மை இருட்டில் கணவாய் மை முகத்தில், 
கடமைகள் உளத்தில் என உனக்கெதிர்
 பதங்களை தனிச் சமரில் வென்றாயே ! 
சாளைக்கும் சூடைக்கும் குடை பிடித்து 
வெயிலில் காய்ந்தாயே!
நின் தொழில் பக்தியே எம்மவர் சக்தி 

மலையளவு மாசாவிலும், 
உன் மனமதின் மாதா பக்தி கடலதை வென்றிடுதே! 
நண்டின் கொடுக்காய் நறுக்கிடும்
 இடர்களில் சங்கெனும் துணிவால் நொறுக்கி நீ நின்றாயே, 
பல சகிப்புகளும் கொண்டாயே''

தொழில் நேர சுழற்காற்றில் 
தெப்பக் கடலினில் நுட்பத் தேரோட்டியே! 
வழியில் மால் பிய்ந்தால், வலைபொத்தி 
விரல் தைத்து மீன் பிடிப்பாய், 
புயல் கடுங்குளிர் நடுவிலும் கரை பிடிப்பாய்!

இழுவைப் படகின் பலகை சிராய்ப்பு கையைக் கிழிக்க, 
மாரோடு வலை அணைத்து அசராது 
உடல் வளைத்து மடி வலை பிடிப்பாயே! 
குரல்வளை உவர்பினில் 
மடி வலை மணத்தினில் பொதிசோறு உண்பாயே, 
பலரைக் கரை சேர்த்து நின்றாயே!

விண்ணின் உடுக்களும் 
கடலின் வடுக்களும் உன் அனுபவத்தோழன்
கரையை அளந்து கடலைப் பிளந்து
 கணிப்புகள் செய்வாய், நொடி தரித்திடும் 
வேளையில் சரித்திரம் வெல்வாய் !

கவிதையின் காதலன்..

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...