என் ஆசை நண்பா அப்புகாமி
எப்படி இருக்கின்றாய் நலம் தானே!
உயிரான என் ஊர் எப்படி இருக்கின்றது.
கலவரக்காலங்களில் காடுகளுக்குள்
நம் நட்பு இறுகியது, நாட்கள் செல்ல
கலவரத்தால் இணைந்த நாம்
கடல்களால் தள்ளி நிற்கின்றோம்.
துருவத்தில் நான் துயரத்தில் நீ!
இயக்கத் தோழன் துரம் எப்படி?
எப்போதும் வட்டக்கோடில் ஜெயிக்கும்
என் பக்கத்து வீட்டு பார்வதி எப்படி?
கடல் பாம்பின் வால் பிடித்து
சுழற்றி நீ விளையாடுவது சுற்றிச் சுற்றி
என் நினைவுச் சுழியில் வந்து போகிறதே!
கடற்கரையின் வலைக் கும்பத்தையும்,
விரிந்து கிடக்கும் படகுப் பாய்களையும்
நான் விசாரித்ததாச் சொல்லிவிடு.
இடியன் குஞ்சுகளும், ஓட்டு கணவாயும்
கலர்களும், காரலும் காணாமல் போனதாமே!
வாரிச் சுருட்டி, வயிற்றில் போடும்
இந்திய இழுவைப்படகுப் பலகைகளுக்கு
பகுத்தறியும் பழக்கமுண்டோ சொல்!
கருப்பைகள் அகற்றப்படும் போது
பாவம் கடல் அன்னை என்ன செய்வாள்?
பஞ்சமும் பட்டினியும் பரிசாய் நமக்கு இனி
என்பதை என் ஊரவரருக்கு ஒருதரம்
என் சார்பாய் சொல்லிவை நண்பா!
Ingen kommentarer:
Legg inn en kommentar