lørdag 3. februar 2018

வெண் பருதிச் சுவாலை

வெண் பருதிச் சுவாலை ...கவிதையின் காதலன்

மரக் கவண்கள் நடுவே 

வெண் பருதிச் சுவாலை ஒன்று 
மெல்லத் துளிர் விட, 
பக்க வாட்டின் மைக் குழம்பு வாயுக் 
கரைவாய் பரிதிக் கதிரில் கலவி கொள்ள 
ஒளியின் பிறப்பில், 
இரவின் முகை முகம் முகிழ்த்தெழுகிறது. 

ஒளிக்கீற்றின் மோகப் பார்வை 
கடலின் மடியை காமுறவே, 
வெண்பனிச் சாலை ஒன்றில் 
மீனினக் கூட்டமொன்று 
கும்மாள யாத்திரை செல்லும், 
தென்றல் இதமும் தென்னங் கதிரும் 
ஊடல் களத்தில் உலவும், 
மெய் ஞானக் கிறுக்கலை 
ஆழித் கரையினில் 
அழகிய நண்டுகள் வரையும்..

முற்றக் கூடலில் முத்துக் குழந்தைகள் 
முத்தக் குளியலில் திளைக்க, 
உணவுப் பானையின் உருண்டைச் சோறும் 
நிலவில் பாட்டியின் வடை சுடும் காட்சியும் 

குழந்தை நாவில் தவழும், 
கிணற்றுத் தடாகத் தடியில் 
ஆங்கே காதல் தவளை தம்பதி ஒன்று 
காமக் கழிப்பில் இளைப்பாறல் கொள்ளும், 
புது மோக அத்தியாயம் சொல்லும்.

நாதச் சுரங்கப் பொக்கிசப் புதையலை ,
நாரைக் கூட்டம் நாவிலிசைக்க, 
நாளிகை பார்த்து நாணல் காட்டில் 
நானம் பூண்ட ஓர் நன்னிலவின் காட்சி.
தேன்னிலவின் முத்தத்தை முன்பொழுதில் 
இரவல் பெற்றிட, தென்திசை விரைகிறான் 
தேய்பிறைக் காதலன் ஒருவன்.

மஞ்சளும் வெண்மையும் மெல்லக் கலப்புற, 
பொன்னிற தேகம் பூமணம் பூத்திட, 
பூவையின் இதழினில் மெல்லப் புதைகிறான் 
புன்கண்கள் மறந்த புரட்சிக் காதலன். 

உணர்ச்சியின் புனர்ச்சி விதியை 
உருத்தெரியாமல் சிதைத்த பூரிப்பு, 
மனிதச் சாதியின் அதி உயர் சினுங்கலாம் 
வெட்கத்தைச் சீண்டியதால் இவனும் புரட்சியாளனே!

மலை முகட்டின் நுனியோ, 
மதுக் கிண்ணக் குழியோ, 
சம விகிதச் சுடரொளி பரப்பி நின்றாலும், 
நிலவுக் காட்சியை உணரும் 
மாந்தர்தம் நிலமை என்னவோ வேறுபாட்டுக் கூறுகளே! 
வறுமை, தனிமை, இயலாமை, காதல்,கலவி, 
ஆடம்பரம், ஆனந்தம் என உணர்வின் 
பரிணாமம் மாறி மாறி ஆட்டிப் படைக்க 
இரவுக் குளத்தில் 
ஆனந்தக் குழியல் கொள்கிறாள் வெண்மதியாள்...

சில காதல் கதைகள்.. கவிதையின் காதலன் பேசாலை


torsdag 1. februar 2018

கடலை உழுவோம் வாரீர் !

கடலை உழுவோம் வாரீர் !            கவிதையின் காதலன்.. 
நெய்தல் களத்தில் புதைவோம் வாரீர் ! 
உயிரைப் பிடித்து உவர்நீர் கிழித்து 
படகை செலுத்தும் நேரம், 
ஆழ் கடலை அளந்த மீன்கள் கூட்டம் 
வலையில் தவழ்ந்து ஆடும்.

வானம் பார்த்து வாடைக்காற்றில் 
மீனைத் தேடி ஓடும் எம் தோழர் கூட்டம்
 வாழ்வைப் பார்த்து நாவாய் கூடப் பாடும், 
தொழில் நேர்மை வாழ்த்துக் கூறும்.

கடல் மை இருட்டில் கணவாய் மை முகத்தில், 
கடமைகள் உளத்தில் என உனக்கெதிர்
 பதங்களை தனிச் சமரில் வென்றாயே ! 
சாளைக்கும் சூடைக்கும் குடை பிடித்து 
வெயிலில் காய்ந்தாயே!
நின் தொழில் பக்தியே எம்மவர் சக்தி 

மலையளவு மாசாவிலும், 
உன் மனமதின் மாதா பக்தி கடலதை வென்றிடுதே! 
நண்டின் கொடுக்காய் நறுக்கிடும்
 இடர்களில் சங்கெனும் துணிவால் நொறுக்கி நீ நின்றாயே, 
பல சகிப்புகளும் கொண்டாயே''

தொழில் நேர சுழற்காற்றில் 
தெப்பக் கடலினில் நுட்பத் தேரோட்டியே! 
வழியில் மால் பிய்ந்தால், வலைபொத்தி 
விரல் தைத்து மீன் பிடிப்பாய், 
புயல் கடுங்குளிர் நடுவிலும் கரை பிடிப்பாய்!

இழுவைப் படகின் பலகை சிராய்ப்பு கையைக் கிழிக்க, 
மாரோடு வலை அணைத்து அசராது 
உடல் வளைத்து மடி வலை பிடிப்பாயே! 
குரல்வளை உவர்பினில் 
மடி வலை மணத்தினில் பொதிசோறு உண்பாயே, 
பலரைக் கரை சேர்த்து நின்றாயே!

விண்ணின் உடுக்களும் 
கடலின் வடுக்களும் உன் அனுபவத்தோழன்
கரையை அளந்து கடலைப் பிளந்து
 கணிப்புகள் செய்வாய், நொடி தரித்திடும் 
வேளையில் சரித்திரம் வெல்வாய் !

கவிதையின் காதலன்..

tirsdag 30. januar 2018

லெபனான் குருவி


லெபனான் குருவி   
கவிதையின் காதலன்
           பேசாலை

வெள்ளைத்திரை மணல் பரப்பில் 
குருதிக் கடல் பெருக்கெடுக்க 
கருகித் தெரியும் மரங்கள் இடையே 
உருகித் திரியும் குருவி ஒன்று, 
அருகித் தொலைந்த மனித குலத்தின் 
அபலம் படிக்குது கவலை முகத்தில்...

வேதனை கேட்டிட 
எதிர் முனை நின்றது வங்கம் 
சுற்றிய மாம்பழக் குருவி..
வாரீர் தோழர்!
சாயம் பூசிய மதங்களுக்கிடையில் 
மனிதம் முண்டமாய் 
மரித்துக் கிடப்பதை பார்த்தீரோ என்றது...,

ஆமாம் தோழர், 
லெபனான் தேசத்து வானவில் 
வளைவுகள் கருமுகில் போர்வையில் 
மறைத்திடல் கண்டே இத் திசை விரைந்தேன்,
இங்கு பூசிய சாயங்கள் பேசிய மொழிகளில் 
மதவெறி வாசமே எச்சமாய் நிற்குது 
என்ன தான் செய்வீர்? என்றது வங்கக் குருவி.

நான் புசிக்கையில் அட்சயமிட்டவன்,
ஹமாஸ் என்று தமாஸ் செய்கையில் 
சபாஸ் என்று கைகொட்டிய காலங்கள் 
கடந்தது நண்பா..., 
திருக்குரான் வேதங்களை காதுகள் கேட்டிங்கே 
காலாண்டுகள் போனதே என்றது...

கவலைக்கு விலங்கிடு கருத்தினில் 
உறுதி கொள் கலங்கங்கள் 
துடைக்கலாம் என்றது மாம்பழக் குருவி
தண்ணீருக்கு கண்ணீர் சிந்தும் 
மண்ணில் நின்று கொண்டு 
சன்னிதான் உயர்ந்தவன் சியா தாழ்ந்தவன் என 
தராசுத் தட்டை ஆட்டி விட்டு 
தரகர் கூலியை தர்க்கமாய் பெற்றிட 
மேற்குலகு திட்டம் போடுதே! 
கண்களை துடைத்துக் கொண்டு 
லெபனான் குருவி விம்மியது.

தொலைதூரப் பயணத்தில் இளைப்பாற 
அமர்கையிலே மெக்காவின் ஒலி பெருக்கியை 
செவிமடுத்தேன் நண்பா! 
உனக்கான உணவை 
அல்லா தரும் வரை காத்திரு என்கிறார். 
உணவுக்கும் நீதி சொன்ன இப்புனிதர் வழிவந்தவர்
 உணர்வுக்குள் மாண்டனரே! வங்கக் குருவி சொன்னது.

இஸ்ரேலின் மரங்களில் 
மணிமாளிகை அமைத்த 
என் தாய் வழிச் சொந்தங்கள் 
தந்தியொன்று அனுப்பினரே!
அதில் பெய்ரூட்டின் நிலங்களை கருக்கிடும் 
ஆயுதம் பறக்கலாம் என்றதும் 
என் பகல்கனா தகர்ந்ததே! 
இனி படுத்திங்கு உறங்கிட இடம் 
ஒன்று வேண்டுமே பயத்தினில் 
சொன்னது லெபனான் குருவி. 

அன்பரே, தண்ணீர் சூழ் தீவின் இடையே 
வெந்நீரூற்றெடுத்த இலங்கேசன் தேசமே 
என் முகவரி. உலகப் புராதன மொழி 
கொண்ட மானிடர் கழிப்புடன் வாழ்ந்திடும் 
நிலமங்கு போவோம்!
என்னுடன் வா என்றது வங்கக் குருவி.

உதவிக்கு நன்றி கூறி லெபனான் 
குருவி சொன்னது, 
கண் முன்னே கற்பழிப்பும், 
மறைவிடம் இன்றி கருத்தரிப்பும் 
பார்த்திட்ட என் தோழா! 
ஈழத்தின் மேலே சிங்களம் நடத்திய 
படுகொலைப் பகுதிகள் அறிந்தே வைத்துள்ளேன். 
இனத்தின் விடுதலைக்காய் போராடிய தேசமல்லவா 
உன்னுடையது.
அவர்கள் போல் மனிதநேயனாய், 
இருப்பதால் தான் வேதனையிலும் 
உதவ நினைக்கிறாய் என்றது லெபேனியக் குருவி. 

கண்ணீரில் ஆறுதல் கூறி ஆறாத வடுக்களை 
இரை மீட்டி விடை கூறிப் பறந்தது, 
ஈழத்துக் குருவி ......

mandag 29. januar 2018

வங்கம் பொங்க இன்பம் தங்க by John Belkan Fernando

வங்கம் பொங்க!
வங்கம் பொங்க இன்பம் தங்க 
எங்கள் மண்ணை ஆழும் தாயே 
உந்தன் அருள் தேடி வந்தோம் - 2
எங்கள் வாழ்வின் ஜீவ ஊற்றாய் 
பேசாலையில் வந்துதித்தாய் 
உந்தன் புகழ் பாடி வந்தோம் என்றும் 
தேவ அருள் நாடி நின்றோம்
வானகத்து தேவதைகள் வாகை மலர் சூட்டி 
வந்து வண்ணமிடும் ஊரினிலே கானகத்து 
காவலியாய் ஆழிக் கடல் அற்புதமாய் அம்மா 
நீயும் வந்துதித்தாய்
நெய்தல் மாந்தர் பக்தி கண்டு செய் 
தொழில் வளம் பெருக பாடும்
மீன்கள் பரிசளித்தாய் தேவ
அட்சயங்கள் மெல்லத் தெளித்தாய்.
(வங்கம் பொங்க)
போகும் கடல் போர்க்களமாய் 
மீன் பிடிக்க போகையிலே போதனமாய்
 நீ வருவாய் எம் சாதனமாய் உடனிருப்பாய். 
மழைக் கரு மேகம் நடு வலை விரித்து நிற்கையிலே
 கரம் பிடித்து காத்தவளே
புயல் காற்றில் எம்மை மீட்டவளே
(வங்கம் பொங்க)
வான் கதவு திறக்கையிலே பாய்ந்து வரும் 
நீரலை போல் பாசத்துடன் ஓடி வந்தோம்
 உம் பாதம் தொட்டு தாழ் பணிந்தோம். 
பாரம் மிகு இவ்வுலகில் பாவி எமை தேர்ந்தெடுத்து
 பாச மழை பொழிந்தவளே வான் உயர 
உம் பெயரை பார்முழுதும் பாடிடுவோம்
(வங்கம் பொங்க)
விண்மீன்கள் குடை விரித்து
வெள்ளிப் பனி மலர் சுமந்து
 வாஞ்சையோடு உமை துதித்தோம் 
வானதூதர் வட்டமிட்டு 
வையமதை காத்திடவே வெற்றித் தாயே அருள் புரிவாய்
(வங்கம் பொங்க)

søndag 28. januar 2018

வாடியடி வசந்தக்காற்று..

வாடியடி வசந்தக்காற்று..

சதையைக் கூர்முனை கிழிக்க 

பிண்டங்கள் வெயிலில் பிரளுது, 
இங்கு நாற்றங்களே நறுமணத் தென்றல், 

உப்புத்தூளை உரசி உரசி 
வெள்ளை பூத்த கைகள் என்று வாடியடியே 
இவளின் வசந்த லோகம்.

மீனுக்கு இரையான புழுவைப் போல் 

நெழிந்து செல்லும் வாழ்க்கை இது, 
வாரக்கடைசியின் லோன் காசு, 
வறுமையிலும் பிள்ளைக்கு வசதிக்கட்டணம் , 
பலசரக்குக் கடை பாக்கி என்று 
பொருளாதார நெருக்கடிக்கு
 பஞ்சமில்லாமல் பயணிக்கிறாள்.

வலைகுருகிற்று என்டதும் திண்ட

 சோத்துக்கும் விடுமுறை கொடுத்து 
காக்காய் குழியலால் கை நனைத்து 
கரைக்கு விரைகிறாள், வலை இழுத்தவனுக்கு 
பிளேன்டி, சம்மாட்டிக்கு அட்டப்பாண் என்று 
வயிற்றைச் சுருக்கி வேலை பார்த்தா தான் 
வீட்டு அடுப்புல மரக்கறி வேகும்.

வெந்த சோத்த வறுத்து திண்ணும்

 நாட்டுல வெயில் சூட்டுல வெந்தவ 
வேதனை கணக்கில இல்லாத கருவாட்டுக் கூடைதான். 
கணவரின் நண்டு வலை பாசி என்று 
நாலு நாளா தொழிலும் இல்லை ,
 மால் கயிறு வாங்கி வர அடகுக் கடை போனதால
வலை தட்டி சேத்த காசு வட்டி கட்டியே கரைஞ்சு போச்சு.

மாசம் இரு கல்யாணம், மடிச் சீலைக்கு 

பணம் வேணும் ஞாயிற்று கிழமை ஆச்சுதுனா, 
இறச்சி கறி காச்ச வேணும், பங்கு காசு பிரிச்சதால 
சீட்டு காசு கட்ட வேணும் தோட்டு சுரை துலைஞ்சதால 
வேப்பங்குச்சி சொருக வேணும், வாழ்க்கை சுமை குறைக்க
 இவ கடகரைக்கு போனதால பாச சுமை குறஞ்சிடுச்சு, 
குடும்ப பிழவு தொடங்கிடுச்சு..

கடல் தாய் அங்க, பெத்த பிள்ள இங்க, 

பாசக் குளத்தில வறுமைக் கல் எறிஞ்சு 
அன்பு தெளிவ குழப்பினதால் பிரிவு அலை விரல் நனைக்க 
பொடி நடையா குடை பிடித்தாள், மழை நனைத்த கருவாட்டுக்கு .....

கவிதையின் காதலன்

fredag 26. januar 2018

புணர்ச்சி அதிகாரம்

புணர்ச்சி அதிகாரம்
மெய்யில் பொய்யை தூவும் போது 
கவிதை கற்பனையை கலவி கொள்ளும்...,
காதல் காமம் சேரும் போது
 ஊடல் இரு தேகத்தை முகர்ந்து ஆடும்...,
மழை நீர் உவர்நீர் கலப்பின் போது 
நித்தில அச்சாரம் சிற்பிக்குள் வாழும்...,
நீரை உறுஞ்சும் மேகத்தின் மோகம் 
மாரியை பிரசவித்து மண் மீது தாவும்...,
பகலை இரவு புணரும் நேரம் 
அந்திப் பொழுதின் அட்சயம் பொங்கும்...,
திரையும் நிலமும் கலப்புறும் போது 
கடல் வாழ் உயிரிகள் கரை வந்து போகும்...,
பாசமும் அன்பும் இணைந்திடும் போது 
அன்னையின் உள்ளமும் புத்துயிர் காணும்...,
மலையினில் திங்களும் மறைந்திடும் போது
 இரவெனும் காவியம் துளிர் விட தொடங்கும்...,
பயிரும் பசளையும் பிணையும் போது 
விளைச்சலும் கூலியும் கை வந்து சேரும்...,
காற்றும் மரமும் சங்கமிக்கையில் 
இயல் இசை நாட்டியம் இயற்கையும் ஈனும்...,
தேனும் வண்டும் உறவு கொள்கையில் 
மகரந்தச் சேர்க்கை மகசூல் ஆகும்...,
செப்பும் தங்கமும் சேரும் போது 
ஆபரணங்கள் அழகாய் தோன்றும்...,
ஒலியும் ஒளியும் உரசும் போது
 இடியும் மின்னலும் தரை மேல் வீழும்...,
விதையும் சதையும் இணையும் போது 
காயும் கனியும் காட்சி கொள்ளும்...,
மனதும் மனச்சாட்சியும் ஒருமிக்கும் போது 
இறைவனின் பிரசன்னம் அதிரூபம் ஆகும்...,
தடயமும் காலமும் சங்கமிக்கும் போது 
வரலாற்றுச் சுவடுகள் நிறூபனமாகும்...,
உணவும் நீரும் அளவாய் உண்டால் 
செரிமானம் இங்கே சிறப்பாய் நிகழும்...,
பக்குவம் , அன்பு அளவாய் இணைந்தால் 
காதலும் கடைசியில் கை வந்து சேரும்....,