அவளொருத்தி எழுகிறாள் !
கதிரவன் முகம் நுகர்கிறாள்!
மூச்சிழுத்து புடவையைத் தூக்கி
இடுப்பில் வரிகிறாள் !
துடைப்பத்தின் ரேகையை
கைகளாள் அழிக்கிறாள் !
நிலத்தின் குப்பைகளை
தூரிகையாள் அளக்கிறாள் !
அடுப்பங்கரை வெளிச்சம் கொள்கிறது
தண்ணீர் ஆவியாகி
தேனீர் கோப்பையை அலங்கரிக்க
குழந்தையை முத்தமிட்டு
நாவில் இனிப்பைப் பருக்குகிறாள்!
மரக்கறிக்கு அவசரமாய்
அறுவைச்சிகிச்சை நடக்கிறது !
குழம்புக்குளத்தில்
காய்கறிகளை வேக வைத்து
உள்ளங்கையை நாவால் உறிஞ்சி
உப்புச்சுவையின் அளவைச் சுவைக்கிறாள்!
கிணற்றுத் துலாவில் தொங்கி ஆடுவாள்!
உடுப்பைப் பிளிந்து இடுப்பை நெழிப்பாள்!
தலைவனுக்குத் தலை துவட்டி
கடவுளுக்கு புகை காட்டி
கண்ணிமைக்குள் கடைமை புரிகிறாள்!
சுட்டு விரலில் கருமை எடுப்பாள்!
மகளின் விழியில் அதனைப் புதைப்பாள்!
அடுமனை உணவாய் வெந்து தணிவாள்!
தோள்ப்பையில் புத்தகம் நிறையும்
கைலேஞ்சி இவளில் வேகத்திலே மடியும்,
வயிறு பசியில் சுருங்கி விரியும்
பள்ளி வாகனமோ அதற்குள் விரையும்.
உணவுப்பொதியை பிரித்துக் கொடுத்து
கணவன் உடையை சுருக்கி வெளுத்து
ஆசை முத்தம் அழுத்திக்கொடுத்து
அன்புப் பிள்ளையை அனுப்பி வைப்பாள்!
சுருக்குப் பையில் சுருட்டிய காசு
கணவன் கை போய் சேரும் வரைக்கும்
வெடுக்கு மணங்கள் அடிக்கா வண்ணம்
மிடுக்குடனே காத்து வருவாள்!
பத்து மணி ஆனபின்பு
பல்துலக்க தூரிகை எடுப்பாள் !
கண்சிமிட்டும் கனப்பொழுதில்
கை,முகம் கழுவி வயிறு புசிப்பாள்!
கட்டைப்பையில் கத்தியை சுற்றி
கடற்கரைக்கு பட்டெனப்போவாள்!
பத்துப் பெட்டி மீனாய் இருந்தாலும்
பக்குவமாய் வெட்டி முடிப்பாள்!
பசிக்கு கொடுத்த பயித்தம் பணியாரத்தை
பத்திரப்படுத்தி மகளுக்கு கொடுப்பாள்!
பாகாய் மாறும் சக்கரை போல
வேனா வெயிலில் கருவாடு கிழிப்பாள்!
கூந்தக் கணவாய கண்ணில பார்த்தா
கூடையில் போட்டு வீட்டுக்கு விரைவாள்!
விறகு வெட்ட கோடரி எடுத்து
வேலிக் குத்தியில் ஒத்திகை பார்ப்பாள்!
கூப்பங் கடையின் றேசன் அரிசியில்
கல்லப் புடைச்சு சோத்தக் காச்சுவாள்!
சொதிக்குப் பிழிஞ்ச தேங்காய் சக்கையில்
கறிக்குப் பாலையும் பிரித்து எடுப்பாள்!
பள்ளி விட்டு பிள்ளை வந்ததும்
பிளேண்டி வைத்து இஸ்கிறின் கொடுப்பாள்!
கறியைக் கூட்டி அடுப்பில் வைத்து
கருவப்பிள்ளை மரத்தை முறிப்பாள்!
மதிய உணவை கொடுத்த பிறகு
டியூசன் அனுப்ப சந்தி விரைவாள்!
கெளப்பி , கடலை மலிவில் கிடைத்தால்
மாலை உணவில் அதனைச் சமைப்பாள்!
வேலை முடிந்து கணவன் வந்ததும்
வெந்நீர் கொடுத்து குழிக்க வைப்பாள்!
ஆறு ஆனதும் மாதா படத்தில்,
வத்தி கொளுத்தி சாம்பிராணி எரிப்பாள்!
எட்டுக்குள்ளே உணவு சமைத்து
பத்துக்குள்ளே படுக்கை விரிப்பாள்!
சட்டி பானை கழுவி முடித்து
பதினொரு மணிக்கு கழுத்தை சரிப்பாள்!
# கவிதையின் காதலன்
Ingen kommentarer:
Legg inn en kommentar