என் நினைவில் நிற்கும் ஆசிரியை!
என் பள்ளி வாழ்வில் பல ஆசிரியர்களை என்னால் மறக்கமுடிவதில்லை அவர்களிள் ஒருவர் தான் திருமதி ஜெகநாதன் ஆசிரியை, அவரின் கணவர் பேசாலை டின் மீன் தொழிற்சாலையின் முகாமையாளாராக பணிபுரிந்தவர். ஜெகநாதன் ஆசிரியை பேசாலைக்கு வந்தபின்புதான் வெற்றித்தாயின் அனுக்கிரகத்தால் ஒரு ஆண் மகனை பெற்றெடுத்தாள்! அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், வெற்றி அன்னையின் அருளால் தான் ஒரு மகனை பெற்றெடுத்ததாக அவரே கூறுவதுண்டு. ஜெகநாதன் ஆசிரியர் மிகவும் கண்டிப்பான ஆசிரியர் அதேவேளை ஒரு தாய்க்குரிய கருனை அவரிடம் எப்பொழுதும் உண்டு.தன் மாணக்கர்கள் கல்வியில் சிறந்து விளங்கவேண்டும் என்று அறிவுறை கூறுவதுண்டு. அவர் தந்த ஊக்கமே எனக்கு லண்டன் புறுனல் பல்கலைக்கழகத்தில் M.A பட்டம் படிக்கவேண்டும் என்ற உந்துதலை எனக்கு அளித்தது என்றால் அது மிகையாகது! ஜெகநாதன் ஆசிரியை பார்க்கும் போதெல்லாம் மஞ்சள் குங்குமம் பொங்கும் மகா லட்சுமியை நினைவுக்கு கொண்டுவரும். அவர் எங்களுக்கு தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் படிப்பிக்கும் பாங்கு மிக நேர்த்தியானது. ஒருபோதும் பிரம்பை கையில் தொட்டதே இல்லை ஆனால் டீச்சர் பார்க்கும் ஒரு பார்வையே போதும், மாணவர்களுக்கு உள்ளூர வியர்த்து கொட்டும். எவ்வளவுதான் கண்டிப்பாக இருந்தாலும், அவ்வப்போது நகைச்சுவையாக எங்களோடு உரையாடுவதுண்டு. எங்கள் வகுப்பிலே சகாயன் சில்வா என்ற குறும்புக்கார மாணவர் இருந்தார். அடிக்கடி ஏதாவது ஆங்கில வசனத்தை எடுத்துவிடுவான் அதற்கு உரிய அர்த்தம் அவனுக்கே தெரியாது. ஒரு முறை சகாயன் சில்வா, எமது சக மாணவியான மிரியம் குருஸுடன் வாய்த்தர்க்கம் செய்தான் அப்பொழுது திடீரென்று I don't care என்று ஒரு ஆங்கில வசனத்தை எடுத்துவிட்டான்.அப்பொழுது நண்பி மிரியம் அப்படியென்றால் என்ன அர்த்தம் என்று சகாயன் சில்வாவிடம் கேட்ட பொழுது அவன் மிகச் சர்வ சாதாரணமாக நான் ஒரு சாதாரண மனிதன் என்று சொன்னான். அவன் சொன்னதை நாங்களும் நம்பிவிட்டோம், அதே நேரம் பார்த்து வகுப்பறைக்குள் நுழைந்த ஜெகநாதன் டீச்சர் சாகயன் சில்வாவிடம் I don't care என்றால் அதன் அர்த்தம், நான் பொருட்படுத்தவில்லை என்று விளக்கம் கொடுக்க, உடனே சகாயன் சில்வா அதைத்தான் டீச்சர் நான் ஆங்கிலத்தில் சொன்னேன் என்று டக்கென்று பதில் சொன்னதும் டீச்சர் உட்பட நாங்கள் அனைவரும் குழுங்கி குழுங்கிச் சிரித்தோம்.பள்ளி வாழ்க்கையே வண்ணமயமான கனவுக்கலவைதான்! அன்புடன் உங்கள் பேசாலைதாஸ்
Ingen kommentarer:
Legg inn en kommentar