mandag 5. februar 2018

திசை மாற்றும் காதலே! குறுங்கதை எழுதியவர் கவிதையின் காதலன் பேசாலை


திசை மாற்றும் காதலே! குறுங்கதை

அவளுக்கு தெரியும் இப்படித்தான் நடக்கும் என்று, ஒவ்வொரு முறையும் நுகரும் அதே ஆடையும், தேனீர் கிண்ணமும் ஏமாற்றத்தைக் கடந்து வாழ்வின் புரிதலை புலப்படுத்தி விடுகின்றது. 

பணபோக விளைச்சல் நிலமாம், திருமணத் தேடலில் அலங்காரங்கள் என்பது மேடைக்கானது மட்டுமல்ல, பெண் பார்க்கும் படலத்துக்கும் தான்.

பணம், குடும்பம், நிறம், உயரம், உடல்வாகு, மூக்கு, என பல கோணங்களில் நிராகரிக்கப்பட்ட இவள் இம்முறை சந்தித்தது சற்று வித்தியாசச் சிக்கல் ஒன்று.

பள்ளி காலத்து எச்ச மொன்று மிச்சமாய் வளர்ந்து நின்று பதம் பார்க்கும் என்றும் சற்றும் எதிர் பாராது நொடிந்து போகிறாள்.

சட்டென்று மாறிய வானிலை, வகுப்புக்குள் தோழிகளுடன் மாட்டிக் கொண்ட பொழுது, அடைமழை மண்னைத் துவசம் செய்ய, புழுதிக் காற்றில் மூக்கைப் பொத்தியவளுக்கு, வலிப்பு தொற்றிக் கொள்ள சுருண்டு வீழ்ந்து மீனைப் போல் துடிக்கிறாள்.

சமகாலத்து தோழிமார் என்பதால் புரிதலை அறியாது ஓட்டம் பிடிக்க, ஐயோ வாங்களேன் என்ற குரல், கண் மங்கி கிடந்தாலும் தாஸின் உருவம் மட்டும் நிழலாடி பிம்பமாய் தொடர்கிறது . உலோகக் கோலை கையோடு பொத்தி அழுத்திக் கொண்டு அவனும் அழுவதை கண்ணீர் துளிகள் முனகிச் செல்கின்றன.

அன்று முதல் இனம் புரியா கழிப்பு, பஞ்சு மேகத்தில் தேகத்தை நீட்டிப் படுத்த சுகம், மனப் படபடப்புக்களில் ஏக்கக் காற்று குளிர்மையைத் தூவிச் செல்ல, அலையாய் ஓங்கி அமிழ்கிறது அவளின் காதல் பூத்த இதயம்.

வகுப்பின் தலைப்புச் செய்திகளை அலங்கரித்ததோடு, வீட்டிலும் வாக்கியப் போரை எதிர்கொண்டு, ஈழப் போராய் தொடர்ந்து முடிவற்று நிற்கிறாள்.

தாஸ் சமூகத்தில் ஒழுக்க சீலன், கோவிலில் இரண்டாவது குரு, காலைச் செபமாலை முதல் இராச் செபம் வரை ஒலி வாங்கி இவன் குரலைத் தவிர எதையும் உள்வாங்காது, இருப்பினும் வீட்டில் வலுவான ஒர் எதிர்ப்புக் கொடி . 

காதலுக்காக சமூகப் பணியில் நேரத்தை செலவிட்டும் பயணின்றி, மெல்லக் கவிழும் படகாய் சாந்து செல்கிறது இருவர் காதலும்... 

ஓலை வீட்டில் திடீரென ஓர் வெளிச்சம், உயர் ரக மகிழூந்துகள் படையெடுக்க உறவினர் வருகையில் திக்குமுக்காடியது அவளின் வீடு. தினம் தரிசித்த சிலையடிச் சந்தி காற்று வாங்க மூன்று நாள் கழித்து பட்டாடையில் காட்சி தருகிறாள் காவியத் தலைவி..

வாடிய பயிர்கள் நீர் பாசனத்தை நுகர்ந்தது போல புதிய செழிப்பு, பணத் தோரணை மெருகேறவே சற்று கர்வப் பார்வையும் புருவங்களில் தோற்றம் பெற, ஏறெடுக்க கண்களின்றி தாஸைக் கடந்து செல்கிறாள்.

வடலிக் கருக்கு வயிற்றைக் கிழித்த வலியோடு, மார்பை அடித்து மண்டையை பிடித்துக் கொண்டு கடற்கரை வாடியை தற்காலிக குடிலாக்கி தஞ்சம் புகுந்தான். 

வயதை மீறிய பகுத்தறிவு என்பதால் காதல் மூங்கில் முறிந்து போனதை உய்த்துணர்ந்து கொள்கிறான். கல்வியை புறக்கணித்து கடல் தொழிலில் கற்கையை தொடங்குகிறான்.

வெளிநாட்டவர் வாடை மறையும் வரை காதலுக்கு தற்காலிக விடுமுறை விட்டவள் நிரந்தர முறிவுக்கு தருணம் பார்த்து நிற்கிறாள். 
அன்றொரு நாள் சிலையடியில் ஒர் கறுப்பு உருவம், கணவாய் மையுடையில் வர ச்சீ.. இவனா என கண் முன்னே செய்கையில் புறக்கணித்து கணினி அறைக்கு முகம் பார்த்து கதைக்க விரைகிறாள்.

கால ஒட்டத்தில் தான் பார்த்த அதே தராதரம் அவளுக்கு எதிரியாய் வந்து நிற்க, அன்றிலிருந்து அவளின் பெண் பார்க்கும் படலம் தொடர் கதையாகிறது.

இன்று பெண் பார்க்க வந்தவர்கள் தாஸின் குடும்பத்தார் தான், ஆனாலும் இது தாஸின் அண்ணனுக்கான தேடல். எல்லாம் சரியானது, சீதனம் கூட இரு வீட்டாரையும் திருப்திப் படுத்த ஓர் கேள்விக்கு மட்டும் பிரளயத்தில் சூரையாடப்பட்ட வெறுமை நகரமாக மெளனித்து நிற்கிறாள்.

அருகில் வந்த தாஸின் அண்ணன் காதுக்குள் முனுமுனுக்கிறான்....
உன்னை பெண் பார்க்கச் சொன்னது இந்த காதல் தோல்விக்காரப் பய தாஸ் தான் என்று....
கண்ணீரில் முகம் நனைய கட்டிலில் சுருண்டு அழ , வலிப்பு தொற்றிக் கொள்கிறது. இம்முறை இரும்புக் கோலுடன் தாஸின் அண்ணன் கண்ணீரில் மருந்தளிக்கிறான்...


கவிதையின் காதலன்..

søndag 4. februar 2018

வெற்றி மாமரியே போற்றி போற்றி !


பேசாலையில் கோயில்
கொண்ட வெற்றி மாமரியே!
அறிவுக்கு அகிலத்தில்
என்றும் ஆதாரம் நீயே !
வெண்ணிற மேகத்தில் 

என்றும் வீற்றிருப்பாயே!
தங்க ரத தேர் "
உமது வாகனம்..
உமது கரங்கள் நீண்டிடுமே
பேசாலைத் தாண்டியே
ஆயிரமாயிரம் பக்த கோடிகளின்
அதிபதியான நாயகியே !
அருள் தந்து எமக்கு
அனைத்தையும் அளித்திடுவாயே !
பாலகனை கரங்களில்
தாங்கிய தேவியே !
உம் அருள் இல்லையென்றால்
மனிதருக்கு அடைக்கலம்
இங்கு இல்லையே !
எம் தாயே போற்றிஎம் ஞானவாகினியே போற்றி
எம் தூயாளே போற்றி
எம் அடைக்கலமே போற்றிஎம் அன்னையே போற்றி
எம் வெற்றி மாமரியே போற்றி
எம் பாதுகாவலியே போற்றி
எம் ஞானக்கொழுந்தே போற்றி
எம் ஆரோக்கியத்தாயே போற்றி
எம் சகலகலாவல்லியே போற்றி
எம் வெற்றி வாகையே போற்றி
எம் பேரின்பமே போற்றி
எம் முதல்வியே போற்றி
எம் பாசமலரே போற்றி
எம் நாமம் காப்பவளே போற்றி
எம் பூர்வீகமே போற்றி
எம் சாதனைகளின் இருப்பிடமே போற்றி
எம் அழியாப் புகழ் கொண்டவளே போற்றி
எம் தாயவளே போற்றி
எம் மாசில்லாத் தாயே போற்றி
எம் கலைக் காப்பகமே போற்றி
எம் காவல் அரணே போற்றி
எம் விம்பத்தின் மறு உருவமே போற்றி
எம் வேத நாயகியே போற்றி
எம் பரமனின் தாயே போற்றி
எம் உணவின் ஆதாரமே போற்றி
எம் சின்னம்மாளே போற்றி
எம் மாமரியே போற்றி
எம் வரவேற்பு மாதாவே போற்றி
எம் வாழ்த்தின் மணிமகுடமே போற்றி
எம் வாழ்க்கையின் ஆதாரமே போற்றி
எம் கிராமத்தின் பாதுகாவலியே போற்றி
எம் கன்னி மாமரியே போற்றி
எம் மீனவர்களின் விடிவெள்ளியே போற்றி
எம் பத்திமாளே போற்றி
எம் வாழ்வின் ஆதாரமே போற்றி 💐💐


அன்னை மாமரியே போற்றி !
வெற்றி மாமரியே போற்றி போற்றி !

அன்னை திரேசா! குருஸ் அம்புறோஸ்.


ஊரின் மாக்கியவல்லிகளுக்கு ....

ஊரின் மாக்கியவல்லிகளுக்கு .... by  John Belkan Fernando 
யார் இவர்கள்....
அம்மா, அப்பா, சகோதரர்கள், குடும்பம், பிள்ளைகள் இல்லாதவர்களா?
நண்பர்களுடன் சேர்த்து நேரத்தை செலவழிக்க வழியில்லாமல் உள்ளனரா?
பாடசாலையின் படிப்புச் சுமையை தாங்காமல் இங்கு வந்து குந்தியுள்ளனரா?
வீட்டில் ஏசிக் காற்று இருந்தும் வெயில் புழுக்கத்தில் ஓய்வெடுக்க வந்துள்ளனரா?
வீட்டுக்கு கறி மீன் வாங்கிக் குடுக்க நேரமில்லை, ஆனால் சோத்துப் பார்சல் வாங்கி குடுக்க வந்துள்ளனரா?
உழைக்க ஆயிரம் வழிகள் உள்ள உலகில் காசை இலவசமாக வாரி இறைக்க இவர்களுக்கு என்ன தலை விதியா?
ஒவ்வொருத்தர் வீடு வீடாக சென்று வாங்க வாங்க என்று கூப்பிட வேண்டும் என்பது இவர்களுக்கு தேவையா?
அதிகாரிகளின் ஆயிரம் கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்பது இவர்களுக்கு அவசியமா?
யார் இவர்கள்.......
வீட்டில் இறால் கறி இருந்தும் உப்புச் சப்பில்லா கடைச் சாப்பாட்டை ஏன் இவர்கள் சாப்பிட வேண்டும்!
பாடசாலையில் இல்ல விளையாட்டுப் போட்டிகள் இருந்தும் ஸ்டேடியமே கதி என்று ஏன் இவர்கள் இருக்க வேண்டும்!
பகட்டு ஆடைகள் ஆயிரம் இருக்க ஏன் இவர் புழுக்க ஆடையில் உலாவர வேண்டும்!
சந்தோசமாய் கழிக்க ஆயிரம் வழி இருந்தும், பயிற்சி பயிற்சி என்று ஏன் இவர்கள் அலைய வேண்டும்!
ஊரில் ஆயிரம் பணிகள் இருந்தும் ஒவ்வொரு நொடியும் மைதானமே கதி என ஏன் இவர்கள் கிடக்க வேண்டும்!
ஆம் இவை
எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் ஊர்ப் பற்று...
பேசாலை எனும் தாய் மண் பற்று.
இன்று ஊரின் உத்தம புத்திரர்கள் எனும் மார் தட்டுபவர்களே!
எங்களை விஞ்ஞ இங்கு யாரும் இல்லை என்று கூவும் சாணக்கியர்களே!
வதனப் புத்தகத்தையில் வாக்கியப் போர் தொடுக்கும் மாக்கிய வல்லிகளே!
ஊரின் இயல் அறியாது அரசின் இயலை வசைபாடும் வானவராயன்களே!
ஒற்றைக் கேள்வி தொடுக்கிறேன்,
மனச் சான்றில் நின்று பதில் கூறுங்கள்.
மன்னார் மாவட்டத்தில் எமது ஊரின் பெயரை நிலை நிறுத்த ஒரு கூட்டம் நாயாய் பாடுபடுவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
விளையாட்டில் கடந்த 15 வருடமாக மன்னார் பிரதேச சபை மட்டத்தில் அனைத்து துறைகளிலும் சம்பியன்ஸ் பட்டம் வென்று வரும் எம் ஊர் அணிக்கு நிரந்தரமாக ஒரு சீருடை இல்லை என்பது உங்களில் ஒருவருக்காகவது தெரியுமா?
அங்கே விளையாடும் ஒவ்வொரு அணிக்காகவும் ஒரு கிராமமமே திரண்டு வரும் போது மாபெரும் பேசாலை பதியில் இருந்து உற்சாகக் குரல் கொடுக்க ஒரு நாதியும் இல்லை என்பது கொஞ்சமாவது அறிவீரா?
விக்டறீஸ் என்ற பெயரை நிலை நாட்ட தன் சொந்த காசில் உணவுகளை வாங்கி கொடுத்து விட்டு தான் பட்டினியாய் கிடக்கும் எம் மண்ணில் மைந்தர்கள் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
ஒரு போட்டியில் பின்னடைவு என்றால் அழுது புலம்பும் எம் ஊர்ப் பற்றுள்ள அந்த குழந்தைகள் யாரென்றாவது உங்களுக்குத் தெரியுமா?
வீண் கதைகளில் நேரம் கழித்து, செல்பிக்களிலே வாழ்க்கையை தொலைத்து, கருவே இல்லாத கருத்தை கொண்டு கானலில் கனவுக் கோட்டை கட்டும் உம் கற்பனைகளை மூட்டை கட்டிக் கொள்ளுங்கள்!
ஊருக்காக எழுதாத உங்கள் பேனாக்கள், பேருக்காக உருகுவதைப் பார்க்கையில் தான் ஊரான் என்ற வகையில் உள்ளம் வலிக்கிறது.....

lørdag 3. februar 2018

வெண் பருதிச் சுவாலை

வெண் பருதிச் சுவாலை ...கவிதையின் காதலன்

மரக் கவண்கள் நடுவே 

வெண் பருதிச் சுவாலை ஒன்று 
மெல்லத் துளிர் விட, 
பக்க வாட்டின் மைக் குழம்பு வாயுக் 
கரைவாய் பரிதிக் கதிரில் கலவி கொள்ள 
ஒளியின் பிறப்பில், 
இரவின் முகை முகம் முகிழ்த்தெழுகிறது. 

ஒளிக்கீற்றின் மோகப் பார்வை 
கடலின் மடியை காமுறவே, 
வெண்பனிச் சாலை ஒன்றில் 
மீனினக் கூட்டமொன்று 
கும்மாள யாத்திரை செல்லும், 
தென்றல் இதமும் தென்னங் கதிரும் 
ஊடல் களத்தில் உலவும், 
மெய் ஞானக் கிறுக்கலை 
ஆழித் கரையினில் 
அழகிய நண்டுகள் வரையும்..

முற்றக் கூடலில் முத்துக் குழந்தைகள் 
முத்தக் குளியலில் திளைக்க, 
உணவுப் பானையின் உருண்டைச் சோறும் 
நிலவில் பாட்டியின் வடை சுடும் காட்சியும் 

குழந்தை நாவில் தவழும், 
கிணற்றுத் தடாகத் தடியில் 
ஆங்கே காதல் தவளை தம்பதி ஒன்று 
காமக் கழிப்பில் இளைப்பாறல் கொள்ளும், 
புது மோக அத்தியாயம் சொல்லும்.

நாதச் சுரங்கப் பொக்கிசப் புதையலை ,
நாரைக் கூட்டம் நாவிலிசைக்க, 
நாளிகை பார்த்து நாணல் காட்டில் 
நானம் பூண்ட ஓர் நன்னிலவின் காட்சி.
தேன்னிலவின் முத்தத்தை முன்பொழுதில் 
இரவல் பெற்றிட, தென்திசை விரைகிறான் 
தேய்பிறைக் காதலன் ஒருவன்.

மஞ்சளும் வெண்மையும் மெல்லக் கலப்புற, 
பொன்னிற தேகம் பூமணம் பூத்திட, 
பூவையின் இதழினில் மெல்லப் புதைகிறான் 
புன்கண்கள் மறந்த புரட்சிக் காதலன். 

உணர்ச்சியின் புனர்ச்சி விதியை 
உருத்தெரியாமல் சிதைத்த பூரிப்பு, 
மனிதச் சாதியின் அதி உயர் சினுங்கலாம் 
வெட்கத்தைச் சீண்டியதால் இவனும் புரட்சியாளனே!

மலை முகட்டின் நுனியோ, 
மதுக் கிண்ணக் குழியோ, 
சம விகிதச் சுடரொளி பரப்பி நின்றாலும், 
நிலவுக் காட்சியை உணரும் 
மாந்தர்தம் நிலமை என்னவோ வேறுபாட்டுக் கூறுகளே! 
வறுமை, தனிமை, இயலாமை, காதல்,கலவி, 
ஆடம்பரம், ஆனந்தம் என உணர்வின் 
பரிணாமம் மாறி மாறி ஆட்டிப் படைக்க 
இரவுக் குளத்தில் 
ஆனந்தக் குழியல் கொள்கிறாள் வெண்மதியாள்...

சில காதல் கதைகள்.. கவிதையின் காதலன் பேசாலை


torsdag 1. februar 2018

கடலை உழுவோம் வாரீர் !

கடலை உழுவோம் வாரீர் !            கவிதையின் காதலன்.. 
நெய்தல் களத்தில் புதைவோம் வாரீர் ! 
உயிரைப் பிடித்து உவர்நீர் கிழித்து 
படகை செலுத்தும் நேரம், 
ஆழ் கடலை அளந்த மீன்கள் கூட்டம் 
வலையில் தவழ்ந்து ஆடும்.

வானம் பார்த்து வாடைக்காற்றில் 
மீனைத் தேடி ஓடும் எம் தோழர் கூட்டம்
 வாழ்வைப் பார்த்து நாவாய் கூடப் பாடும், 
தொழில் நேர்மை வாழ்த்துக் கூறும்.

கடல் மை இருட்டில் கணவாய் மை முகத்தில், 
கடமைகள் உளத்தில் என உனக்கெதிர்
 பதங்களை தனிச் சமரில் வென்றாயே ! 
சாளைக்கும் சூடைக்கும் குடை பிடித்து 
வெயிலில் காய்ந்தாயே!
நின் தொழில் பக்தியே எம்மவர் சக்தி 

மலையளவு மாசாவிலும், 
உன் மனமதின் மாதா பக்தி கடலதை வென்றிடுதே! 
நண்டின் கொடுக்காய் நறுக்கிடும்
 இடர்களில் சங்கெனும் துணிவால் நொறுக்கி நீ நின்றாயே, 
பல சகிப்புகளும் கொண்டாயே''

தொழில் நேர சுழற்காற்றில் 
தெப்பக் கடலினில் நுட்பத் தேரோட்டியே! 
வழியில் மால் பிய்ந்தால், வலைபொத்தி 
விரல் தைத்து மீன் பிடிப்பாய், 
புயல் கடுங்குளிர் நடுவிலும் கரை பிடிப்பாய்!

இழுவைப் படகின் பலகை சிராய்ப்பு கையைக் கிழிக்க, 
மாரோடு வலை அணைத்து அசராது 
உடல் வளைத்து மடி வலை பிடிப்பாயே! 
குரல்வளை உவர்பினில் 
மடி வலை மணத்தினில் பொதிசோறு உண்பாயே, 
பலரைக் கரை சேர்த்து நின்றாயே!

விண்ணின் உடுக்களும் 
கடலின் வடுக்களும் உன் அனுபவத்தோழன்
கரையை அளந்து கடலைப் பிளந்து
 கணிப்புகள் செய்வாய், நொடி தரித்திடும் 
வேளையில் சரித்திரம் வெல்வாய் !

கவிதையின் காதலன்..