tirsdag 30. januar 2018

லெபனான் குருவி


லெபனான் குருவி   
கவிதையின் காதலன்
           பேசாலை

வெள்ளைத்திரை மணல் பரப்பில் 
குருதிக் கடல் பெருக்கெடுக்க 
கருகித் தெரியும் மரங்கள் இடையே 
உருகித் திரியும் குருவி ஒன்று, 
அருகித் தொலைந்த மனித குலத்தின் 
அபலம் படிக்குது கவலை முகத்தில்...

வேதனை கேட்டிட 
எதிர் முனை நின்றது வங்கம் 
சுற்றிய மாம்பழக் குருவி..
வாரீர் தோழர்!
சாயம் பூசிய மதங்களுக்கிடையில் 
மனிதம் முண்டமாய் 
மரித்துக் கிடப்பதை பார்த்தீரோ என்றது...,

ஆமாம் தோழர், 
லெபனான் தேசத்து வானவில் 
வளைவுகள் கருமுகில் போர்வையில் 
மறைத்திடல் கண்டே இத் திசை விரைந்தேன்,
இங்கு பூசிய சாயங்கள் பேசிய மொழிகளில் 
மதவெறி வாசமே எச்சமாய் நிற்குது 
என்ன தான் செய்வீர்? என்றது வங்கக் குருவி.

நான் புசிக்கையில் அட்சயமிட்டவன்,
ஹமாஸ் என்று தமாஸ் செய்கையில் 
சபாஸ் என்று கைகொட்டிய காலங்கள் 
கடந்தது நண்பா..., 
திருக்குரான் வேதங்களை காதுகள் கேட்டிங்கே 
காலாண்டுகள் போனதே என்றது...

கவலைக்கு விலங்கிடு கருத்தினில் 
உறுதி கொள் கலங்கங்கள் 
துடைக்கலாம் என்றது மாம்பழக் குருவி
தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் 
மண்ணில் நின்று கொண்டு 
சன்னிதான் உயர்ந்தவன் சியா தாழ்ந்தவன் என 
தராசுத் தட்டை ஆட்டி விட்டு 
தரகர் கூலியை தர்க்கமாய் பெற்றிட 
மேற்குலகு திட்டம் போடுதே! 
கண்களை துடைத்துக் கொண்டு 
லெபனான் குருவி விம்மியது.

தொலைதூரப் பயணத்தில் இளைப்பாற 
அமர்கையிலே மெக்காவின் ஒலி பெருக்கியை 
செவிமடுத்தேன் நண்பா! 
உனக்கான உணவை 
அல்லா தரும் வரை காத்திரு என்கிறார். 
உணவுக்கும் நீதி சொன்ன இப்புனிதர் வழிவந்தவர்
 உணர்வுக்குள் மாண்டனரே! வங்கக் குருவி சொன்னது.

இஸ்ரேலின் மரங்களில் 
மணிமாளிகை அமைத்த 
என் தாய் வழிச் சொந்தங்கள் 
தந்தியொன்று அனுப்பினரே!
அதில் பெய்ரூட்டின் நிலங்களை கருக்கிடும் 
ஆயுதம் பறக்கலாம் என்றதும் 
என் பகல்கனா தகர்ந்ததே! 
இனி படுத்திங்கு உறங்கிட இடம் 
ஒன்று வேண்டுமே பயத்தினில் 
சொன்னது லெபனான் குருவி. 

அன்பரே, தண்ணீர் சூழ் தீவின் இடையே 
வெந்நீரூற்றெடுத்த இலங்கேசன் தேசமே 
என் முகவரி. உலகப் புராதன மொழி 
கொண்ட மானிடர் கழிப்புடன் வாழ்ந்திடும் 
நிலமங்கு போவோம்!
என்னுடன் வா என்றது வங்கக் குருவி.

உதவிக்கு நன்றி கூறி லெபனான் 
குருவி சொன்னது, 
கண் முன்னே கற்பழிப்பும், 
மறைவிடம் இன்றி கருத்தரிப்பும் 
பார்த்திட்ட என் தோழா! 
ஈழத்தின் மேலே சிங்களம் நடத்திய 
படுகொலைப் பகுதிகள் அறிந்தே வைத்துள்ளேன். 
இனத்தின் விடுதலைக்காய் போராடிய தேசமல்லவா 
உன்னுடையது.
அவர்கள் போல் மனிதநேயனாய், 
இருப்பதால் தான் வேதனையிலும் 
உதவ நினைக்கிறாய் என்றது லெபேனியக் குருவி. 

கண்ணீரில் ஆறுதல் கூறி ஆறாத வடுக்களை 
இரை மீட்டி விடை கூறிப் பறந்தது, 
ஈழத்துக் குருவி ......

mandag 29. januar 2018

வங்கம் பொங்க இன்பம் தங்க by John Belkan Fernando

வங்கம் பொங்க!
வங்கம் பொங்க இன்பம் தங்க 
எங்கள் மண்ணை ஆழும் தாயே 
உந்தன் அருள் தேடி வந்தோம் - 2
எங்கள் வாழ்வின் ஜீவ ஊற்றாய் 
பேசாலையில் வந்துதித்தாய் 
உந்தன் புகழ் பாடி வந்தோம் என்றும் 
தேவ அருள் நாடி நின்றோம்
வானகத்து தேவதைகள் வாகை மலர் சூட்டி 
வந்து வண்ணமிடும் ஊரினிலே கானகத்து 
காவலியாய் ஆழிக் கடல் அற்புதமாய் அம்மா 
நீயும் வந்துதித்தாய்
நெய்தல் மாந்தர் பக்தி கண்டு செய் 
தொழில் வளம் பெருக பாடும்
மீன்கள் பரிசளித்தாய் தேவ
அட்சயங்கள் மெல்லத் தெளித்தாய்.
(வங்கம் பொங்க)
போகும் கடல் போர்க்களமாய் 
மீன் பிடிக்க போகையிலே போதனமாய்
 நீ வருவாய் எம் சாதனமாய் உடனிருப்பாய். 
மழைக் கரு மேகம் நடு வலை விரித்து நிற்கையிலே
 கரம் பிடித்து காத்தவளே
புயல் காற்றில் எம்மை மீட்டவளே
(வங்கம் பொங்க)
வான் கதவு திறக்கையிலே பாய்ந்து வரும் 
நீரலை போல் பாசத்துடன் ஓடி வந்தோம்
 உம் பாதம் தொட்டு தாழ் பணிந்தோம். 
பாரம் மிகு இவ்வுலகில் பாவி எமை தேர்ந்தெடுத்து
 பாச மழை பொழிந்தவளே வான் உயர 
உம் பெயரை பார்முழுதும் பாடிடுவோம்
(வங்கம் பொங்க)
விண்மீன்கள் குடை விரித்து
வெள்ளிப் பனி மலர் சுமந்து
 வாஞ்சையோடு உமை துதித்தோம் 
வானதூதர் வட்டமிட்டு 
வையமதை காத்திடவே வெற்றித் தாயே அருள் புரிவாய்
(வங்கம் பொங்க)

søndag 28. januar 2018

வாடியடி வசந்தக்காற்று..

வாடியடி வசந்தக்காற்று..

சதையைக் கூர்முனை கிழிக்க 

பிண்டங்கள் வெயிலில் பிரளுது, 
இங்கு நாற்றங்களே நறுமணத் தென்றல், 

உப்புத்தூளை உரசி உரசி 
வெள்ளை பூத்த கைகள் என்று வாடியடியே 
இவளின் வசந்த லோகம்.

மீனுக்கு இரையான புழுவைப் போல் 

நெழிந்து செல்லும் வாழ்க்கை இது, 
வாரக்கடைசியின் லோன் காசு, 
வறுமையிலும் பிள்ளைக்கு வசதிக்கட்டணம் , 
பலசரக்குக் கடை பாக்கி என்று 
பொருளாதார நெருக்கடிக்கு
 பஞ்சமில்லாமல் பயணிக்கிறாள்.

வலைகுருகிற்று என்டதும் திண்ட

 சோத்துக்கும் விடுமுறை கொடுத்து 
காக்காய் குழியலால் கை நனைத்து 
கரைக்கு விரைகிறாள், வலை இழுத்தவனுக்கு 
பிளேன்டி, சம்மாட்டிக்கு அட்டப்பாண் என்று 
வயிற்றைச் சுருக்கி வேலை பார்த்தா தான் 
வீட்டு அடுப்புல மரக்கறி வேகும்.

வெந்த சோத்த வறுத்து திண்ணும்

 நாட்டுல வெயில் சூட்டுல வெந்தவ 
வேதனை கணக்கில இல்லாத கருவாட்டுக் கூடைதான். 
கணவரின் நண்டு வலை பாசி என்று 
நாலு நாளா தொழிலும் இல்லை ,
 மால் கயிறு வாங்கி வர அடகுக் கடை போனதால
வலை தட்டி சேத்த காசு வட்டி கட்டியே கரைஞ்சு போச்சு.

மாசம் இரு கல்யாணம், மடிச் சீலைக்கு 

பணம் வேணும் ஞாயிற்று கிழமை ஆச்சுதுனா, 
இறச்சி கறி காச்ச வேணும், பங்கு காசு பிரிச்சதால 
சீட்டு காசு கட்ட வேணும் தோட்டு சுரை துலைஞ்சதால 
வேப்பங்குச்சி சொருக வேணும், வாழ்க்கை சுமை குறைக்க
 இவ கடகரைக்கு போனதால பாச சுமை குறஞ்சிடுச்சு, 
குடும்ப பிழவு தொடங்கிடுச்சு..

கடல் தாய் அங்க, பெத்த பிள்ள இங்க, 

பாசக் குளத்தில வறுமைக் கல் எறிஞ்சு 
அன்பு தெளிவ குழப்பினதால் பிரிவு அலை விரல் நனைக்க 
பொடி நடையா குடை பிடித்தாள், மழை நனைத்த கருவாட்டுக்கு .....

கவிதையின் காதலன்

fredag 26. januar 2018

புணர்ச்சி அதிகாரம்

புணர்ச்சி அதிகாரம்
மெய்யில் பொய்யை தூவும் போது 
கவிதை கற்பனையை கலவி கொள்ளும்...,
காதல் காமம் சேரும் போது
 ஊடல் இரு தேகத்தை முகர்ந்து ஆடும்...,
மழை நீர் உவர்நீர் கலப்பின் போது 
நித்தில அச்சாரம் சிற்பிக்குள் வாழும்...,
நீரை உறுஞ்சும் மேகத்தின் மோகம் 
மாரியை பிரசவித்து மண் மீது தாவும்...,
பகலை இரவு புணரும் நேரம் 
அந்திப் பொழுதின் அட்சயம் பொங்கும்...,
திரையும் நிலமும் கலப்புறும் போது 
கடல் வாழ் உயிரிகள் கரை வந்து போகும்...,
பாசமும் அன்பும் இணைந்திடும் போது 
அன்னையின் உள்ளமும் புத்துயிர் காணும்...,
மலையினில் திங்களும் மறைந்திடும் போது
 இரவெனும் காவியம் துளிர் விட தொடங்கும்...,
பயிரும் பசளையும் பிணையும் போது 
விளைச்சலும் கூலியும் கை வந்து சேரும்...,
காற்றும் மரமும் சங்கமிக்கையில் 
இயல் இசை நாட்டியம் இயற்கையும் ஈனும்...,
தேனும் வண்டும் உறவு கொள்கையில் 
மகரந்தச் சேர்க்கை மகசூல் ஆகும்...,
செப்பும் தங்கமும் சேரும் போது 
ஆபரணங்கள் அழகாய் தோன்றும்...,
ஒலியும் ஒளியும் உரசும் போது
 இடியும் மின்னலும் தரை மேல் வீழும்...,
விதையும் சதையும் இணையும் போது 
காயும் கனியும் காட்சி கொள்ளும்...,
மனதும் மனச்சாட்சியும் ஒருமிக்கும் போது 
இறைவனின் பிரசன்னம் அதிரூபம் ஆகும்...,
தடயமும் காலமும் சங்கமிக்கும் போது 
வரலாற்றுச் சுவடுகள் நிறூபனமாகும்...,
உணவும் நீரும் அளவாய் உண்டால் 
செரிமானம் இங்கே சிறப்பாய் நிகழும்...,
பக்குவம் , அன்பு அளவாய் இணைந்தால் 
காதலும் கடைசியில் கை வந்து சேரும்....,

மண்முகட்டில் மருந்து பூச வா!

 # மண்முகட்டில் மருந்து பூச

பாலைவனத்தின் கள்ளிக்காடு நான்,
பாசம் கற்று வேரூன்றியவன் இன்று
வறட்சி போக்க முத்த மழை கேட்கவில்லை, சருகுப் புண் ஆற்ற வார்த்தைப் பனி பொழியக் கேட்கிறேன்.

 மண் மாதாவின் மடியில்
மயிரிழையில் ஊசலாடும்
காதல் அடிமையைப் பார்!
என் ஏக்கம் என்னவென்றாவது கேள் !
ஓ உன்னத புராணம் இசைக்கும் காதல் துளிர் விட்ட சக பேரீச்சைகளே..!
சாகத்தான் வழியில்லை..
 வாழ என்னவள் வாசலுக்கு,
வசந்தக் காற்றையாவது
அனுப்பி வையுங்கள்!

உதிரம் சுட்டு, உண்டி சுருங்கிடும்
வறுமை வாசி நான்..,
காதல் கொஞ்சம் கடனாய் ஈந்தாள்
கால் வயிரேனும் கழுவிக் கொள்வேன்!
கட்டியணைத்த பொழுதுகள்
கரை தட்டிய மணல்மேடாய் கற்சிலையானதே!
என் மணல் மேட்டுப் புழுதிக் காற்றில் மல்லிகை வாசம் பூக்காதா?
என் கள்ளிப் பூவைச் சுவைக்க
என் கன்னிக் காதலி துணிய மாட்டாளா?

 ஒட்டகத்தின் தாடைகள்
சேர்த்து வைத்த நீர்
கெட்டுப் போனதுண்டோ? இவை போல்
என்னுள் ஒட்டியுள்ள காதலும்
உன் ஒன்றை வார்த்தைக்காய்
செத்திடாமல் வாழுதடி..!

மேகங்கள் என்னை நிழலிடையில் கொடுத்தனுப்பிய கடிதங்கள்
உன் மீது என் வலிகளைத்
தூவாமல் போனது ஏனடி ?
இன்று ஏக்கக் குறிகள் தாக்க,
பாலைத் தென்றலின் ஏழனச் சிரிப்பில்
என் தூக்கம் கொள்ளை போனதே!

காதலில் கரைந்த இம் மண்முகட்டுத் தாவரத்தை, ஈற்றில் சருகான பின்
அள்ளிப் போடவாவது தரிசனம் தா! அதுவரை என் கள்ளித் தோட்டத்தின்
தேகப் புண்கள் வெயிற் காற்றை
மருந்தாய் பூசட்டும்...!

கவிதையின் காதலன்..

onsdag 24. januar 2018

கற்பிழந்தவன் கல்லறை கேட்கிறேன்


கற்பிழந்தவன் கல்லறை கேட்கிறேன்


ஏன் செல்கிறாய் எனைக் கொல்கிறாய் 
ஆண் காதலில் துகில் கொள்கிறாய் 
ஆனாலுமே வதை செய்கிறாய் 
ஆகாததை அமிர்தென்கிறாய்

மென்மையைச் சீண்டித் துகிலுரித்தாய் - 
மெளனப் புன்னகை தந்தேன்.
உள்ளுணர்வை முள்கம்பி கொண்டிழுத்தாய் - 
குருதியிலும் கருணை சொரிந்தேன்.

தாயைப் பழித்து காதல் கோடு கிழித்தாய் - 
அழுதும் முகம் மலர்ந்தேன்.
காதலைப் பிழிந்து சாயம் வெளுக்கிறாய் - 
காய்ந்தும் சருகாய் உடன் அமர்கிறேன்.

வார்த்தை ஒறுத்து தனிமை செய்கிறாய் - 
மெல்லிசை நுகர்ந்து உன் திசை படிக்கிறேன்.
இதழ் மொழிகளில் வெறுப்பை உமிழ்கிறாய்- 
இலை பட்ட நீராய் துளிர் விட்டு நிற்கிறேன்.

வாழ்கைக்காக வாழ்வை வெறு என்கிறாய்- 
இலக்கை கழற்றி இதயம் கேட்கிறேன்.
ஊடலில் விருப்பில்லை தள்ளி நில் என்கிறாய்- 
காமக் களத்திலும் வேடிக்கை பார்க்கிறேன்.

கடைசி நொடி வரை காதல் பொய் என்கிறாய் - 
உடல் கிழித்து என் உள்ளத்தை காட்டினேன்.
வேலை அற்ற நீ வெறும் பயல் என்கிறாய்- 
தேடல் களத்தில் நான் முனைவன் என்கிறேன்.

சிதைக்கிறாய் , உதைக்கிறாய், வலிகளை தாங்கினேன். 
நற்பை பகைத்தும் உன் கற்பை பற்றினேன்.
கடைசியில் சொல்கிறாய் வக்கற்றவனுக்கு 
வாழ்க்கை எதற்கென்று  இழப்பினில் இதயம் வெடித்து
கற்பிழந்தவன் நான் கல்லறை கேட்கிறேன். 

கவிதையின் காதலன்    பேசாலை

tirsdag 23. januar 2018

கண்ணீர்

கண்ணீர்
ஆனந்தமே கொண்டாலும்
அழுகையுமே என்றாலும்
கண்களில் கண்ணீர் கசியுமே//
கண்ணீர் சிந்தி சிதற
கண்ணோரம் கரையுண்டு
கண்ணீர் சிந்தும் மக்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கடல் நீர் முட்டி மோத
கடற்கரை உண்டு
கடலில் வாழ்வுக்காக
தத்தளிக்கும் மீனவர்களுக்கு
ஓர் விடியலுண்டா //
கண்ணோரம் ஆயிரம் கதைகள்
பேசுமே கண்ணம்மா !
கதைகள் முற்றிப்போனால்
மனது விசும்பி ஏங்குமே //
கண்ணகியின் கண்ணீர்
மதுரையை எரித்தது
ஒற்றை கால் சிலம்பையும்
அறுத்து எறிந்தது //
கற்காலம் தொடங்கி
தற்காலம் வரை கண்ணீரின்
மகிழ்ச்சியும் இகழ்ச்சியும்
மனித வாழ்விலே தொடர்
கோடுகளே தோழமைகளே //

இவண்.
CROOS.A.H
Amburose Croos Roy

கருணை இல்லம்

கருணை இல்லம் 
கண்டதும் கொண்டதே காதல்
சதை பிண்டங்களின் மோகம்//
முகத்திரை இட்டு மோசமாய்
திரையின் பின்னே வேசமாய் //
கணப்பொழுதுக்கு இன்பமாய்
நாம் எங்கனமும் துன்பமாய்//
கருணை இன்றி பரிதவிப்பாய்
கைவிடப்பட்ட எங்களுக்காய்//
இயற்கை அன்னையவள்
இரக்கம் கொண்டவளாய்//
ஏற்ற இறக்கம் அற்றவளாய்
கருணையாய்க் கொடுத்தாளே//
கருணை இல்லம் அதை
முன் பின் முகமறியாமல்//
அன்பும் பண்பும் பாசமுமாய்
அதிகாரமற்ற அழைப்பினால்
ஆதரவளித்த அன்னையர்கள்//
குல கோத்திரம் பாராமல்
முகம் முறியா இன்முகமாய்//
எல்லோரிடனும் பண்புடனும்
பாராமுகமற்றும் பாசமாயும்//
பழகும் என்னைப்போலவே
பெற்றோரால் மறுக்கப்பட்ட//
குப்பையில் வீசியெறியப்பட்ட
அனாதையில்ல வாயிலில்//
ஆளரவம் அற்ற வேளையில்
யார் யாரென தெரியாதவராய்//
கைவிடப்பட்ட எங்களை
அன்றும் இன்றும் என்றும்//
அன்போடு அனைத்திடும்
கருணையில்லம் கண்ணால்
காணும் தெய்வமே எமக்கு.
இவண்.
CROOS.A.H
Amburose Croos Roy

கண் சிமிட்டுதே! குறுங்கவிதை!


செய் நன்றி குறுங்கவிதை!


mandag 8. januar 2018

ஊரச்சுத்தி ஓடிப்பாரு எங்க பேசாலை பெயர் சொல்லும் பாரு //

ஊரச்சுத்தி ஓடிப்பாரு எங்க
பேசாலை பெயர் சொல்லும் பாரு //
வெற்றியன்னை துணை கொண்டு
எங்க வாழ்க்க நல்லா ஓடுது பாரு //
ஊருக்குள்ள வரும்போதே
ஆசிவழங்கும் இலுப்பையடி
வரவேற்பு மாதாவே சரணமம்மா //
ஊரார் பிள்ளைகள் கல்விக்கடலில்
நீந்த துணையுற்ற பத்திமா
அன்னையே சரணமம்மா //
ஊரசுத்தி.........
கிட்டிபுள்ளு அடிச்சு விளையாடுன 
தெருவெலாம் தாரோட்டா ஆச்சுதம்மா //
தாரோடா இருந்த மெயின்ரோட்ல
பள்ளாங்குழி ஆடத்தோணுதம்மா //
ரேசர் வண்டி தள்ளி விளையாடின
இடத்துல இப்போ இரும்பு வண்டி
புகை கக்குதம்மா //
ஊரச்சுத்தி......
சிலையடில கேட்டுபாருங்க
சொந்தகதையும் சொலுமம்மா
சோகக்கதையும் கூடவே வருகுதம்மா //
கடலன்னை போல எம்மவர்
பஞ்சம் தீர்ப்பவர் யாரம்மா //
பனைவளம் கொழிக்கும்
அழகிய வன ஊரம்மா //
வெற்றி மேல் வெற்றியீட்டி தரும் வெற்றிமாமரியே வாழ்கவே //
ஊரச்சுத்தி.....
இவண்.
CROOS.A.H

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,

சிறுவர்களை என்னிடம் வரவிடுங்கள்,                                                          ஏனெனில் மோட்சராச்சியம் அவர்களுக்கானது, என் இயேசு ...