tirsdag 30. januar 2018

லெபனான் குருவி


லெபனான் குருவி   
கவிதையின் காதலன்
           பேசாலை

வெள்ளைத்திரை மணல் பரப்பில் 
குருதிக் கடல் பெருக்கெடுக்க 
கருகித் தெரியும் மரங்கள் இடையே 
உருகித் திரியும் குருவி ஒன்று, 
அருகித் தொலைந்த மனித குலத்தின் 
அபலம் படிக்குது கவலை முகத்தில்...

வேதனை கேட்டிட 
எதிர் முனை நின்றது வங்கம் 
சுற்றிய மாம்பழக் குருவி..
வாரீர் தோழர்!
சாயம் பூசிய மதங்களுக்கிடையில் 
மனிதம் முண்டமாய் 
மரித்துக் கிடப்பதை பார்த்தீரோ என்றது...,

ஆமாம் தோழர், 
லெபனான் தேசத்து வானவில் 
வளைவுகள் கருமுகில் போர்வையில் 
மறைத்திடல் கண்டே இத் திசை விரைந்தேன்,
இங்கு பூசிய சாயங்கள் பேசிய மொழிகளில் 
மதவெறி வாசமே எச்சமாய் நிற்குது 
என்ன தான் செய்வீர்? என்றது வங்கக் குருவி.

நான் புசிக்கையில் அட்சயமிட்டவன்,
ஹமாஸ் என்று தமாஸ் செய்கையில் 
சபாஸ் என்று கைகொட்டிய காலங்கள் 
கடந்தது நண்பா..., 
திருக்குரான் வேதங்களை காதுகள் கேட்டிங்கே 
காலாண்டுகள் போனதே என்றது...

கவலைக்கு விலங்கிடு கருத்தினில் 
உறுதி கொள் கலங்கங்கள் 
துடைக்கலாம் என்றது மாம்பழக் குருவி
தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் 
மண்ணில் நின்று கொண்டு 
சன்னிதான் உயர்ந்தவன் சியா தாழ்ந்தவன் என 
தராசுத் தட்டை ஆட்டி விட்டு 
தரகர் கூலியை தர்க்கமாய் பெற்றிட 
மேற்குலகு திட்டம் போடுதே! 
கண்களை துடைத்துக் கொண்டு 
லெபனான் குருவி விம்மியது.

தொலைதூரப் பயணத்தில் இளைப்பாற 
அமர்கையிலே மெக்காவின் ஒலி பெருக்கியை 
செவிமடுத்தேன் நண்பா! 
உனக்கான உணவை 
அல்லா தரும் வரை காத்திரு என்கிறார். 
உணவுக்கும் நீதி சொன்ன இப்புனிதர் வழிவந்தவர்
 உணர்வுக்குள் மாண்டனரே! வங்கக் குருவி சொன்னது.

இஸ்ரேலின் மரங்களில் 
மணிமாளிகை அமைத்த 
என் தாய் வழிச் சொந்தங்கள் 
தந்தியொன்று அனுப்பினரே!
அதில் பெய்ரூட்டின் நிலங்களை கருக்கிடும் 
ஆயுதம் பறக்கலாம் என்றதும் 
என் பகல்கனா தகர்ந்ததே! 
இனி படுத்திங்கு உறங்கிட இடம் 
ஒன்று வேண்டுமே பயத்தினில் 
சொன்னது லெபனான் குருவி. 

அன்பரே, தண்ணீர் சூழ் தீவின் இடையே 
வெந்நீரூற்றெடுத்த இலங்கேசன் தேசமே 
என் முகவரி. உலகப் புராதன மொழி 
கொண்ட மானிடர் கழிப்புடன் வாழ்ந்திடும் 
நிலமங்கு போவோம்!
என்னுடன் வா என்றது வங்கக் குருவி.

உதவிக்கு நன்றி கூறி லெபனான் 
குருவி சொன்னது, 
கண் முன்னே கற்பழிப்பும், 
மறைவிடம் இன்றி கருத்தரிப்பும் 
பார்த்திட்ட என் தோழா! 
ஈழத்தின் மேலே சிங்களம் நடத்திய 
படுகொலைப் பகுதிகள் அறிந்தே வைத்துள்ளேன். 
இனத்தின் விடுதலைக்காய் போராடிய தேசமல்லவா 
உன்னுடையது.
அவர்கள் போல் மனிதநேயனாய், 
இருப்பதால் தான் வேதனையிலும் 
உதவ நினைக்கிறாய் என்றது லெபேனியக் குருவி. 

கண்ணீரில் ஆறுதல் கூறி ஆறாத வடுக்களை 
இரை மீட்டி விடை கூறிப் பறந்தது, 
ஈழத்துக் குருவி ......

Ingen kommentarer:

Legg inn en kommentar

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...