ஐயோ ! ஐயகோ ! வலிக்கு தம்மா ! நினைவால் என் நெஞ்சம் பிளக்கு தம்மா ! என் அண்ணனின் கல்லறை வெடிக்குதம்மா ! உள்ளக் குமுறலில் மனம் துடிக்கு தம்மா !
நந்திக் கடலில் என் அம்மாவின்
சதையைக் கழுவிக் கரைக்கையில்
ஒட்டிய ரத்தம் இன்றும் மணக்குதே!
பட்டினிக் கடலில் மூழ்கியே மடிந்த என் தம்பியின் வயிற்றுக் குடல் நெஞ்சத்தில் கனக்குதே !சேற்றுத் தண்ணீர்
செங்குருதி கொப்பளிக்க,
மேனிப் புண்களில் சகதி வறண்டு
சாக்கடை வாசம் தெளிக்க,
கிரவல் தண்ணீரில்
நாவை நனைத்ததை
நினைத்திட வலிக்குதே !
பகையே அறியா பருவக் குருத்துக்கள் உலோகக் கோல்களால்
உரசிச் சரிந்ததை நினைத்தால்
நெஞ்சம் பிளக்குதே !
வெண்ணுடலின் புண்ணுடல் ஆற்றிட,
பச்சிலை பறித்ததை
உள்ளம் நினைக்குதே!
வடலிக் கருக்கில் குடலைப் பிழந்து
அழுகிய துண்டை வீசினோம்.
தமிழின் அம்மனப் படுக்கை
நிலையைக் கண்டு
அனுதாப அலைகளை வீசினோம் !
விடத்தல் முள்ளால் உடம்பில் புதைந்த தோட்டாக்கள் அளந்தோம்!
மொட்டக் கத்தியால் முள்ளந் தண்டுகள் வெட்டிப் பிளந்தோம்!
பீரிட்ட குருதியை பீரங்கி தடம் தந்த மண்ணள்ளித் தடுத்தோம்!
வேர் விட்ட விழுதுகள்
தூரோடு குடை சாய
வாய் பொத்தி அழுதோம்!
கருவுக்குள் சிசுவுக்குச்
சமாதிகள் - வெந்தோம்!
எம் குறும்புகள் உடல் மீது
எறும்பூறக் கண்டோம்!
வன்னி நிலங்களை
வயிற்றால் உழுது,
குருதிப் புலங்களைக் கட்டி அழுது,
உரமாய் புதைத்த
தமிழ்த்தாயின் புதல்வரை ,
மரமாய் வியந்து மரியாதை செய்கிறோம் .
வலியை சுமந்தும் கருவைப் பிசைந்தும் உடலைச் சிதைத்திட்ட போதிலும் ,
எம் கனவைச் சுமந்து மணலில் புதைந்த உறவின் நினைவில் கூடுவோம் !
மே 18 எம் உணர்வலைகளை முகாரியாக்கி மனிதம் தொலைத்தோர் செவிப்பறைகளில் பெருவெடிப்பை உதிர்க்கட்டும் !
# கவிதையின் காதலன், பேசாலை .
Ingen kommentarer:
Legg inn en kommentar