புணர்ச்சி அதிகாரம்
மெய்யில் பொய்யை தூவும் போது
கவிதை கற்பனையை கலவி கொள்ளும்...,
காதல் காமம் சேரும் போது
ஊடல் இரு தேகத்தை முகர்ந்து ஆடும்...,
மழை நீர் உவர்நீர் கலப்பின் போது
நித்தில அச்சாரம் சிற்பிக்குள் வாழும்...,
நீரை உறுஞ்சும் மேகத்தின் மோகம்
மாரியை பிரசவித்து மண் மீது தாவும்...,
பகலை இரவு புணரும் நேரம்
அந்திப் பொழுதின் அட்சயம் பொங்கும்...,
திரையும் நிலமும் கலப்புறும் போது
கடல் வாழ் உயிரிகள் கரை வந்து போகும்...,
பாசமும் அன்பும் இணைந்திடும் போது
அன்னையின் உள்ளமும் புத்துயிர் காணும்...,
மலையினில் திங்களும் மறைந்திடும் போது
இரவெனும் காவியம் துளிர் விட தொடங்கும்...,
பயிரும் பசளையும் பிணையும் போது
விளைச்சலும் கூலியும் கை வந்து சேரும்...,
காற்றும் மரமும் சங்கமிக்கையில்
இயல் இசை நாட்டியம் இயற்கையும் ஈனும்...,
தேனும் வண்டும் உறவு கொள்கையில்
மகரந்தச் சேர்க்கை மகசூல் ஆகும்...,
செப்பும் தங்கமும் சேரும் போது
ஆபரணங்கள் அழகாய் தோன்றும்...,
ஒலியும் ஒளியும் உரசும் போது
இடியும் மின்னலும் தரை மேல் வீழும்...,
விதையும் சதையும் இணையும் போது
காயும் கனியும் காட்சி கொள்ளும்...,
மனதும் மனச்சாட்சியும் ஒருமிக்கும் போது
இறைவனின் பிரசன்னம் அதிரூபம் ஆகும்...,
தடயமும் காலமும் சங்கமிக்கும் போது
வரலாற்றுச் சுவடுகள் நிறூபனமாகும்...,
உணவும் நீரும் அளவாய் உண்டால்
செரிமானம் இங்கே சிறப்பாய் நிகழும்...,
பக்குவம் , அன்பு அளவாய் இணைந்தால்
காதலும் கடைசியில் கை வந்து சேரும்....,
Ingen kommentarer:
Legg inn en kommentar